வள்ளலார் குறித்த ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு தலைவர்கள் எதிர்ப்பு

வள்ளலார் குறித்த ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வடலூரில் நடைபெற்ற, வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, “வள்ளலார் சனாதனத்தின் உச்ச நட்சத்திரம்” என்று கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

அமைச்சர் தங்கம் தென்னரசு: சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்துக்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து, சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியைப் புகுத்தும் முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார். மத்திய அரசின் தனிப் பெருங்கருணை ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்று விட்டதாலேயே, ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

தி. தலைவர் கி.வீரமணி: ஆளுநர் திட்டமிட்டே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு சவால் விடுவதுபோல, தினமும் அபத்தக் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். வடலூர் வள்ளலார் சனாதனத்தின் முழுக் கருத்தாளர் என்ற பொய் புரட்டை முன்னிறுத்துகிறார் ஆளுநர்.ஆர்.என்.ரவியின் பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

விசிக தலைவர் திருமாவளவன்: ஆளுநர் திட்டமிட்டுப் பேசி வருகிறார். வள்ளலாரின் கொள்கைக்கு நேரெதிராக அவரைச் சித்தரிக்கிறார். வள்ளலார் சாதி சமயம் மீது நம்பிக்கை இல்லாதவர். இதிகாசம், புராணம், சாஸ்திரத்தைக் குப்பை என்றவர். உருவ வழிபாடு கூடாது என்றவர். அவரை இழிவுபடுத்தும் வகையில் ஆளுநர் பேசியிருப்பது வேதனையளிக்கிறது. வள்ளலாரைப் பின்பற்றுவோர் இதை வேடிக்கைப் பார்க்கக் கூடாது. கடுமையாக எதிர்க்க வேண்டும்.