ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’: பிப். 9ஆம் தேதி வெளியாகிறது!
நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம், வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது.
இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், லைகா நிறுவனத்தின் ‘மிஷன் சாப்டர் 1’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், அதே நிறுவனம் தயாரித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற பிப்ரவரி 9-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.