“லால் சலாம்’ படம் மக்கள் சார்ந்த ஒரு சிறிய அரசியலை பேசுகிறது!” – இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

”லால் சலாம்’ படம் அரசியல் பேசுகிறதா என்றால், ஆம், படம் மக்கள் சார்ந்த ஒரு சிறிய அரசியலைப் பேசுகிறது. அரசியல் எல்லாவற்றிலும் இருக்கிறது. அது நம் பார்வையைப் பொறுத்து மாறுகிறது” என்று ‘லால் சலாம்’ படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா – செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும், விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடிக்க, ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை மற்றும் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

0a1e

இந்நிகழ்வில்

நடிகர் தம்பி ராமையா பேசும்போது,

”தமிழ்நாட்டிலும் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம். ஆனால் மனித மனங்கள் ஒன்றாக இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் கதைக்கு கிரிக்கெட்டை மையப்படுத்தி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். குடும்பத்துடன் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கான உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நன்றி” என்றார்.

நடிகர் செந்தில் பேசும்போது,

”அருமையான கதையை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கி உள்ளார். அவர் கதையை கூறும்பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்த்து. படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது,

“படத்தில் ஏதாவது பிரச்சனை இருக்குமா என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சினை இருக்கக் கூடாது என்பது தான் படத்தின் கரு. அதை பார்த்துவிட்டு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் கொடுக்கும் விமர்சனம் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கும். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும், தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் மூணாறு ரமேஷ் பேசும்போது,

”சிறுவயதில் இருந்து நான் ஒரு ரஜினி ரசிகன். அவருடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன். அவருடைய மகளின் இயக்கத்தில் நடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம். எங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை நிரோஷா பேசும்போது,

”ரஜினிகாந்துடன் நடிக்க ஏற்கனவே வாய்ப்பு வந்த்து. கடைசி நேரத்தில் அது நடைபெறாமல் போய்விட்டது. அதனால் எனது திரை வாழ்க்கை முழுமை பெறாமல் இருந்த்து. இந்த திரைப்படம் மூலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக்கு நல்லதொரு வாய்ப்பை கொடுத்துள்ளார். அவர் இயக்குனராக தனக்கு என்ன தேவையோ அதை மிகவும் தெளிவுடன் நடிகர்களிடம் இருந்து சிறப்பான நடிப்பை பெற்றுக் கொள்வார்” என்றார்.

 நடிகர் தங்கதுரை பேசும்போது,

”முதல்முறையாக ரஜினிகாந்துடன் நடிப்பது  மிகவும் பெருமையாக இருக்கிறது. நகைச்சுவை  கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல், இந்த படத்தில் குணச்சித்திரத்துடன் கூடிய நகைச்சுவை கதாபாத்திரமாக கொடுத்துள்ளார்கள். ஒரு திரை பல்கலைக்கழகத்தில் நுழைந்து வந்த அனுபவத்தை இந்த படம் கொடுத்துள்ளது. அந்த அளவிற்கு அத்தனை கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளேன்” என்றார்.

நடிகர் திவாகர் பேசும்போது,

”இந்தப் படத்தில் எனக்கு சிறு கதாபாத்திரம். இருந்தாலும், ரஜினிகாந்த் போன்ற நல்ல குணத்தோடும் பண்போடும் எனக்கு இந்த வாய்ப்பை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழங்கியுள்ளார். இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு நண்பர் தங்கதுரை ஒரு காரணமாக இருந்தார். ரஜினிகாந்துடன் நடித்த தருணம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்த்து” என்றார்.

நடிகர் விக்ராந்த் பேசும்போது,

“எனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது; போதும் என்று இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு வந்த்து. அப்பொழுது தான் எனக்கு இன்னும் திரைப்பயணம் இருக்கிறது, இது கடவுள் கொடுத்த பரிசு என்று மகிழ்ச்சி அடைந்தேன்.. இந்த வாய்ப்பு வழங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்துடன் இந்த படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடன் நடித்த மூத்த கலைஞர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் எனக்கு நடிப்பு தொடர்பாக நிறைய ஆலோசனை கொடுத்தார். நல்ல ஊக்கமும் அளித்தார்” என்றார்.

நடிகர் விஷ்ணு விஷால் பேசும்போது,

”15 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த தருணத்தில் இந்த படம் எனக்கு ஒரு பரிசாக கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்துடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும்பொழுது, அவர் நடிக்கும் படத்தில், அவருக்குக் கீழ் ஒரு கதையின் நாயகனாக நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கால கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்கிறது. ஒரு இயக்குனராக இந்த கருத்தை படமாக்குவதும், அப்படத்தில் ரஜினிகாந்த் போன்ற மிகப் பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயமாகும். அதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திறம்பட செய்து முடித்துள்ளார். இதில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே பேசும்போது,

”லால் சலாம் திரைப்பட வாய்ப்பு எனக்கு ஒரு மிகப் பெரிய வாய்ப்பாகும். 90-களின் காலகட்ட்த்தில் திரைக்கதை அமைந்து இருப்பதால், அதற்கு தகுந்தவாறு ஆடைகளை வடிவமைப்பது எனக்கு ஒரு சவால் நிறைந்த பணியாக இருந்த்து. கூடவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் எனக்கு அளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்போது,

”ஒரு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழா, அதையொட்டி நடக்கும் கிரிக்கெட் போட்டி, அந்த போட்டியில் நடக்கும் பிரச்சனைகள் சார்ந்து இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதை இந்த படம் பேசுகிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் கதாசிரியருமான விஷ்ணு ரங்கசாமி என்னிடம் இரண்டு கதைகள் கூறினார். அதில் ஒன்று தான் லால் சலாம்.

இந்தப் படம் அரசியல் பேசுகிறதா என்றால், ஆம், படம் மக்கள் சார்ந்த ஒரு சிறிய அரசியலைப் பேசுகிறது. அரசியல் எல்லாவற்றிலும் இருக்கிறது. அது நம் பார்வையைப் பொறுத்து மாறுகிறது.

படத்தில் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும், என்னுடைய சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், பத்திரிக்கை  மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.