லால் சலாம் – விமர்சனம்

நடிப்பு: ரஜினிகாந்த் (சிறப்புத் தோற்றம்), கபில்தேவ் (சிறப்புத் தோற்றம்), விஷ்ணு விஷால், விக்ராந்த், அனந்திகா சனில்குமார், நிரோஷா, ஜீவிதா, தங்கதுரை, விவேக் பிரசன்னா, தன்யா பாலகிருஷ்ணன், தம்பி ராமையா, செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன், மூணார் ரமேஷ் மற்றும் பலர்
இயக்கம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஒளிப்பதிவு: விஷ்ணு ரெங்கசாமி
படத்தொகுப்பு: பிரவீன் பாஸ்கர்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
தயாரிப்பு: ’லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன்
தமிழ்நாடு வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அஹமத்
’லால் சலாம்’ என்ற உருது முழக்கத்துக்கு ஆங்கிலத்தில் ’ரெட் சல்யூட்’ என்றும், தமிழில் ‘செவ்வணக்கம்’ என்றும் பொருள். பொதுவுடைமையாளர்கள் கரம் உயர்த்தி ஓங்கி எழுப்பும் இந்த முழக்கத்தை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தான் இயக்கும் திரைப்படத்துக்கு தலைப்பாக வைத்தபோதே தமிழ்த் திரையுலக வட்டாரத்திலும், இடதுசாரிகள் மத்தியிலும் ஆச்சரியமும், ‘படம் எது பற்றியதாக இருக்கும்?” என்ற ஆவலும் பிறந்துவிட்டன. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ரஜினிகாந்தும், பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள்; ’லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் இதை தயாரிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது. சமீபத்தில் நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ரஜினிகாந்த் போய் வந்தபின் வெளியான இப்படத்தின் டிரைலரில் அவர், “மதத்தையும், நம்பிக்கையையும் மனசுல வை; மனித நேயத்த அதுக்கு மேல வை; அதுதான் நம் நாட்டின் அடையாளம்” என்று மத நல்லிணக்க முற்போக்கு வசனம் பேசியது, நிறைய வியப்பையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டன. இந்நிலையில், தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படம் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
வட தமிழகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முரார்பாத் என்றொரு ஊர். இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் மதபேதம் பார்க்காமல், ஒரு தாய் மக்கள் போல மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். தேர்தல் வந்தால் இரு மதத்தினரும் கூடிப் பேசி ஏகமனதாய் முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாய் ஒரே கட்சிக்கு வாக்களிப்பது இவர்களது வாடிக்கை. இந்த ஒற்றுமையால் தோற்றுக்கொண்டே இருக்கும் ஒரு கட்சியின் அரசியல்வாதிகள், தங்களது சுயநல அரசியல் ஆதாயத்துக்காக, இம்மக்களை மத ரீதியில் பிரித்து மோதவிட்டு, ஒரு மதத்தினரை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் தங்களது கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறார்கள்.
அந்த ஊரிலிருந்து இளம் வயதில் பிழைப்புத் தேடி மும்பை சென்று, அங்கு டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரியின் பெரிய தொழிலதிபராகவும், பெரிய தாதாவாகவும் திகழ்பவர் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் பெரியவர் (ரஜினிகாந்த்). மத நல்லிணக்கத்துக்கு முன்மாதிரியாக விளங்குபவர். அவரது மகன் சம்சுதீனுக்கும் (விக்ராந்த்), மொய்தீன் பாயின் நெருங்கிய முரார்பாத் இந்து நண்பர் மாணிக்கத்தின் (லிவிங்ஸ்டன்) மகன் திருநாவுக்கரசுக்கும் (விஷ்ணு விஷால்) இடையே சிறுவயது முதலே பகை இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், முரார்பாத்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது, முழுக்க முஸ்லிம்கள் இடம்பெற்றிருக்கும் சம்சுதீனின் ’த்ரி ஸ்டார்’ அணியினருக்கும், முழுக்க இந்துக்கள் அங்கம் வகிக்கும் திருநாவுக்கரசுவின் ’எம்.சி.சி’ அணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறுகிறது. அப்போது சம்சுதீனின் வலது கையை வெட்டி பலத்த ரத்தக்காயம் ஏற்படுத்திவிடுகிறார் திருநாவுக்கரசு. இந்த மோதல், சுயநல அரசியல்வாதிகளின் சூழ்ச்சி காரணமாக பெரிய மதக் கலவரமாக வெடித்து, வெட்டு – குத்து, தீ வைப்பு என விஸ்வரூபம் எடுத்து, ஊரில் இதுநாள் வரை கட்டிக்காத்து வந்த இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு உலை வைக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து வெற்றிகளைக் குவித்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற பெருங்கனவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவிடம் பயிற்சியெல்லாம் எடுத்திருந்த சம்சுதீனின் தலையெழுத்தை, திருநாவுக்கரசு ஏற்படுத்திய பலத்த வெட்டுக்காயம் மாற்றிவிடுகிறது. அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, மருத்துவர்களால் அவரது வலது கை துண்டிக்கப்படுகிறது. வலது கையை இழந்த சம்சுதீனின் பெருங்கனவு தகர்ந்து, வாழ்க்கை சூனியமாகிறது. துடித்துப் போகிறார் சம்சுதீனின் தந்தை மொய்தீன் பாய்.
இதன்பின் மொய்தீன் பாய் என்ன செய்தார்? தன் மகன் ஊனமடையக் காரணமான திருநாவுக்கரசைப் பழி வாங்கினாரா? அல்லது எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமான கேடுகெட்ட அரசியல்வாதிகள் பக்கம் தன் கோபப் பார்வையைத் திருப்பினாரா? அந்த ஊரில் மீண்டும் மத நல்லிணக்கம் ஏற்பட்டு, இந்து – முஸ்லிம் ஒற்றுமை நிலை நாட்டப்பட்டதா? என்பன போன்ற சிக்கலான கேள்விகளுக்கு அட்டகாசமான திருப்பங்களுடன் பொருத்தமாக விடை அளிக்கிறது ‘லால் சலாம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
பெரிய தொழிலதிபராக, பெரிய தாதாவாக இருந்தாலும் மத நல்லிணக்கத்துக்கு முன்மாதிரியாகத் திகழும் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் பெரியவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவர் கௌரவ வேடத்தில் தோன்றுவதாக படக்குழு அறிவித்திருந்த போதிலும், அதுபோல் இல்லாமல், ஒரு முதன்மைக் கதாபாத்திரமாக ஏறக்குறைய படம் முழுக்க வருகிறார். படம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அதிக மேக்கப் இல்லாமல், எளிமையான முஸ்லிம் கெட்டப்பில் தோற்றம் தருகிறார். ரஜினி மாஸாக எண்ட்ரி ஆனவுடனே படம் நிமிர்கிறது. பார்வையாளர்களும் தான். வெறுப்பு அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்த முயலும் இந்துமத வெறியர்களுக்கு – குறிப்பாக, இந்துத்துவ வெறியர்களுக்கு – எதிராக அவர் பேசும் கூர்மையான, மத நல்லிணக்க, சாட்டையடி வசனங்களில் அனல் பறக்கிறது. திரையரங்கில் அப்ளாஸை அள்ளுகிறது. இந்த படத்தின் மூலம் மக்களுக்கு சொல்ல நினைத்த உயர்ந்த கருத்துகளையெல்லாம், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினியின் மொய்தீன் பாய் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருப்பது நல்ல உத்தி. அதை பக்குவமாக, ஆழப் பதியும் வண்ணம், சிறப்பாகவே செய்திருக்கிறார் ரஜினி. மருத்துவமனையில் இருக்கும் தன் மகனை நினைத்து அவர், “அல்லா…” என கதறி அழும் காட்சியில் நெகிழச் செய்து விடுகிறார். சண்டைக்காட்சியிலும் பட்டையைக் கிளப்புகிறார்.
மொய்தீன் பாயின் மகன் சம்சுதீன் கதாபாத்திரத்தில் விக்ராந்தும், அவரது போட்டியாளராக / பகையாளியாக திரு என்ற திருநாவுக்கரசு கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் அருமையாக கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள் என்பதால் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இருவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை மிகவும் லாவகமாக கையாண்டிருக்கிறார்கள். மேலும், உருக்கமான எமோஷனல் காட்சிகளிலும் போட்டி போட்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
விஷ்ணு விஷாலின் காதலி நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனந்திகா சனில்குமாருக்கும், சமூக வலைத்தள சர்ச்சையில் அடிபட்ட நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கும் நிறைய காட்சிகள் இல்லை என்றாலும், கொடுத்த வேலையை இருவரும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.
மொய்தீன் பாயின் மனைவியாக வரும் நிரோஷா, விஷ்ணு விஷாலின் அம்மாவாக வரும் ஜீவிதா, மற்றும் தம்பி ராமையா, செந்தில், விவேக் பிரசன்னா, மூணாறு ரமேஷ், தங்கதுரை, கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.
தனி நபரின் விவகாரமாக இருக்க வேண்டிய மதத்தை பொது அரசியலில் புகுத்தி, மத பேதங்களையும், வெறுப்பையும் தூண்டிவிட்டு, மக்களை பிளவுபடுத்தி, மதக் கலவரங்களில் குளிர் காயும் அயோக்கிய அரசியல்வாதிகளை செருப்பாலடித்து நல்ல புத்தி புகட்டும் வகையில் இப்படத்தை படைத்திருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள். இன்று நாடு போகிற அபாயகரமான போக்கில், அவர் முற்போக்கான நியாயத்தின் பக்கம் நின்று எச்சரிக்கிறார் என்பது போற்றுதலுக்கு உரியது. அற்புதமான மத நல்லிணக்கக் கருத்துகளை பிரசாரமாக இல்லாமல், காட்சிகளாக, வசனங்களாக கலையம்சத்துடன் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, இந்துமத வெறியர்கள், அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி, இந்து – முஸ்லிம் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் தகர்த்தெறிந்து, நாட்டை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிட்டார்கள். இது நடந்த சில தினங்களில் – 1993ஆம் ஆண்டு – ‘லால் சலாம்’ படக்கதை நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டிருப்பது மிகவும் நுணுக்கமாக கவனிக்க வேண்டிய அம்சம். இது போல் படத்திலிருக்கும் பல நுணுக்கமான அம்சங்கள் இந்த படத்தை தனித்துவமானதாக உயர்த்திக் காட்டுகின்றன. இந்த படத்தை இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளிலும் ‘டப்’ செய்து வெளியிட்டால் புண்ணியமாக இருக்கும்! நாடும் உருப்படும்!
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி கிரிக்கெட் காட்சிகளையும், கோயில் திருவிழாக் காட்சிகளையும், அதிரடி சண்டைக் காட்சிகளையும் மெய் மறந்து ரசிக்கும் விதத்தில் படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரவின் பாஸ்கர் தன் பணியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலிசையும், பின்னணி இசையும், இயக்குநரின் கதை சொல்லலுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
’லால் சலாம்’ – அவசியம் குடும்பத்துடன் கூட்டமாகப் போய் பாருங்கள்! மொய்தீன் பாய்க்கு லால் சலாம் சொல்லி, உற்சாகமாய் கொண்டாடுங்கள்!