லஷ்மி – விமர்சனம்
‘படம் தொடங்கும்போது சாதாரண நபராக இருக்கும் ஒரு கதாபாத்திரம், தன் திறமையாலும், விடாமுயற்சியாலும் சாதனை புரிந்து, படம் முடியும்போது புகழின் உச்சத்தை அடைகிறார்’ என்பது ஒரு டெம்ப்ளேட். இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி, விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், பாடகர்கள், டான்சர்கள் போன்றோரின் சாதனைகளைச் சொல்லும் திரைப்படங்கள் எக்கச்சக்கமாக வெளிவந்திருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது வ ந்திருக்கிறது ‘லஷ்மி’.
வங்கி ஊழியரான ஐஸ்வர்யா ராஜேஷின் மகள் தித்யா (படத்தில் இவர் பெயர் தான் லஷ்மி). அம்மாவுக்கு இசை, நடனம் என்றால் அறவே பிடிக்காது. மகள் லஷ்மிக்கோ பேச்சு, மூச்சு, அசைவு, ஆர்வம், முயற்சி, பயிற்சி எல்லாமே நடனம் தான். இந்திய அளவில் மாபெரும் நடனப் போட்டி நடக்க இருப்பதை டிவி மூலம் அறிந்துகொள்ளும் லஷ்மி, அதில் கலந்துகொள்ளும் ஆவலில் சென்னை டான்ஸ் அகாடமியில் சேர நினைக்கிறார். பெற்றோருடன் வந்தால் தான் அனுமதி என்று அங்கு நிபந்தனை விதிக்கப்படுகிறது. தனக்கு ஏற்கெனவே அறிமுகமான காபி ஷாப் உரிமையாளர் பிரபுதேவாவிடம் தன் ஆசையை சொல்லி, அப்பாவாக நடிக்க வைத்து டான்ஸ் அகாடமியில் சேர்கிறார். ஆனால் அவருக்கு போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கலங்கி நிற்கும் லஷ்மியை தேற்றும் பிரபு தேவா, அவரை போட்டிக்கு தேர்வு செய்யப் பரிந்துரைக்கிறார். பிரபுதேவா யார்? அவர் சொன்னவுடன் லஷ்மியை எப்படி தேர்வு செய்கிறார்கள்? இதனால் பிரபுதேவா எதிர்கொள்ளும் சிக்கல் என்ன? நடனத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் வெறுப்பது ஏன்? அதையும் மீறி லஷ்மி நடனம் ஆட விரும்புவது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
நடனத்தை மையமாகக் கொண்டு ஒரு முழுப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். அதில் சில தருணங்களை உணர்வுபூர்வமாக்கி நெகிழவும் வைக்கிறார். லஷ்மியாக நடிக்கும் தித்யா, மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். துறுதுறுப்பு, வளரிளம் பருவத்து சேட்டைகள், எனர்ஜி கொப்பளிக்கும் நடனம் என வெகுவாக கவர்கிறார். பக்கத் துணையாய் நிற்கிறார் பிரபுதேவா.
ஆனால் காட்சிப்படுத்துதலில் இருந்த தெளிவு, கதையிலும், திரைக்கதையிலும் இல்லாதது இயக்குநருக்கு பெரும் சறுக்கல். மேலோட்டமான கதை, சுவாரசியம் இல்லாத நகர்வுகள் என தொடக்கம் முதல் இறுதிவரை இனம்புரியாத வெறுமை.
வழக்கமாக, நடனத்தைத் தாண்டியும் பிரபுதேவாவிடம் ஒரு துறுதுறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த உடல்மொழி நமக்குள்ளும் பரவி உற்சாகப்படுத்தும். இந்தக் கதையின் தாக்கமோ, என்னமோ.. அப்படி அவரிடம் இருந்து எதுவும் வரவில்லை.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. கிடைத்த இடங்களில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறார். கருணாகரனை வீணடித்துள்ளனர். கோவை சரளாவின் கதாபாத்திரம் சரியாகக் கட்டமைக்கப்படவில்லை.
சிறுவர் – சிறுமியரின் அனைத்து நடனங்களும் சூப்பர்.
சென்னை, மும்பையின் அழகை கண் களுக்கு கடத்துகிறது நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு. சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் உயிரோட்டமாக இருக்கிறது. ஆன்டனியின் எடிட்டிங் நேர்த்தி.
‘லஷ்மி’ – கதையை எதிர்பார்க்காமல் போய், சிறுவர், சிறுமியரின் நடனத்தை ரசித்துவிட்டு வரலாம்!