“விஜய் சேதுபதி என்னை கடத்துவார்”: ‘றெக்க’ பற்றி லட்சுமிமேனன்!
விஜய்சேதுபதி நடிப்பில், ரத்தின சிவா இயக்கத்தில், காமன்மேன் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி, வருகிற 7ஆம் தேதி திரைக்கு வரும் படம் ‘றெக்க’. விஜய்சேதுபதியின் முதல் கமர்ஷியல் படமான இதில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்கிறார்.
‘றெக்க’ படத்தில் நடித்தது பற்றி லட்சுமி மேனன் ஒரு பேட்டியில் கூறுகையில், “ஒரு படம் போல இல்லாமல் ஜாலியான ஒரு பயணமாக இருந்தது ‘றெக்க’. விஜய் சேதுபதி என்னைக் கடத்துவார். எங்கள் பயணத்தின்போது அவர் மீது எனக்கு காதல் வரும். அது எப்படி என்றால்… இதற்கு மேல் கதையைச் சொன்னால் அவ்வளவுதான்’’ என்று கூறியிருக்கிறார் சிரித்துக்கொண்டே.
அவரை பற்றி தாறுமாறாக கிசுகிசு வருவது பற்றி கேட்டதற்கு, “அது போன்ற செய்திகள் வராமல் இருந்தால் தான் வருத்தப்படுவேன். கிசுகிசு செய்திகள் இருந்தால் மட்டுமே நாம் தொடர்ச்சியாக திரையுலகில் இருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. ‘இவரைப் பற்றி எழுதினால் மக்கள் படிப்பார்கள்’ என்று தானே எழுதுகிறார்கள். அதனால் கிசுகிசு செய்திகளை ரொம்ப ரசிப்பேன்” என்று பதில் அளித்துள்ளார்.
தைரியமாக தனியே வெளியே போய் வருவது பற்றி கேட்டதற்கு, “நான் தனியாக வெளியே செல்லும்போது வீட்டில் ரொம்ப பயப்படுவார்கள். அவர்களது பேச்சைக் கேட்காமல் சென்றுவிடுவேன். வீடு திரும்பிய பிறகு, ‘பத்திரமாக வந்துவிட்டேன் பார்’ என்பேன். ‘கவனமாக இரு. இது இந்தியா’ என்பார்கள். அதை மாற்ற வேண்டும். இளைய சமுதாயம் தனியாக வெளியே போகவில்லை என்றால் வேறு யார் போவார்கள்? அனைவரும் பயந்து வீட்டுக்குள் உட்கார்ந்தால் மாற்றம் எப்படி வரும்? பெண்கள் பயந்துகொண்டு, வீட்டிலேயே அடங்கிக் கிடக்கக் கூடாது. தைரியத்தோடு வெளியே வர வேண்டும். அப்படி இருந்தால்தான், வேலைக்குச் சென்று சொந்தக் காலில் நிற்கும்போது, நம்மை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன்.