“அருண் விஜய் வெற்றி மகுடம் சூடுவார்”: ஜெயம் ரவி நம்பிக்கை!

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும், நடிகர் ஜெயம் ரவியும் தலைமை வகித்த இந்த விழாவில், இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், மகிழ்திருமேனி, சரவணன் (எங்கேயும் எப்போதும்), இயக்குனர் – நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகர்கள் பரத், உதய், ஸ்ரீகாந்த், மகேந்திரன், ரியாஸ் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

‘குற்றம் 23’ படத்தின் கதாநாயகன் அருண் விஜய், இயக்குனர் அறிவழகன், நடிகர் விஜயகுமார், ‘குற்றம் 23’ படத்தின் தயாரிப்பாளரும், ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் உரிமையாளருமான இந்தெர் குமார், கதாநாயகி மஹிமா நம்பியார், மற்றும் அபிநயா, வம்சி கிருஷ்ணா, அரவிந் ஆகாஷ், அமித் பார்கவ், சுஜா வருணி, மிஷா கோஷல், சஞ்சய் அர்சாணி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா, ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என ஒட்டுமொத்த குற்றம் 23 படக்குழுவினரும் இந்த விழாவுக்கு வந்திருந்தார்கள்.

k8

விழாவில் பேசிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், “மனதில் வரைந்து வைத்திருக்கும் சித்திரத்தை அழகாக திரையில் பிரதிபலிக்கும் திறமை படைத்த இயக்குனர் அறிவழகன். அவருடைய காட்சிகளுக்கு நான் எப்போதுமே ரசிகன். கலைக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணிக்கும் அருண் விஜய் மற்றும் அறிவழகனின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த ‘குற்றம் 23’ திரைப்படம் மாபெரும் வெற்றியை தழுவ வாழ்த்துகிறேன்” என்றார்.

“ஒரு கதாநாயகனாக வெற்றி மகுடத்தை  இந்த ‘குற்றம் 23’ படத்தின் மூலம் அருண் விஜய் சூடுவார்  என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார் ஜெயம் ரவி.

“நான் பார்த்து வியப்படைந்த நடிகர்களில் என்னுடைய விக்டரும் (அருண் விஜய்) ஒருவர். எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட தருணத்திலும் நடிக்கக்கூடிய ஒரு நடிகர் அருண் விஜய். ஓடும் ரயிலில் ஏற வேண்டும் என்று சொன்னால் ஏறுவார், கடலுக்குள் குதிக்க வேண்டும் என்று சொன்னாலும்கூட குதித்து விடுவார். இப்படி நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு கலைஞன் அருண் விஜய். அதேபோல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்குவதில் திறமை படைத்தவர் இயக்குனர் அறிவழகன். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து, எனக்கு பிடித்தமான போலீஸ் கதையை மையமாக கொண்டு  ‘குற்றம் 23’ படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ‘குற்றம் 23’ படம் உருவாக காரணமாக இருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்”என்றார் கெளதம் வாசுதேவ் மேனன்.