குஷி – விமர்சனம்
நடிப்பு: விஜய் தேவரகொண்டா, சமந்தா ரூத் பிரபு, சச்சின் கெடேகர், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, லட்சுமி, ஜெயராம், ரோகிணி மற்றும் பலர்
இயக்கம்: சிவ நிர்வானா
ஒளிப்பதிவு: முரளி ஜி
படத்தொகுப்பு: பிரவீன் புடி
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
வினியோகம்: ஸ்ரீலட்சுமி மூவிஸ் மூலம் லைக்கா புரொடக்சன்ஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)
காதல் கதைகள் என்றும் பசுமையானவை. எல்லோருக்கும் பிடித்தமானவை. அதனால் தான் உலகின் எல்லா மொழிகளிலும், எல்லா கலைவடிவங்களிலும் காதல் கதைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. திரைப்படங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மேலும், வறட்டுத்தனமான விஷயங்களைக் கூட காதல் கதை என்ற காகிதத்துக்குள் வைத்து சுருட்டி, எல்லோரும் ரசிக்கக் கூடிய அழகிய பொட்டலமாகக் கொடுத்துவிட முடியும். அப்படிப்பட்ட அழகிய பொட்டலம் தான் ‘குஷி’ திரைப்படம். ‘நாயகன் – நாயகி காதல்’ என்ற வடிவத்துக்குள் ’நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் இடையில் மோதல்’ என்ற உள்ளடக்கத்தை வைத்து ‘குஷி’ என்ற திரைவிருந்தை பரிமாறியிருக்கிறது படக்குழு.
கதை என்னவென்றால், நாயகன் விப்லவுக்கு (விஜய் தேவரகொண்டாவுக்கு) பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. இயக்குனர் மணிரத்னம் ரசிகரான விப்லவ், எழில் கொஞ்சும் இயற்கை அழகை ரசிக்கும் அனுபவத்துக்காக, வேண்டி விரும்பிக் கேட்டு பணியிட மாற்றம் வாங்கி, காஷ்மீருக்குச் செல்கிறார். அங்கு நாயகியை (சமந்தாவை) கண்டதும் காதலில் விழுகிறார்.
ஆனால், தானொரு முஸ்லிம் என்றும், தன் பெயர் பேகம் என்றும், பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பதாகவும் கூறி, நாயகனின் காதலைத் தவிர்க்க முயல்கிறார் நாயகி. ஆனாலும், பேகம்… பேகம்… என்று உருகியுருகி பின்தொடர்ந்துகொண்டே இருக்கும் விப்லவ் மீது ஒரு கட்டத்தில் நாயகிக்கும் காதல் வர, உண்மையில் தன் பெயர் ஆராத்யா என்றும், சொந்த ஊர் திருச்செந்தூர் என்றும் கூறி, நாயகனின் காதலை ஏற்கிறார்.
இவர்கள் இருவரும் காதலில் இணைந்தபோதிலும், இவர்களின் குடும்பங்களின் பின்னணிகள் இருவேறு எதிரெதிர் துருவங்கள் போல் இருக்கின்றன. நாயகன் விப்லவின் அப்பா லெனின் சத்தியம் (சச்சின் கெடேகர்) கறாரான நாத்திகவாதி. அறிவியல்பூர்வமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்பவர். அவருக்கு நேர்மாறாக, நாயகி ஆராத்யாவின் அப்பா சத்ரங்கம் ஸ்ரீனிவாச ராவ் (முரளி சர்மா) பிடிவாதமான ஆத்திகவாதி. பிராமணர். சனாதன (வைதீக) மதச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். ஆன்மிக சொற்பொழிவாளர்.
கொள்கை வேறுபாடு காரணமாக விப்லவ் – ஆராத்யா காதலை முதலில் இருவரது அப்பாக்களும் ஏற்க மறுத்தாலும், பின்னர் பிள்ளைகளின் விருப்பத்திற்காக இறங்கி வந்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார்கள். எனினும், இருவரின் ஜாதகப்படி தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரமாக விப்லவ் தன் அப்பா லெனின் சத்தியத்தோடு சேர்ந்து யாகபூஜை செய்தால் மட்டுமே தோஷம் நீங்கி அவர்களது மண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றும் ஆராத்யாவின் அப்பா சத்ரங்கம் ஸ்ரீனிவாச ராவ் கூறுகிறார். யாகபூஜைக்கு உடன்பட மறுக்கும் லெனின் சத்யம், அப்படியொரு திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் விப்லவும், ஆராத்யாவும் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமலே வீட்டைவிட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் விப்லவ் – ஆராத்யா தம்பதியர் வாழ்க்கையில் குழந்தையின்மை பிரச்சனை ஆகிறது. ஆராத்யா கருவுற்றாலும் அது தங்காமல் போகிறது. இதற்கு தனது அப்பா சொன்ன ஜாதக தோஷம் தான் காரணம் என்று ஆராத்யா சொல்ல, விப்லவ் அதை ஏற்க மறுக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு, அது பெரிதாகி, பிரிந்துவிடுகிறார்கள்.
பரிகாரத்துக்கான யாகபூஜை நடந்ததா? பிரிந்த விப்லவும், ஆராத்யாவும் மீண்டும் இணைந்தார்களா? என்பது ‘குஷி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ்.
நாயகன் விப்லவ் கதாபாத்திரத்தில் வரும் விஜய் தேவரகொண்டா படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். ‘லவ் பாய்’, ’சாக்லேட் பாய்’ இமேஜுக்கு மிகவும் பொருத்தமாக, அழகாக, கவர்ச்சியாக இருக்கிறார். நாயகியை காதலியாக ரசிப்பது, அவர் மனைவியான பின் அவருடைய செயல்களால் அதிருப்தி அடைவது, மனைவி பிரிந்தபின் ஏங்கித் தவிப்பது என அனைத்து உணர்ச்சிகளையும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி ஆராத்யாவாக வரும் சமந்தா, காட்சிக்குக் காட்சி வித்தியாசமான தோற்றம் காட்டுகிறார். சில காட்சிகளில் காதலிக்கத் தூண்டும் அழகுப் பதுமையாக வசீகரிக்கிறார். சில காட்சிகளில் சற்று வீங்கிய முகம், சோர்வு ஆகியவற்றுடன் மந்தமாக காட்சியளிக்கிறார். (இதற்கு அவரது உடல்நலக் குறைவும், அவர் எடுத்துக்கொள்ளும் சிகிச்சையும் காரணமா? தெரியவில்லை.) எனினும் தனது அசாத்திய நடிப்புத் திறமை மூலம் இக்குறைகளை மறக்கச் செய்துவிடுகிறார். வழக்கம் போல் காதலுணர்வை பார்வையாலே கடத்தி, பார்வையாளர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார்.
நாயகனின் அப்பாவாகவும், அறிவியல் மீது நம்பிக்கை வைத்து மதச்சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் புறந்தள்ளும் நாத்திகராகவும் லெனின் சத்தியம் என்ற கதாபாத்திரத்தில் வரும் சச்சின் கெடேகரும், நாயகியின் அப்பாவாகவும், ஆத்திகத்திலும், சனாதன தர்மத்திலும் நம்பிக்கை கொண்ட ஆன்மீக சொற்பொழிவாளராகவும் சத்ரங்க சீனிவாச ராவ் கதாபாத்திரத்தில் வரும் முரளி சர்மாவும் அளவாக முரண்பட்டு, இயல்பாக நடித்திருப்பது சிறப்பு.
பல படங்களில் பார்த்த அதே அம்மாவாக – இதில் நாயகனின் அம்மாவாக – வரும் சரண்யா பொன்வண்ணன், நாயகியின் பாட்டியாக வரும் லட்சுமி, பி.எஸ்.என்.எல் அலுவலக சீனியர் அதிகாரியாக வரும் ரோகிணி, அவரது கணவராக வரும் ஜெயராம் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இளம் பார்வையாளர்களை மனதில் வைத்து, முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு, மிகுந்த ரசனையுடன் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிவ நிர்வானா. அவர் இயக்குனர் மணிரத்னத்தின் ரசிகர் என்பதாலோ என்னவோ, இப்படத்தின் பல சமாச்சாரங்கள் ‘உயிரே’, ‘அலை பாயுதே’, ‘பம்பாய்’ போன்ற மணிரத்னம் படங்களை அப்பட்டமாக நினைவூட்டுகின்றன. விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் படத்துக்கு பலம் என்பதால், அவர்களை சிறப்பாக பயன்படுத்தி, படத்தை போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார்.
ஒளிப்பதிவாளர் முரளி ஜி காஷ்மீரை மட்டும் அல்ல, விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவையும் பேரழகாகக் காட்டி ரசிக்கும்படி செய்திருக்கிறார்.
ஹேஷாம் அப்துல் வஹாபின் இசையில் ஏற்கெனவே இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட். அவரது பின்னணி இசை ஒரு காதல் படத்துக்குத் தேவையான மாயாஜாலம் புரிந்திருக்கிறது.
இரண்டே முக்கால் மணிநேரப் படமாக இது இருப்பதை படத்தொகுப்பாளர் பிரவீன் புடி இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.
‘குஷி’ – பார்வையாளர்களை குஷிப்படுத்தும் ஃபீல் குட் மூவி!