குரங்கு தாத்தா!
கோட் சூட் போட்ட ஒரு சிம்பான்சி படத்தின் மேல் ‘”இதுதான் எனது தாத்தா,” என்று நாத்திகர்கள் நம்புகிறார்கள்!’ என்று பதிந்த ஒரு போஸ்டர். அதைப் போட்ட ஒரு போஸ்ட்டில், சும்மா இல்லாமல் ஒரு நண்பர் என்னை டேக் செய்து கூப்பிட்டிருந்தார். அங்கே அவருக்கு பதில் சொல்லி விட்டு வந்து விட்டேன் எனினும் இந்த மாதிரி வாய்ப்புகளை சும்மா கடக்க முடியவில்லை. காரணம், அந்தப் போஸ்டரைப் பார்த்ததும் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹிண்டுவில் படித்த ஒரு அறிவியல் கட்டுரை நினைவுக்கு வந்தது.
பரிணாம வளர்ச்சியில் ஆரம்பத்தில் இருந்த சில உடல் உறுப்புகள் / பாகங்கள் பின்னர் அவசியம் இல்லாமல் போயிருக்கும். அவற்றில் சில அடுத்தடுத்த தலைமுறையில காணாமல் போய் விடுகின்றன. ஆனால் பல உறுப்புகள் தொடர்ந்து உடலில் உருவாகுகின்றன. இந்த மாதிரி உறுப்புகளை Vestigial Organs என்று சொல்கிறார்கள். அப்பென்டிக்ஸ் அப்படிப்பட்ட தேவையில்லாத ஒரு ஆணிதான். Wisdom Tooth எனப்படும் பற்கள், சைனஸ், டான்சில் என்று இப்படி ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. மனித உடலில் மொத்தம் 90க்கும் மேற்பட்ட Vestigial உறுப்புகள் இருக்கின்றன.
அந்த லிஸ்டில் இருக்கும் முக்கிய பாகம் ஒன்று Coccyx எனப்படும் துண்டு எலும்பு. இது நமது அடி முதுகெலும்பில் முக்கோண வடிவில் இருக்கிறது. இதற்கு இன்னொரு பெயர் Tail Bone. அதாவது வால் எலும்பு.
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆதிப் பெருங்குரங்கில் இருந்து நாம் பிரிந்த போது நமது வால் காணாமல் போய் விட்டிருக்கிறது. ஆனால் உடலுடன் வாலை இணைக்கும் எலும்பு மட்டும் உடலில் தேங்கி விட்டிருக்கிறது. சொல்லப் போனால் மனிதக்கரு உருவாகும் போது வாலுடன்தான் உருவாகிறது. சுமார் 7 வாரங்கள் வரை கருவுடன் வாலும் சேர்ந்து வளர்கிறது. அப்புறம் 8வது வாரம் அந்த வால் காணாமல் போகிறது.
இந்த வாலை எது காணாமல் அடிக்கிறது என்பதைத் தேடியதில் TBXT எனும் ஒரு மரபணுதான் இந்தத் தேவையில்லாத வாலை நீக்குகிறது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். நியூயார்க் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக் குழு இந்த TBXT மரபணுவைப் பிரித்து, கர்ப்பம் தரித்த பரிசோதனை எலிகளின் கருவுக்குள் செலுத்தியதில், அவற்றுக்குப் பிறந்த எலிகள் வால் இல்லாமல் பிறந்திருக்கின்றன! அதாவது இந்த மரபணுதான் எட்டாம் வாரத்தில் மனிதர்களுக்கு வாலைக் காணாமல் பண்ணுகிறது என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டுள்ளது.
வால் இருக்கும் இதர குரங்குகளிடம் இந்த மரபணு இருக்கவில்லை. ஆனால் வால் இல்லாத சிம்பான்சி, போனோபோ, கொரில்லா, ஓரங்குட்டன், கிப்பன் போன்ற குரங்களிடம் இந்த மரபணு இருக்கிறது. அதாவது நாமும் இந்த வால் இல்லாத பெருங்குரங்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதற்கு நம்மிடையே உள்ள இன்னொரு ஆதாரம் இந்த Coccyx எலும்பு. இந்த மரபணு பரிசோதனை அதனை அழுத்தமாக நிரூபிக்கிறது.
எனவே இந்தப் போஸ்டருக்கு நாம் சொல்லும் பதில், ‘ஆம் இவர்தான் நமது முப்பாட்டன். ஆனால் நாத்திகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும், ஆத்திகர்களுக்கும் முப்பாட்டன் பெருங்குரங்குகள்தான். So, deal with it.’
விண்ணியற்பியல் விஞ்ஞானி நீல் டிக்ராஸ் டைசன் ஒரு முறை சொன்னது போல: The good thing about Science is that it is true, whether or not you believe in it.
-ஸ்ரீதர் சுப்ரமணியம்