குரங்கு பெடல் – விமர்சனம்

நடிப்பு: காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் ரதிஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், தக்‌ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன் மற்றும் பலர்

இயக்கம்: கமலக்கண்ணன்

ஒளிப்பதிவு: சுமீ பாஸ்கரன்

படத்தொகுப்பு: சிவநந்தீஸ்வரன்

இசை: ஜிப்ரான் வைபோதா

தயாரிப்பு: சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா (டிஒன்)

 நாவலை, நெடுங்கதையை திரைப்படமாக எடுப்பதே மிகப் பெரிய சவால். அப்படியிருக்க, ஒரு சிறுகதையை, குறுங்கதையை அதன் கரு கெடாமல் வளர்த்தெடுத்து, சுமார் ஒண்ணே முக்கால் மணிநேர திரைப்படமாக எடுப்பது எவ்வளவு பெரிய சவால். இந்த கடினமான சவாலை ஏற்று, சுவாரஸ்யமான, வெற்றிகரமான திரைப்படம் எடுத்து சாதித்த இயக்குநர்களும் தமிழ் திரையுலகில் இருந்திருக்கிறார்கள். பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய ‘சிற்றன்னை’ என்ற சிறு குறுங்கதையை அடிப்படையாகக் கொண்டு, ‘உதிரிப்பூக்கள்’ என்ற திரைப்படத்தைப் படைத்து, பாராட்டுகளையும், விருதுகளையும் வாங்கிக் குவித்த இயக்குநர் மகேந்திரன் இதற்கோர் உதாரணம். அதுபோல, திரைப்பட இயக்குநரும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ராசி.அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து, இந்த ‘குரங்கு பெடல்’ என்ற நெடும்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன். இது கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, பாராட்டுகளைப் பெற்றது. குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுக்கும் முயற்சிகள் அருகிவரும் இன்றைய சூழ்நிலையில், குழந்தைகளுக்கான ‘குரங்கு பெடல்’ திரைப்படம் குழந்தைகளைக் கவருமா? பார்ப்போம்…

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கத்தேரி என்ற சிறு கிராமத்தில் 1980ஆம் ஆண்டு கோடை காலத்தில் இப்படக்கதை நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் முழுஆண்டுத் தேர்வு முடிந்து, கோடை விடுமுறை விடுகிறார்கள். குழந்தைகள் விடுதலை உணர்வுடன் குதூகலமாக பள்ளியைவிட்டு ஓடி வருகிறார்கள். அவர்களில் மாரியப்பன் (மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன்), நீதி மாணிக்கம் (மாஸ்டர் ராகவன்), செல்வம் (மாஸ்டர் ஞானசேகர்), மணி (மாஸ்டர் சாய் கணேஷ்), அங்குராசு (மாஸ்டர் ரதிஷ்) ஆகிய ஐந்து மாணவர்களும் நண்பர்கள். இந்த கோடை விடுமுறையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று அவர்கள் ஜாலியாக பேசுகிறார்கள். கிணற்றில் குதித்து, ஆற்றில் நீந்தி, வயல்வெளிகளில் ஓடி விளையாடுகிறார்கள்.

சிலம்பம் கற்றுக் கொடுக்கும் மாஸ்டர் சைக்கிளில் வருவதைப் பார்க்கும் இந்த ஐவருக்கும் சைக்கிள் ஓட்ட ஆசை வருகிறது. அதற்கு முதலில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டுமே? ஆளுக்கு ஐந்து பைசா, பத்து பைசா என போட்டு, ஒரு மணி நேரத்துக்கு எட்டணா வாடகையில் ‘மிலிட்டரி’ (பிரசன்னா பாலச்சந்திரன்) சைக்கிள் கடையில் சைக்கிள் எடுக்கிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் சைக்கிள் ஓட்ட பழகுகிறார்கள்.

இதனிடையே, சிறுவன் நீதி மாணிக்கம் சொந்தமாய் சைக்கிள் வாங்கிவிட, மூன்று சிறுவர்கள் அவனுடன் சேர்ந்து சென்றுவிட, மாரியப்பன் மட்டும் தனித்து விடப்படுகிறான். அவனது அப்பா கந்தசாமிக்கு (காளி வெங்கட்) சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதால், ஊரார் அவரை ‘ நடராஜா சர்வீஸ் கந்தசாமி’ என்று பட்டப்பெயருடன் கேலியாக அழைப்பது வழக்கம். அவர் தன் மகன் மாரியப்பன் சைக்கிள் ஓட்டிப் பழக, வாடகைக்கு சைக்கிள் எடுக்க பணம் தர மறுக்கிறார். இதனால் மாரியப்பன் தன் வீட்டு உண்டியலில் கை வைக்கிறான். அதில் அப்பாவுக்குத் தெரியாமல்  வாடகை சைக்கிள் எடுக்கும் மாரியப்பன், உயரம் போதாமல் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்கிறான்.

ஒரு நாள் போதுமான பணம் இல்லாத காரணத்தால், வாடகை சைக்கிளை குறிப்பிட்ட நேரத்தில் கடையில் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிக்கிறான் மாரியப்பன். இதற்காக வீட்டிலிருந்து கோழி முட்டைகள் இரண்டை திருடிக்கொண்டு போய் சந்தையில் விற்கிறான். அதில் கிடைக்கும் காசு போதாது என்பதால், கட்டை உருட்டும் சூதாட்டத்தில் பங்கேற்று, அந்த பணத்தையும் இழக்கிறான். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திண்டாடும் மாரியப்பன், வாடகை சைக்கிளுடன் ஊரைவிட்டு வெளியேறுகிறான்…

மாரியப்பன் எங்கே போனான்? சைக்கிளை அவன் திருப்பிக் கொடுக்காததால் கடைக்காரர் மிலிட்டரிக்கு எப்படியெல்லாம் பிரச்சனை வருகிறது? மகன் தொலைந்துபோனதால் அப்பா கந்தசாமியும், அம்மாவும் எப்படியெல்லாம் பரிதவிக்கிறார்கள்? மாரியப்பனின் பணப் பிரச்சனை எப்படித் தீர்கிறது? அவனை விட்டுப் பிரிந்துபோன நண்பர்கள் அவனுடன் மீண்டும் எப்படி சேருகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு யதார்த்தமான காட்சிகளுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் முதன்மை கதாபாத்திரமாக விளங்கும் சிறுவன் மாரியப்பனாக மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் நடித்திருக்கிறார். இந்த வயதில் இத்தனை இயல்பான நடிப்பா? என வியக்கும் வகையில், 1980-ல் வாழ்ந்த ஒரு கிராமத்து சிறுவனின் வாழ்க்கையை தத்ரூபமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட பார்வையாளர்களுக்கு துல்லியமாகக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

மாரியப்பனின் நண்பர்கள் நீதி மாணிக்கம், செல்வம், மணி, அங்குராசு ஆகியோராக முறையே மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் ரதிஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். உடல் மொழி, வசன உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் கிராமத்து மண் மணம் மாறாமல் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மாரியப்பனின் அப்பா கந்தசாமியாக காளி வெங்கட் நடித்திருக்கிறார். எந்த வேடம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக தன்னைப் பொருத்திக் கொண்டு, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் திறமை கொண்ட காளி வெங்கட், இதில் கொங்கு மண்டல கிராமத்துத் தந்தையாக சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் பல காட்சிகளில் மவுனமாக கடந்து போயிருப்பது கதாபாத்திரத்தின் கனத்தை அதிகரித்துள்ளது.

சைக்கிள் கடைக்காரர் மிலிட்டரியாக வரும் பிரசன்னா பாலச்சந்திரனும், அவரிடம் தன் சொந்த சைக்கிளை விட்டுச் சென்றுவிட்டு வந்து சதாய்க்கும் குடிகார கணேசனாக வரும் ஜென்சன் திவாகரும் பிரமாதமாக காமெடி பண்ணி, வயிறு நோக சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக ’மிலிட்டரி’ என்று கம்பீரமாகத் திரியும் சைக்கிள் கடைக்காரரை, உண்மை தெரிந்து, பொசுக்கென்று ஒன்றுமில்லாமல் செய்யும் ஜென்சன் திவாகரின் காமெடி, வெடித்துச் சிரிக்க வைக்கும் சரவெடி.

சிறுவன் மாரியப்பனின் அக்காவாக வரும் தக்‌ஷனா, அம்மாவாக வரும் சாவித்திரி, மாஸ்டராக வரும் செல்லா, தோல்பாவைக் கலைஞராக வரும் குபேரன் உள்ளிட்டோர் தங்கள் நடிப்பு மூலம் நிஜமனிதர்களை பிரதிபலித்திருக்கிறார்கள்.

கோடை விடுமுறையை ஸ்மார்ட் போனிலும், ட்யூஷன் செண்டரிலும் பதட்டமாய் கழிக்கும் இக்கால சிறுவர் சிறுமியருக்கு, 1980களில் குழந்தைகள் எப்படி கோடை விடுமுறையை கொண்டாட்டமாகக் கழித்தார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவும், 1980களில் சிறுவர்களாக இருந்த இன்றைய மூத்த தலைமுறையினருக்கு, மலரும் நினைவுகளை மலரச்செய்யும் விதமாகவும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன். சைக்கிள் என்ற ஒன்றை மையமாக வைத்து அக்கால கிராமத்து சிறுவர்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாகவும், மிகவும் இயல்பாகவும் சித்தரித்துக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர். பாராட்டுகள்.

சுமீ பாஸ்கரனின் ஒளிப்பதிவு கிணற்றை, ஆற்றை, பரிசலை, வயல்வெளியை, பழுதியை, வெக்கையை, மனிதர்களை என அக்கால கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஜிப்ரனின் இசையில், பிரம்மாவின் வரிகளில் பாடல்கள் சிறுவர்களின் உள்ளங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளன. எளிமையான பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

இப்படத்தை வெளியிட முன்வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் கலாரசனை போற்றுதலுக்குரியது.

‘குரங்கு பெடல்’ – கோடை விடுமுறையில் குழந்தைகளோடு குடும்பமாய் கண்டு கழிக்க சிறந்த படம்! பார்த்து மகிழுங்கள்!