தமிழில் விஷ்ணு மஞ்சு அறிமுகமாகும் படத்துக்கு ‘குறள் 388’ என்ற தலைப்பு ஏன்?
தெலுங்கு முன்னணி நாயக நடிகரான மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. தெலுங்கில் பல் படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் தமிழில் நடித்ததில்லை.
தற்போது கார்த்திக் இயக்கவுள்ள புதிய படத்தின் மூலம், தமிழிலும் நாயகனாக அறிமுகமாக உள்ளார் விஷ்ணு மஞ்சு. தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகுகிறது. தமிழில் இப்படத்துக்கு ‘குறள் 388’ என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்” என்பது 388-வது திருக்குறள்.
“நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்” என்பது இந்த 388-வது திருக்குறளுக்கு பொருள். இதை அடிப்படையாக வைத்து, சமகால அரசியலை பிரதிபலிக்கும் படமாக உருவாக்கப்படுவதால், இதற்கு ‘குறள் 388’ என பெயரிட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள் படக்குழுவினர்.
சுரபி நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ் பதிப்புக்கான வசனங்களை இரா.ரவிஷங்கர் எழுதுகிறார். ஹைதராபாத், சென்னை மற்றும் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படம் குறித்த அறிவிப்பை மோகன் பாபுவின் பிறந்த நாளன்று, இளையராஜா வெளியிட்டு, அறிமுகப்படுத்தி வைத்தார்.