குடும்பஸ்தன் – விமர்சனம்
நடிப்பு: மணிகண்டன், சாந்வி மேகன்னா, ஆர்.சுந்தர்ராஜன், குடசனத் கனகம், நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஷான்விகா ஸ்ரீ, முத்தமிழ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத், பாலாஜி சக்திவேல், அபிலாஷ், டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், காயத்ரி, வர்கீஸ் மற்றும் பலர்
இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி
ஒளிப்பதிவு: சுஜித் என்.சுப்ரமணியம்
படத்தொகுப்பு: கண்ணன் பாலு
இசை: வைசாக்
தயாரிப்பு: ‘சினிமாக்காரன்’ எஸ்.வினோத் குமார்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
தனியார் விளம்பர டிசைனிங் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் நாயகன் நவீன் (மணிகண்டன்). ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வருபவர் நாயகி வெண்ணிலா (சாந்வி மேகன்னா). வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் காதலர்கள். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிப்பதால், இவர்கள் தங்கள் நண்பர்களின் உதவியோடு பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
இவர்களது திருமணத்தில் நவீனின் பெற்றோருக்கு அதிருப்தி இருக்கிறது. இருந்தாலும் மணமக்கள் நவீனின் வீட்டிலேயே இல்லற வாழ்க்கையைத் துவங்குகிறார்கள்.
ரியல் எஸ்டேட் புரோக்கராக இருக்கும் நவீனின் அப்பா பழனிச்சாமி (ஆர்.சுந்தர்ராஜன்), பெரிதாக வருமானம் ஈட்டாததால் மொத்த குடும்பத்தின் பொறுப்பும் நவீனின் மேல் விழுகிறது. பூர்விக வீட்டைப் புதுப்பிக்கச் சொல்லுகிறார் அப்பா. கோயில்களுக்கு ஆன்மீகப் பயணம் செல்ல விரும்புகிறார் அம்மா சுப்புலட்சுமி (குடசனத் கனகம்). ஐ.ஏ.எஸ் கனவு நனவாக வேண்டும் என்று தீவிர பயிற்சியில் இருக்கிறார் புது மனைவி வெண்ணிலா. இத்தனை சுமைகளுக்கிடையில், தங்கள் குடும்பத்தை மட்டம் தட்டி, தன்னை குத்திப்பேசும் சகோதரியின் கணவர் ராஜேந்திரன் (குரு சோமசுந்தரம்) முன்னால் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வீராப்பும் நவீனுக்கு இருக்கிறது.
இந்த நிலையில் அலுவலகத்தில் நடந்த ஒரு பிரச்சனையில் நவீனுக்கு வேலை பறிபோகிறது. வேலையில்லாமல் இருப்பதை குடும்பத்தினரிடம் மறைத்து, கடன் வாங்கி, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆரம்பிக்கிறார். மலை போல் கடன் வளர்ந்துகொண்டே போகிறது. மேலும், வேலை பறிபோன விஷயம் ஒரு கட்டத்தில் குடும்பத்தினருக்குத் தெரிய வருகிறது. தடுமாறுகிறார் நவீன். அதன்பின் அடுத்தடுத்து அவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையும் எமோஷனும் கலந்து கொடுத்திருக்கிறது இந்த `குடும்பஸ்தன்’ திரைப்படம்.
நாயகன் நவீனாக மணிகண்டன் நடித்திருக்கிறார். குடும்ப பொறுப்பைச் சுமக்கும் இடத்தில் திண்டாட்டம், சகோதரியின் கணவரிடம் தோற்கக் கூடாது என்கிற இடத்தில் தன்மானம், காதல் மனைவியிடம் ரொமான்ஸ் எனப் புதிதாகத் திருமண வாழ்வுக்கு வந்த இளம் குடும்பஸ்தனை கண்முன் நிறுத்துகிறார் மணிகண்டன். குளியலறையில் தனியாகப் பேசிக் கொள்ளும் இடத்தில் சிரிப்பையும், இறுதியில் வெடித்துக் குமுறும் இடத்தில் குடும்பஸ்தனின் உணர்வுகளையும் ஆழப் பதிய வைக்கிறார்.
நாயகி வெண்ணிலாவாக சாந்வி மேக்கனா நடித்திருக்கிறார். அன்பான, அதே நேரத்தில் கண்டிப்பான மனைவியாக படம் முழுக்க வருகிறார். மகிழ்ச்சி, கோபம், வருத்தம், தாய்மை என எல்லா உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனுடைய சகோதரியின் கணவர் ராஜேந்திரனாக குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். நக்கலான விநோத சிரிப்பு, மச்சானை எப்போதும் மட்டம் தட்டுவது, மனைவியைப் பாடாய் படுத்துவது என தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவரது மனைவி அனிதாவாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், முதிர்ச்சியான நடிப்பை வழங்கி பாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளார்.
நாயகனின் அப்பா பழனிசாமியாக வரும் ஆர்.சுந்தர்ராஜன் போடும் ஒன்லைனர்கள் நகைப்பூட்ட, அம்மா சுப்புலட்சுமியாக வரும் குடசனத் கனகம் நடிப்பிலும் குறையேதுமில்லை.
மனோகரனாக வரும் பிரசன்னா பாலச்சந்திரன், அமீராக வரும் ஜென்சன் திவாகர், மோகன்ராமாக வரும் பாலாஜி சக்திவேல், சிம்சனாக வரும் முத்தமிழ், குட்டி தம்பியாக வரும் அனிருத், மாணிக்சந்தாக வரும் அபிலாஷ், ரிஜிஸ்திராராக வரும் டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், ஹவுஸ் ஓனராக வரும் காயத்ரி, ராஜேந்திரனின் எம்டி-யாக வரும் வர்கீஸ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சாபத்துடன் தொடங்கி சுபத்துடன் முடியும் ஒரு வழக்கமான குடும்பக் கதையாக இருந்தாலும் திரைக்கதையில் அதை அலுப்பூட்டாமல் புதுமையாகக் கொடுத்திருக்கிறது பிரசன்னா பாலச்சந்திரன் – ராஜேஷ்வர் காளிசாமி எழுத்துக் கூட்டணி. சாமானியர்கள் அனைவரின் வாழ்விலும் இருக்கும் நிதிச் சிக்கல்கள், சுயமரியாதை பிரச்னைகள் ஆகியவற்றை வைத்து விளையாடியிருப்பது பார்வையாளர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறது. இதில் உருவக்கேலி, இரட்டை அர்த்த வசனங்கள் ஏதுமில்லாமல் யதார்த்த வசனத்தாலும் தேர்ந்த நடிப்பாலும் நகைச்சுவையைச் சாத்தியப்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறது.
சாமானியர் வாழ்வியலை தொய்வில்லாமல் பிரதிபலிக்கும் திரைக்கதை, இயல்பை மீறாத காட்சிகள், குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி என தரமான படைப்பாகக் கொடுத்து கவனிக்க வைக்கிறார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. எது வெற்றி, ஒரு சாமானியன் எங்கே தன்னை தொலைக்கிறான், இந்த சிஸ்டம் பணத்தின் பின்னால் எப்படி ஓட வைக்கிறது போன்ற சீரியஸான பிரச்னைகளை மிகவும் கலகலப்பான திரைமொழியில் பேசியிருக்கிறார் அறிமுக இயக்குநர்.
வைசாக் இசையில் ஷான் ரோல்டன் குரலில் வரும் ‘மானம் பறக்குது’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
சுஜித் என்.சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.
’குடும்பஸ்தன்’ – பார்த்து மகிழலாம்!
ரேட்டிங்: 3/5.