கோழிப்பண்ணை செல்லதுரை – விமர்சனம்

நடிப்பு: ஏகன், பிரிகிடா சாகா, சத்யதேவி, யோகி பாபு, ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவகுமார், நவீன் மற்றும் பலர்

இயக்கம்: சீனு ராமசாமி

ஒளிப்பதிவு: அசோக்ராஜ்

படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

தயாரிப்பு: டாக்டர் டி.அருளானந்து, மேத்யூ அருளானந்து

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் நாயகன் செல்லதுரை (ஏகன்). அவரது அம்மா (ஐஸ்வர்யா தத்தா) தகாத உறவு காரணமாக செல்லதுரையையும், அவரது தங்கை ஜெயசுதாவையும் (சத்யதேவி) சிறுவயதிலேயே விட்டுவிட்டு, தனக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேடிச் சென்றுவிடுகிறார். இதனால் கோபமடையும் அவரது கணவர், தனது பிள்ளைகளான செல்லதுரையையும், ஜெயசுதாவையும் பாட்டி பொறுப்பில் விட்டுவிட்டு, தனக்கொரு புது வாழ்க்கையைத் தேடிச் சென்று விடுகிறார். குழந்தைகளை கவனித்துக்கொண்ட பாட்டியும் சில நாட்களில் இறந்து விடவே, ஆதரவற்ற செல்லதுரைக்கும், அவரது தங்கை ஜெயசுதாவுக்கும் கோழிப்பண்ணை நடத்தும் பெரியப்பாவான பெரியசாமி (யோகி பாபு) அடைக்கலம் கொடுக்கிறார். கோழிப் பண்ணையிலேயே செல்லதுரைக்கு வேலை போட்டுக் கொடுத்து, செல்லதுரையையும், ஜெயசுதாவையும் படிக்க வைத்து ஆளாக்குகிறார்.

பெற்றோர்கள் இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்த்து, அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் செல்லதுரை. ஆனால், சின்ன வயதில் அம்மா செய்த காரியத்தால் ஊரில் அடிக்கடி அவமானப்படுத்தப்படுகிறார். இதனிடையே கல்லூரிக்குச் சென்று படிக்கும் தங்கைக்கு காதல் வருகிறது. அம்மாவைப் போல் தங்கையும் தனக்கு அவமானத்தைத் தேடிக்கொடுத்து விடுவாரோ என்று ஆவேசப்படுகிறார் செல்லதுரை. அதன்பிறகு அவர் என்ன செய்தார்? அண்ணனின் எதிர்வினையை தங்கை எப்படி எதிர்கொண்டார்? அவர்களை விட்டுச் சென்ற பெற்றோர்கள் என்ன ஆனார்கள்? முடிவு என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளுடன் மனித உணர்வுகளை மேம்படுத்தும் படைப்பாக இயக்குநர் சீனு ராமசாமி கொடுத்திருப்பது தான் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம்.

செல்லதுரை என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஏகன், அறிமுகப் படம் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அசல் கிராமத்து இளைஞராக வலம் வருபவர், பாசம், காதல், சோகம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடிய கனமான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். 

நாயகன் செல்லதுரையை காதலிக்கும் நாயகி தாமரைசெல்வியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகா, தனக்கான கதாபாத்திரத்தை நிறைவாக செய்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். (நாயகியின் பெயரில் ஏன் ”தாமரை’? ஒன்றிய அரசின் விருது பெற இயக்குநர் வைத்த ஐஸ்ஸோ?) 

நாயகனின் பெரியப்பா பெரியசாமியாக நடித்திருக்கும் யோகி பாபு தனது வழக்கமான காமெடி கலாட்டாவை ஒதுக்கி வைத்துவிட்டு, அழுத்தமான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து, தன்னால் இப்படிப்பட்ட குணச்சித்திர வேடங்களையும் கையாள முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.

நாயகனின் தங்கை ஜெயசுதாவாக நடித்திருக்கும் சத்யதேவி, கதையின் மையம் என்பதை உணர்ந்து, புரிந்து, அருமையாக நடித்திருக்கிறார். 

நாயகனின் அம்மாவாக வரும் ஐஸ்வர்யா தத்தா, சௌந்தராக வரும் லியோ சிவக்குமார், மற்றும் நவீன், குட்டிப்புலி தினேஷ் உள்ளிட்ட ஏனைய வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

தனது ஒவ்வொரு படத்திலும் மனித உணர்வுகளின் மேன்மை பற்றி பேசுவதை தனது தனித்தன்மையாகக் கொண்டிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் மனித உணர்வுகளுடன், ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை பார்வையாளர்களிடம் கடத்த முயன்றிருக்கிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். கடைசி 20 நிமிட காட்சிகள் மூலம் பார்வையாளர்களின் உள்ளத்தை உருக்கி கண்ணீர் சிந்த வைத்து விடுகிறார். 

ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ் தனது ஒளிப்பதிவு மூலம் பார்வையாளர்களுக்கு கதை நடக்கும் கிராமத்துக்கு பயணித்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓ.கே. 

‘கோழிப்பண்ணை செல்லதுரை’ –  அண்ணன் தங்கை பாசத்துக்காக பார்த்து ரசிக்கலாம்!