“தோழர்” விவகாரம்: ரகசிய பிரஸ் மீட் நேரலையில் வெளியானதால் கோவை கமிஷனர் நழுவல்!
மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட வன்முறை குறித்து சென்னையில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேட்டி அளித்துக் கொண்டிருந்தனர். அதனை பெரும்பகுதி ஊடகங்கள் நேரலை செய்து கொண்டிருந்தன.. அடுத்த சில நிமிடங்களிலேயே நடிகர் கமல்ஹாசன் அதே மாணவர் போராட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அதையடுத்து திடீரென கோவை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பத்திரிக்கையாளர்களை அழைத்து அதேநேரத்தில் பிரஸ் மீட் கொடுத்தார்..
உடனே பல சேனல்கள் ம.கூ.தலைவர்கள் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் பேட்டிகளை துண்டித்துவிட்டு, கோவை கமிஷனர் பின்னால் நின்றது. அப்போது கமிஷனர் தான் கொண்டு வந்திருந்த அறிக்கையை படிப்பது போன்று பார்த்து பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.
“தோழா தோழா என்று கூப்பிட்டு மற்ற மாணவர்களிடம் போன் நம்பரை தருகின்றனர். தோழா என்று கொடுத்தால் அவர்களின் தொடர்பை துண்டிக்க வேண்டும்” என்றார்.
“இந்த போராட்டத்துக்கு எந்த மாதிரியான அமைப்புகள் தலைமை ஏற்கின்றன, பாருங்கள்” என எழுதிக் கொடுத்திருந்த பேப்ரை பார்த்து வாசித்தார்.
“கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, மக்கள் அதிகார மையம், நாம் தமிழர், மே 17 இயக்கம், ஆர்.எஸ்.ஒய்.எப், எஸ்எப்ஐ, டிஒய்எப்ஐ, சிபிஐ (எம்எல்) போன்ற அமைப்புகள் தலைமை வகித்து தேசவிரோத கோஷங்களை எழுப்புகின்றனர்” என்றார்.
செய்தியாளர்களுக்கு பாடம் நடத்துவது போல் பேசி முடித்த பின்னர் கேள்வி வந்தது. “ரேக்ளா ரேஸ்சிற்கு தடை இருக்கும் போது எப்படி கொடீசியா மைதானத்தில் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தீர்கள்?” என கேள்வி வந்தது. கேட்காதது போல் இருந்தார். மறுபடியும் கேள்வி வரவே… “அப்படியா … நான் பார்க்கிறேன். என்னவென்று செக் பண்ணுகிறேன். தெரியலையே” என நழுவினார்.
அப்போது எழுந்த ஒரு நிருபர், “ஏன் எழுந்திருக்கிறீர்கள்…. பிரஸ் மீட் என்றுதானே அழைத்தீர்கள் … இதுவரை நீங்கள் சொன்னதை நாங்கள் கேட்டோம் அல்லவா… இனி நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளியுங்கள்” என்றார். உடனே, “சொல்ல வந்தத சொல்லிட்டேன்.. நீங்க வேற ஏதாவது கேட்ட வேண்டும் என்றால் ..ம்.ம். கொஞ்சம் வாங்க” என்று மீண்டும் எழுந்தார்…. மீண்டும் நிருபர்கள் கேள்வி எழுப்பவே… “அனுமதித்தால்தானே சொல்ல முடியும்…” என்று சொன்னார்.
அப்போது மொபைல் போனில் ஒரு போன் வந்தது. தொடர்பை துண்டித்தவுடன், “லைவ்வா பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்…” என கேட்டார். “எல்லாமே … லைவ்வாகவே செல்கிறது… “என்றனர்.. “அப்படியா? இதுவுமா?” என்றார் .. “ஆமாம்” என்றனர்.. அப்படியே அங்கிருந்து நழுவினார்..
Courtesy: theekkathir.in