”இயக்குநர் வினோத்ராஜை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே ‘கொட்டுக்காளி’ படத்தை தயாரித்தேன்!” – நடிகர் சிவகார்த்திகேயன்
எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வழங்கும் திரைப்படம் ‘கொட்டுக்காளி’. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி, நடிகை அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் (ஆகஸ்ட்) 23ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் கலையரசு பேசுகையில், “நாங்கள் தயாரித்து வழங்கும் ஏழாவது படம் ‘கொட்டுக்காளி’. உலகம் முழுவதும் இந்தப் படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது எங்களுக்குப் பெருமை. ‘கூழாங்கல்’ படம் பார்த்ததும் நாங்கள் இயக்குநர் வினோத்ராஜுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என நினைத்தோம். ‘கொட்டுக்காளி’ மூலம் அது நடந்துள்ளது. வினோத்ராஜ், சூரி, அன்னா பென் என அனைவரும் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவினரும் நன்றாக வேலை செய்திருக்கின்றனர். படம் நிச்சயம் பேசப்படும். இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
ஒளிப்பதிவாளர் சக்திவேல் பேசுகையில், “என்னுடைய முதல் நன்றி இயக்குநர் வினோத்ராஜ் சாருக்கு. படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன். சூரி, அன்னா பென், என்னுடைய குழுவினர் என அனைவருக்கும் நன்றி” என்றார்.
எடிட்டர் கணேஷ் சிவன் பேசுகையில், “இது நம் ஊரின் கதை. நிச்சயம் நம் எல்லோரும் இதை கடந்துதான் வந்திருப்போம். நம் மக்கள் எப்படி ‘கொட்டுக்காளி’யை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
சவுண்ட் டிசைனர் அழகிய கூத்தன் பேசுகையில், “படத்தில் மியூசிக் இல்லை என்பதை இயக்குநர் வினோத்ராஜ் சொல்லியிருந்தார். அதுவே முதல் சவால். இசை இல்லை என்பதால் படத்தில் சத்தம் அதிகம் வைக்கக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தினோம். இந்தப் படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி” என்றார்.
இயக்குநர் வினோத்ராஜ் பேசுகையில், “எனக்கு ஆதரவு கொடுத்து வரும் எல்லோருக்குமே நன்றி. சிவகார்த்திகேயன் அண்ணனால் தான் படம் இவ்வளவு தூரம் வந்தது. என்னுடைய டீம் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
நடிகை அன்னா பென் பேசுகையில், “எனக்கு இப்படியான கதையைக் கொடுத்த இயக்குநர் வினோத்ராஜ், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.
நடிகர் சூரி பேசுகையில், “நான் பல படங்களில் நடித்து பாராட்டுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால், இந்தப் படத்திற்கு கிடைத்த பாராட்டு எனக்குப் பெருமையாக இருக்கிறது. என்னுடைய அம்மா, அப்பா செய்த புண்ணியம்தான் இப்படியான நல்ல இயக்குநர்களையும் ரசிகர்களையும் எனக்குக் கொடுத்திருக்கிறது. ‘கூழாங்கல்’ படத்திற்கு நான் மிகப் பெரிய ரசிகன். அந்த இயக்குநரது படத்திலேயே நான் கதாநாயகன் ஆகியிருப்பதற்கு இறைவனுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக அமெரிக்காவுக்கு செல்வதற்காக விசாவுக்காக நான் காத்திருந்த ஒரு வாரத்தில் பயந்து விட்டேன். இந்தந்த கேள்விகள் கேட்பார்கள், இப்படி பதில் சொல்ல வேண்டும் என எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், எனக்கு எல்லாமே பதட்டத்தில் மறந்து விட்டது. அதுபோலவே, இத்தனை இயக்குநர்கள் ‘கொட்டுக்காளி’ படத்தைப் பாத்தபோது எனக்கு பதட்டமாகி விட்டது. இப்படி ஒரு படத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் வினோத்ராஜ், தம்பி சிவகார்த்திகேயனுக்கு நன்றி. அன்னா பென் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசுகையில், “நான் முதலில் ‘கூழாங்கல்’ படம் பார்த்தேன். அதைப் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருந்தது. நான் அதிகம் உலக சினிமாக்கள் பார்த்ததில்லை. அறிமுக இயக்குநர்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள் ராட்டர்டம் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் தேர்வாகும். முன்பு கிறிஸ்டோபர் நோலன் தனது படத்திற்காக இந்த விழாவில் விருது வாங்கி இருக்கிறார். அந்த விருதை ‘கூழாங்கல்’ படத்திற்காக வினோத்ராஜ் வாங்கினார் என கேள்விப்பட்ட போது எனக்குப் புல்லரித்தது. வினோத்ராஜை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அவருடைய அடுத்த படத்தை நான் தயாரிப்பதாக சொன்னேன். இந்தப் படம் வெற்றியடைந்து நான் முதலீடு செய்ததுபோக எனக்கு லாபம் வந்தால், அதை முதலில் எடுத்து இயக்குநர் வினோத்தின் அடுத்தப் படத்திற்கு முன்பணமாகக் கொடுத்துவிடுவேன். இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் போன்ற இரண்டு இயக்குநர்களுக்கு படம் செய்ய முன்பணம் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக இதைப் பார்க்கிறேன்.
நான் காலேஜ் படிக்கும்போதுதான் அதிக சினிமா பார்த்தேன். அப்போது பாலாஜி சக்திவேல், கெளதம் மேனன் என பலரது படங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். இவர்களுக்கான ட்ரிபியூட்டாக ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்க்கிறேன். இந்தப் படத்திற்கு இசை இல்லை என்று வினோத்ராஜ் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. சூரி, அன்னா படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ’விடுதலை’ படத்தை விட ‘கொட்டுக்காளி’ படத்தில் சூரியின் நடிப்பு நிச்சயம் ஒரு மார்க் அதிகம் வாங்கும் என நம்புகிறேன். ’விடுதலை2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ என இந்த வருடம் சூரிக்கு ரொம்பவே ஸ்பெஷல். பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றிமாறன் என அனைவரும் இந்தப் படத்தை இவ்வளவு பாராட்டி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இயக்குநர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.