”இயக்குநர் வினோத்ராஜ் என்னை செருப்பால் அடித்தது போல இந்த ’கொட்டுக்காளி’ படம் இருந்தது!” – இயக்குநர் மிஷ்கின்

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வழங்கும் திரைப்படம் ‘கொட்டுக்காளி’. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி, நடிகை அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் (ஆகஸ்ட்) 23ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், “’கூழாங்கல்’ படத்தை விட இயக்குநர் வினோத்ராஜ் அதிக பாய்ச்சல் இதில் நிகழ்த்தி இருக்கிறார். உலகத்தின் பல்வேறு மொழிப் படங்களோடு போட்டியிட்டு வெற்றிப் பெற்ற வினோத்ராஜைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக உள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லாமல், தரமான படைப்பைக் கொடுக்க வேண்டும் என்பது இந்தப் படக்குழுவின் நோக்கமாக உள்ளது. உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொல்கிறேன். அவருக்கு இந்தப் படம் வாழ்நாள் பெருமையாக இருக்கும். படத்தில் சூரி, அன்னா பென் நடிப்பு, உழைப்பைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், “’கொட்டுக்காளி’ திரைப்படம் மிகவும் யதார்த்தமானது. எந்தப் படத்திலும் பார்க்காத புது அனுபவத்தை வினோத்ராஜ் கொடுத்துள்ளார். ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என அவர்களாகவே நினைத்துக் கொண்டு செல்லும் பயணம்தான் ‘கொட்டுக்காளி’. உண்மையிலேயே யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது என்பதுதான் கதை. இது எல்லாமே நாம் பக்கத்தில் வாழ்வில் பார்த்த அனுபவம்தான். முந்தைய படங்களை விட இதில் சூரி சிறப்பாக நடித்துள்ளார். எல்லா நடிகர்களும் தங்களுடைய ஆத்ம திருப்திக்காக இயக்குநர் வினோத்ராஜூடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என சொல்வேன். அந்த அளவுக்கு கலை மீது பக்தி வைத்துள்ளார். இதைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கும் படக்குழுவுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், “உலகத்தில் உள்ள எந்த ஒரு நல்ல படத்தோடு ஒப்பிடும்போதும் இந்தப் படத்தில் அதன் சாயல் இல்லை. வேறுமாதிரியாக உள்ளது. பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றிமாறன் என எந்த இயக்குநரோடு வினோத்ராஜை ஒப்பிட வேண்டும் எனத் தெரியவில்லை. அவர் யார் மாதிரியும் இல்லாமல் தனித்துவமானவர். படத்தை அவ்வளவு சிறப்பாக எடுத்துள்ளார். சூரி நடிப்பில் ‘கருடன்’, ‘விடுதலை’ படங்கள் வெற்றி அடைந்தது. அதுபோலவே, ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன். அன்னா பென்னும் சிறப்பாக நடித்திருக்கிறார். உலக சினிமாவுக்கே அடையாளமாக இந்தப் படம் அமையும்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “’கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்தேன். இயக்குநர் வினோத்ராஜ் என்னை செருப்பால் அடித்தது போல இந்தப் படம் இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகன் நான். அவரது காலில் விழுந்து முத்தமிட தயாராக இருக்கிறேன். அதற்கடுத்து வினோத்ராஜின் காலில் விழத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தை புரோமோட் செய்ய நிர்வாணமாக நடனம் ஆட வேண்டும் என்றாலும் நான் தயார். சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. ’கொட்டுக்காளி’ படம் அவருக்கு மற்றுமொரு குழந்தை. விஜய்சேதுபதியை வைத்து ‘டிரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். விஜய்சேதுபதியை அடுத்து சூரியின் நடிப்பைப் பார்த்து மிரண்டு விட்டேன். காமெடியனாக இருந்து அசுர நாயகனாக வளர்ந்து வரும் சூரியைப் பார்க்க பிரமிப்பாக உள்ளது.

படத்தில் கதாநாயகி அன்னா பென் ஒன்றரை வார்த்தை தான் பேசியிருப்பார். ஆனால், நிச்சயம் அவரது நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும். சத்தமே இல்லாமல் பெரிய அரசியல் கருத்துடன் ‘கொட்டுக்காளி’ உருவாகி இருக்கிறது” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “சர்வதேசத் தரத்தில் படம் உருவாக்கக் கூடிய நம்ம ஊர் பையன்தான் வினோத்ராஜ். சூரி போன்ற மெயின் ஸ்ட்ரீம் நடிகர், வினோத்ராஜ் படத்தில் நடிப்பது அவருக்கு ப்ளஸ். அதேசமயம், சவாலும் கூட! ‘கூழாங்கல்’, ‘கொட்டுக்காளி’ என வினோத்தின் இரண்டு படங்களும் சர்வதேச அளவில் பேசப்பட்டு இருக்கிறது. பெண்களுக்கான படம், அரசியல் கருத்துகள் பேசும் படம், இலக்கியம் பேசும் படம் என அத்தனையும் இதில் இருக்கிறது. சூரி, அன்னா பென், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே இருக்கிறார்கள். அந்தளவு நேர்மையான படைப்பு ‘கொட்டுக்காளி’” என்றார்.