கொட்டுக்காளி – விமர்சனம்

நடிப்பு: சூரி, அன்னா பென் மற்றும் பலர்

இயக்கம்: பி.எஸ்.வினோத்ராஜ்

ஒளிப்பதிவு: சக்தி

ஒலிப்பதிவு: சுரேன்.ஜி, அழகிய கூத்தன்

படத்தொகுப்பு: கணேஷ் சிவா

தயாரிப்பு: ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ சிவகார்த்திகேயன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரித்து வெளியிட்ட ‘கூழாங்கல்’ என்ற கலைப்படம், பல உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளும் பாராட்டுகளும் பெற்றதோடு, ”ஆஸ்கர் வரை சென்று திரும்பிய திரைப்படம்” என்ற பெயரையும் பெற்றதால், பி.எஸ்.வினோத்ராஜின் இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ பற்றிய முதல் அறிவிப்பு வெளியானதிலிருந்தே தமிழ் திரைத்துறையினர், விமர்சகர்கள் மற்றும் கலைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் என்றவுடன் ‘கொட்டுக்காளி’க்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. நகைச்சுவை நடிகராக இருந்து ‘விடுதலை’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக வளர்ந்து, ‘கருடன்’ படம் மூலம் மாஸ் ஹீரோவாக உயர்ந்திருக்கும் சூரி, ‘கொட்டுக்காளி’யில் நாயகனாக நடிக்கிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. பின்னணி இசை இல்லாத இதன் டிரைலர் வெளியாகி மிரட்டியதால் எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துவிட்டது. இப்போது இந்த கலைப்படம் வெகுமக்கள் பார்வைக்காக பொது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. எகிறிக்கொண்டிருக்கும் அமோக வரவேற்பை இப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

‘கொட்டுக்காளி’ என்ற தலைப்புக்கு கீழே, ‘The Adamant Girl’ என ஆங்கிலத்தில் போடுகிறார்கள். ‘கொட்டுக்காளி’ என்றாலும், ‘Adamant Girl’ என்றாலும் ‘பிடிவாதக்காரி’ என்பது தான் பொருள்.

இந்தியாவை உள்ளடக்கிய தெற்காசிய சமூகத்தில், ஒரு பெண்ணின் காதலை, அவரது குடும்பத்தாரும் உறவினர்களும் அத்தனை எளிதில் ஏற்பதில்லை. அவசர அவசரமாக அவருக்குப் பிடிக்காத வேறொருவருடன் திருமணமோ, அல்லது வேறு ஏதாவதொன்றோ செய்து, காதலைக் கொல்ல முயல்வார்கள். அவர்களது முயற்சி பலிக்காதபோது அந்தப்பெண்ணையே கொல்லவும் தயங்க மாட்டார்கள். ‘ஆணவக் கொலை’ என நேரடியாகவும், ‘தூக்கில் தொங்கினாள்’ என மறைமுகமாகவும் வரும் பல செய்திகளுக்குப் பின்னணியில் நிகழ்வது இது தான்.

ஒரு கிராமத்துப் பெண்ணின் காதலைக் கொல்ல, அவரது குடும்பத்தாரும் உறவினர்களும், அவர்களுக்குத் தெரிந்த வழமையான வழியில், எப்படி முயற்சிக்கிறார்கள் என்பது தான் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் ஒருவரிக் கதை.

மதுரை மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் நாயகன் பாண்டி (சூரி). இவரது முறைப்பெண் நாயகி மீனா (அன்னா பென்). அவர் பிளஸ்-2 முடித்ததும் கல்யாணம் செய்துகொள்ளும்படி தனது சகோதரிகள் சொல்லியும் கேளாத பாண்டி, மீனாவை மேற்படிப்புக்காக கல்லூரிக்கு அனுப்புகிறார். படிக்கப்போன இடத்தில் வேறு சாதியைச் சேர்ந்த மாணவனுடன் பழகி, பரஸ்பரம் காதல் ஏற்பட்டதால், பாண்டியை கல்யாணம் செய்ய பிடிவாதமாக மறுக்கிறார் மீனா. எவ்வளவு சொல்லியும், எதையும் காதில் வாங்காதவராக, எதற்கும் பதில் சொல்லாதவராக, வீட்டில் யாருடனும் ஒரு வார்த்தையும் பேசாதவராக ‘கல்லுளிமங்கன்’ போல எதையாவது வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறார். இதனால் அவருக்கு பேய் பிடித்திருப்பதாக நினைக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பாலமேடு என்ற கிராமத்தில் இருக்கும் பேயோட்டும் பூசாரியிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்கள். உள்ளே இருக்கும் பேயை ஓட்டிவிட்டால், காதல் உணர்வும் அவரைவிட்டு ஓடிப்போகும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அவ்விதம் மீனாவை பூசாரியிடம் அழைத்துச் செல்லும் வழியில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்ந்தன? பேயோட்டும் பூசாரி, பேயை ஓட்ட என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடித்தார்? மீனாவிடமிருந்து பேய் ஓட்டப்பட்டதா? அவர் காதலைத் துறந்து பாண்டியை மணக்கச் சம்மதித்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

103 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படத்தின் திரைக்கதை மேலே உள்ள வரிசையில் இருக்காது. பின்னணி இசை எதுவும் இல்லாமல், நாயகியின் அம்மா, கிராமத்திலுள்ள எளிய கோயில் ஒன்றில் மண்டியிட்டு சிறிது நேரம் பிரார்த்தனை செய்கிறார்… செய்கிறார்… செய்துகொண்டே இருக்கிறார். பின்னர் திருநீறை எடுத்துக்கொண்டு தன் வீடு நோக்கி நடக்கிறார்… நடக்கிறார்…. நடந்துகொண்டே இருக்கிறார். வீடு வந்ததும், பேய் பிடித்தவர் போல் சேவலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகியின் நெற்றியில் திருநீறு பூசுகிறார். இப்படித்தான் படத்தின் முதல் காட்சியை அமைத்துள்ளார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். இது பின்னணி இசை இல்லாத, யதார்த்தமான கலைப்படம் என்பதை இந்த முதல் காட்சி மூலம் அவர் அழுத்தம் திருத்தமாக உணர்த்திவிடுவதால், நாம் ஜனரஞ்சகப்பட எதிர்பார்ப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு, கலைப்படம் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறோம்.

அடுத்து, பேய் ஓட்டுவதற்காக ஒரு ஷேர் ஆட்டோவில் நாயகியை ஏற்றுகிறார்கள். உடன் சில பெண்களும் ஏறிக்கொள்கிறார்கள். உறவுக்கார ஆண்கள் இரண்டு மூன்று இருசக்கர வாகனங்களில் ஏறிக்கொள்ள, பாலமேடு நோக்கி பயணம் புறப்படுகிறது. இந்த பயணத்தில்போது அவர்களுள் அவ்வப்போது நடக்கும் உரையாடல் வழியே மேலே உள்ள முன்கதையை பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்துகிறார் இயக்குநர்.

பயணத்தினூடே அவர்கள் சிறுநீர் கழிக்க, பெட்ரோல் வாங்க, குலசாமியைக் கும்பிட, சரக்கு வாங்க, ஜல்லிக்கட்டு காளை வழிவிடாமல் மறிக்க… என ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துகிறார்கள். அப்போது சின்னச் சின்ன சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்வதாக இயக்குநர் கட்டமைத்திருக்கிறார். ஒரு ஊரைக் கடக்கும்போது ஒரு ஸ்பீக்கரில் பாடும் ”ஒத்தையடிப் பாதையிலே” என்ற பாடலை  நாயகி மீனா காதலுணர்வுடன் சன்னமாய் முணுமுணுப்பது, அதை பார்த்துவிடும் நாயகன் பாண்டி, மீனாவில் தொடங்கி அக்கா, மாமா, அப்பா என அனைவரையும் அடித்து, தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டித் தீர்க்கும் காட்சியில் இயக்குநர் நமக்குள்ளும் பதைபதைப்பை ஏற்படுத்திவிடுகிறார்.

பாலமேடு போய்ச் சேர்ந்ததும், ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்ட பூசாரி மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், கையாளும் வழிமுறைகளையும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார் பாண்டி. அதுபோலத் தான் மீனாவுக்கும் பேய் ஓட்டப்படும் என்பதை ஏற்க பாண்டி தயாராக இல்லை என்ற ட்விஸ்ட்டை நேரடியாகச் சொல்லாமல், பார்வையாளர்கள் யூகித்து உணர்ந்துகொள்ளும் வகையில் மறைமுகமாகச் சொல்லி படத்தை முடித்துவிடுகிறார் இயக்குநர் வினோத்ராஜ்.

படத்தின் பெரிய பலம் அதன் நடிகர்கள். நாயகன் பாண்டியாக வரும் சூரி, நாயகி மீனாவாக வரும் அன்னா பென் தவிர யாரும் தெரிந்த முகங்கள் கிடையாது. எனினும் படத்தில் நடித்த அனைவருமே மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். நடிப்பில் ‘விடுதலை’, ‘கருடன்’ படங்களை காட்டிலும் சூரிக்கு இது மிக முக்கியமான படம். தொண்டையில் பிரச்சினை இருக்கும் நபராக படம் முழுக்க கரகரத்த குரலில் பேசுவதும், குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக அவர் காட்டும் அதிகாரமும் என ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார்.

அன்னா பென்னுக்கு படத்தில் ஒரே ஒரு வசனம் மட்டும்தான். மற்றபடி வசனமே இல்லாமல் வெறித்து பார்த்தபடி மிரட்டலான நடிப்பை வழங்கி அவரும் ஸ்கோர் செய்கிறார். இவர்கள் தவிர சூரியின் சொந்தக்காரர்களாக பைக்கில் பின்னாலேயே வரும் இருவர், சூரியின் தங்கை மகனாக வரும் சிறுவன் என அனைவரும் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர்.

படத்தில் பாடல், பின்னணி இசை கிடையாது. எனினும் கதாபாத்திரங்களைச் சுற்றி நடப்பவற்றிலிருந்து வரும் சத்தங்களே பின்னணி இசையைவிட சிறப்பாக ஒலித்து அதை சமன் செய்து விடுகின்றன. சமரசமே இல்லாமல், பின்னணி இசையை சேர்க்காமல் தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்த இயக்குநரை பாராட்டலாம்.

அடுத்து பாராட்டப்பட வேண்டியது ஒளிப்பதிவாளர் சக்தியின் ஒளிப்பதிவு. கிராமத்தின் கரடுமுரடான சாலைகளில் சென்று கொண்டிருக்கும் அந்த ஆட்டோவில் நாமும் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தத்தில், முழுமையான, சிறந்த கலைப்படம். பார்வையாளர்களுக்கு அருமையான அனுபவம். நன்றி இயக்குநர் வினோத் ராஜ். பாராட்டுகள்.

‘கொட்டுக்காளி’ – கலைப்பட ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஜனரஞ்சகப்பட ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். கண்டு களியுங்கள்.