எழுதுகோலை வீசி எறிந்தவர்கள்: நேற்று பெருமாள் முருகன்; இன்று கொற்றவை!
‘மாதொரு பாகன்’ என்ற நாவலை எழுதியதற்காக சாதிவெறியர்களின் கோபத்துக்கும், கொடுஞ்சொற்களுக்கும் ஆளான எழுத்தாளர் பெருமாள் முருகன் மனம் நொந்து, “இனி நான் எழுத மாட்டேன்” என்று அறிவித்தார்.
இன்று அதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மார்க்சிய பெண்ணியவாதியான நிர்மலா என்ற கொற்றவை.
“நான் உயர்சாதிப் பெண். ஆணவக்கொலைகள் என்னை பெருமையடையச் செய்யாது” என்று கொற்றவை கூறியதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நான் ஆணவக்கொலைகளை எதிர்ப்பதாகத் தான் சொன்னேன். நான் உயர்சாதிப் பெண் என சொல்லவில்லை” என்ற பொருளில் உடனே விளக்கம் அளித்து மறுத்தார் கொற்றவை. இதை செய்தியாக வெளியிட்ட ‘ஹீரோ நியூஸ் ஆன்லைன் டாட்காம்’, “இந்த விளக்கத்தை ஏற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அறிவுடைமை” என்று வேண்டிக்கொண்டது.
ஆனால், முற்றுப்புள்ளி வைக்க மறுத்து சர்ச்சையைத் தொடர்ந்தார்கள் சிலர். விளைவாக, மனக்காயம் அடைந்து உள்ளம் சோர்ந்த கொற்றவை, “இனிமேல் நான் எழுதப் போவதில்லை, செயல்படப் போவதில்லை” என அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக “என்னுடைய இறுதி எழுத்து” என்ற தலைப்பில் கொற்றவை எழுதியிருப்பதாவது:
வணக்கம் தோழர்களே,
இச்சமூகத்தில் என்னை நான் என்னவென்று அடையாளப்படுத்திக் கொள்வது என்று வருந்தும் நிலைக்கு இன்று நான் ஆளாக்கப்பட்டுள்ளேன். இதுவரை நான் எத்தனையோ விதமான விமர்சனங்களை சந்தித்துள்ளேன். அதை துணிவுடன் ஒற்றை ஆளாக நின்றே எதிர்கொண்டும் உள்ளேன். நான் சொன்ன எந்த கருத்திலிருந்தும் – அது என்னுடைய அறிவிற்கும் – சமூக மாற்றத்திற்கும் சரியானதே என்று கருதிய எந்த கருத்திலிருந்தும் நான் பின்வாங்கியதில்லை.
ஆனால் விமர்சனம் என்பது வேறு, அவதூறு என்பது வேறு. அதிலும் சாதிய மனோபாவம் கொண்டவள் எனும் அவதூறு என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
ஏனென்றால், இந்த முற்போக்கு மற்றும் மார்க்சிய தத்துவார்த்த அறிவு கிடைப்பதற்கு முன்னரேகூட சாதி என்றால் என்னவென்று தெரியாத ஒரு சூழலில்தான் நான் வளர்ந்தேன். ஆனால் இன்று, அதாவது நிர்மலா என்ற பெண் கொற்றவையாக மாறிய பின்னர் – இந்த சமூகம் எத்தனை அநீதிகள் நிறைந்ததாக இருக்கிறது எனும் உண்மையை உணர்ந்த பின்னர் மனம் பொறுக்காமல் சமூக மாற்றத்திற்காகப் பங்களிக்க வேண்டும் எனும் உறுதிப்பாட்டோடு எழுதத் தொடங்கினேன். அதன்பின்னர் சில களப்பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.
ஆனால் வன்மம் பிடித்த அடையாள அரசியலின் முன் எதுவும் பயனற்று போய்விட்டது.
இனி கொற்றவையாகிய நான் முகநூலில் மட்டுமின்றி,. வேறு எந்தத் தளங்களிலும் எழுதப் போவதில்லை. செயல்படப் போவதில்லை.
என்னுடைய இந்த முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படும் என்பதை நான் அறிவேன். (அதற்கும் சேர்த்து) சொல்ல எதுவுமில்லை என்னிடம்…
என் முடிவு தவறானது, உணர்ச்சிவயப்பட்ட முடிவு என்றெல்லாம் கருதி என் மீது அன்பு கொண்டவர்கள் என்னிடம் ஏதும் பேசவோ, தொடர்புகொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை ஆதரவாக இருந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
வாழ்க போலி தலித் அடையாள அரசியல்!
சாதி… இது தாழ்த்தப்பட்டோரை மட்டும் ஒடுக்குவதில்லை.
இவ்வாறு கொற்றவை எழுதியுள்ளார்.
அவர் எடுத்துள்ள முடிவை நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆறுதல் சொல்வதாய் நினைத்து ஞானோபதேசம் செய்யப் போவதும் இல்லை. ஏனெனில், அவரது இந்த முடிவு தற்காலிகமானதாகத் தான் இருக்க முடியும். காரணம், “மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று அதை சும்மா விடுவதில்லை” என்ற மாவோவின் கூற்று அவருக்கும் தெரியும் தானே…!
எனவே கொற்றவை… சிறிது ஓய்வெடுங்கள்; திடம் பெறுங்கள்; திரும்பி வாருங்கள்; மீண்டும் எழுதுங்கள் என மனமார வாழ்த்துகிறோம்.