கூழாங்கல் – விமர்சனம்
கூழாங்கல்.
பல விருதுகளைப் பெற்ற திரைப்படம் என்ற அறிமுகத்தோடு, சோனி லைவில் வெளியாகியிருக்கிறது கூழாங்கல் திரைப்படம்.
மதுரை மாவட்டம் யானைமலையை ஒட்டியுள்ள ஒரு கிராமம். குடிகாரனான கணவனை விட்டுவிட்டு, மனைவி தன் தாய் வீட்டிற்குப் போய்விடுகிறாள். பள்ளிக்கூடத்தில் இருக்கும் தனது மகனை அழைத்துக்கொண்டு போய், மனைவியை அழைக்கச் செல்கிறான் கணவன். ஆனால், அதற்குள் மனைவி, தன் கணவன் வீட்டிற்கே திரும்பிவிடுகிறாள் என்பதுதான் கதை.
ஆனால், பள்ளிக்கூடத்திலிருந்து அப்பனும் மகனுமாகப் புறப்பட்டு, தாய் வீட்டிற்குப் போன பெண்ணை அழைக்கச் செல்லும் பயணமும் திரும்ப வரும் பயணமும்தான் கதை என்றும் சொல்லலாம்.
ரொம்பவும் சின்னக் கதைதான். அதை வைத்துக்கொண்டு ஒரு சுவாரஸ்யமான படத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ்.
இந்தப் படத்தில் வரும் எல்லோரது வாழ்க்கையுமே வறண்டதாகத்தான் இருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கையைச் சித்தரிக்கும் நிலப்பரப்பைத் தேர்வுசெய்ததிலேயே பாதி வெற்றிபெற்றுவிட்டார் இயக்குநர்.
முட்புதர்களும் கற்றாழையும் வளர்ந்து, காய்ந்து போய்கிறது ஒரு வறண்ட வெளியில், இந்தக் கதை கச்சிதமாகப் பொருந்துகிறது.
விக்னேஷ், ஜெயா பார்த்திபன் ஆகியோரின் ஒளிப்பதிவு மிக அற்புதமாக அமைந்திருக்கிறது. மனிதர்களுக்கான க்ளோஸ் – அப் காட்சிகளும் நிலப்பரப்புக்கான வைட் – ஷாட்களும் அட்டகாசம். நிகழ்நேர ஒலிப்பதிவு என்கிறார்கள். அதுவும் நன்றாகவே இருக்கிறது.
எல்லா நடிகர்களுமே சினிமாவுக்குப் புதிது. ஆனால், சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நாயகனாக வரும் கருத்தாண்டி, நாடகக் கலைஞராம். அட்டகாசமான நடிப்பு. அதேபோல சிறுவனாக வரும் செல்லப் பாண்டியும் சிறப்பான நடிப்பு.
சில பலவீனமான அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. இந்தப் படத்தில் எல்லா காட்சிகளுமே நீளமானவைதான். ஆனால், பல காட்சிகள் அதீதமான நீளத்தில் அமைந்து பொறுமையைச் சோதிக்கின்றன.
இந்தப் படத்தின் மொத்த நீளமே ஒன்றேகால் மணி நேரம்தான். இந்த காட்சிகளைச் சுருக்கியிருந்தால் இன்னும் சுருக்கமாக, சிறப்பாக அமைந்திருக்கக்கூடும்.
இந்தப் படம் சோனி லைவ்வில் ஸ்ட்ரீமாகிறது.
K Muralidharan