கூவத்தூர் பார்ட் 2: புதுச்சேரி சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கவைப்பு!

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கடற்கரையை ஒட்டியுள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரு பிரிவாக இருந்த அ.தி.மு.க. அணிகள் நேற்று இணைந்தன. அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு துணை பொதுச் செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதியான சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ‘வின்ட் பிளவர்’ ரிசார்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கு அறை பதிவு செய்யப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. அங்கு வந்தார்.
தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறும்போது, “திடீரென்று இங்கு வந்து தங்குவதற்கு விசேஷ காரணம் எதுவும் இல்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. டி.டி.வி.தினகரனை தற்போது உள்ள நிலவரப்படி 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்கிறோம். இன்னும் நிறைய பேர் வருவார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். அதை பொறுத்து இருந்து பாருங்கள்” என்றார்.
அவரை தொடர்ந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக இந்த ரிசார்ட்டுக்கு வந்தனர். வெற்றிவேல் தவிர 18 எம்.எல்.ஏ.க்களும் அங்கு வந்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் முத்தையன், தங்கத்துரை ஆகியோர் கூறும்போது, “அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து தான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்தோம். ஆனால் அப்போது ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. ஆட்சியை உடைக்கப் பார்த்தார். இரட்டை இலை சின்னத்தை கிடைக்கவிடாமல் தடுத்து தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்தார். அப்படிப்பட்டவரை மீண்டும் சேர்ப்பது குறித்து எங்களிடம் கலந்தாலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தது வருத்தமளிக்கிறது. தொடர்ந்து எங்களது முடிவுகள் தமிழக அரசியலில் அதிரடியாக இருக்கும்” என்றனர்.