கூர்மன் – விமர்சனம்

நடிப்பு: ராஜாஜி, ஜனனி அய்யர், பாலசரவணன், ஆடுகளம் நரேன் மற்றும் பலர்

இயக்கம்: பிரயான் பி.ஜார்ஜ்

இசை: டோனி பிரிட்டோ

ஒளிப்பதிவு: சக்தி அரவிந்த்

பெண்களுக்கு எதிராக குற்றம் புரியும் குற்றவாளிகள் தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை, சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் வடிவமைத்து, ‘கூர்மன்’ படத்தை படைத்தளித்திருக்கிறார் இயக்குனர் பிரயான் பி.ஜார்ஜ்.

காவல்துறை அதிகாரியாக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் நாயகன் ராஜாஜி, பல ஏக்கர் பரப்பு கொண்ட பண்ணையில் உள்ள பழைய வீட்டில் வசித்துவருகிறார். அந்த வீட்டிலிருந்து எந்த காரணத்தை முன்னிட்டும் வெளியே போக மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்துவருகிறார். அவரது வேலைக்காரர் பாலசரவணன், ஒரு நாய், ஒரு அமானுஷ்ய சக்தி ஆகியோர் மட்டும் தான் அவருடன் அந்த வீட்டில் இருக்கிறார்கள்.

ஒருவர் தன் மனதுக்குள் என்ன நினைக்கிறார் என்பதை கண்டுபிடித்துச் சொல்லும் தனித்துவமான ஆற்றல் கொண்டவராகவும் இருக்கிறார் ராஜாஜி. இந்த ஆற்றலைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தபடியே, காவல்துறைக்கு சவாலாக இருக்கும் பல வழக்குகளைத் தீர்த்துவைக்கிறார்.

ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, ஆசிட் வீசி கொன்ற குற்றவாளியை, அவன் மனதிலிருப்பதை கண்டுபிடிப்பதற்காக, ராஜாஜியின் கட்டுப்பாட்டில் விட்டுச் செல்கிறார் காவல்துறை அதிகாரி ஆடுகளம் நரேன். ஆனால் அந்த குற்றவாளியோ அங்கிருந்து தப்பியோடி விடுகிறான்.

இதுவரை வீட்டைவிட்டு வெளியே வராமல் பிடிவாதமாக இருந்த ராஜாஜி, இப்போது அந்த குற்றவாளியைப் பிடிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே வருகிறார்.

தப்பிச்சென்ற குற்றவாளியை ராஜாஜி கண்டுபிடித்தாரா? அவர் ஏன் காவல்துறை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறது மீதிக்கதை.

மைண்ட் ரீடிங் என்ற தனித்துவமான ஆற்றலின் உச்சம் தொட்ட நாயக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜாஜி, அசத்தலாக நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். கோபம், காதல், பாசம், ஆக்ரோஷம் என நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஜனனி அய்யர், அளவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ராஜாஜியின் உதவியாளராக வரும் பால சரவணன் நடிப்பு சிறப்பு. ஆடுகளம் நரேன் வழக்கமான போலீஸ் அதிகாரியாக வந்தாலும் மிரட்டலாக நடித்திருக்கிறார்.

ஒரு வித்தியாசமான, புதுமையான சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையை திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் பிரயான் பி.ஜார்ஜ்.

சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவும், டோனி பிரிட்டோவின் இசையும் படத்துக்கு பலம்.

’கூர்மன்’ – பார்க்கலாம்; ரசிக்கலாம்!