கொஞ்சம் கொஞ்சம் – விமர்சனம்
பிழைப்புத் தேடி கேரளா செல்லும் ஒரு தமிழ்நாட்டு இளைஞன், அங்கே சந்திக்கும் பிரச்சனைகளை யதார்த்தம் மற்றும் செண்டிமெண்ட் கலந்த விறுவிறுப்புடன் சொல்ல வந்திருக்கிறது ‘கொஞ்சம் கொஞ்சம்’ திரைப்படம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாயகன் கோகுல் கிருஷ்ணா பிழைப்புத் தேடி கேரளா செல்கிறார். அங்கு பழைய பேப்பர் கடை நடத்திவரும் அப்புக்குட்டியிடம் வேலைக்கு சேருகிறார். அந்த கடைக்குப் பக்கத்தில் வசிக்கும் நாயகி நீனாவை ஒருநாள் தற்செயலாக பார்க்கும் கோகுல் கிருஷ்ணா, அவர் மீது ஒருதலையாய் காதல் கொள்கிறார். முதலில் மோதினாலும், பின்னர் நீனாவுக்கும் காதல் வருகிறது.
கோகுல் கிருஷ்ணாவின் அக்காவுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. இதற்காக சொந்த ஊருக்குச் செல்லும் கோகுல், அக்காவின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக அவருக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுக்கிறார். அந்த செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசும்போது, திடீரென செல்போன் வெடிக்க, கோகுலின் அக்கா கேட்கும் திறனை இழக்கிறார். இந்நிலையில், எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தில் தாயை பறிகொடுக்கிறார் கோகுல்.
இந்நிலையில், சிகிச்சைக்காக அக்காவை அழைத்துக்கொண்டு கேரளாவுக்கு வந்துவிடுகிறார் கோகுல். அக்காவுடன் அவர் வெளியே போய்வருவதைப் பார்க்கும் நாயகி நீனு, கோகுலை தவறாக புரிந்துகொண்டு, அவரை விட்டு விலகுகிறார். காதலி நீனுவைக் காணாமல் கோகுல் தவித்துக் கொண்டிருக்க, ஒரு சந்தேக திருட்டு வழக்கில் அக்கா, தம்பி இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பெரும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். அதன் பிறகு நடக்கும் எதிர்பாரா சம்பவங்களே ‘கொஞ்சம் கொஞ்சம்’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் கோகுல் கிருஷ்ணா பழைய பேப்பர் கடையில் வேலை செய்யும் சாதாரண இளைஞனாக, ஹீரோயிசம் இல்லாமல், ரசிக்கும்படியான யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எளிய குடும்பத்துப் பெண்ணாக வரும் நாயகி நீனு, அழகான முகபாவனைகளால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் பிரியா மோகன், முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் கேட்கும் திறன் இல்லாத சீரியசான பெண்ணாகவும் நடித்து அசத்தி இருக்கிறார்.
அப்புக்குட்டி நல்ல மனம் கொண்ட பழைய பேப்பர் கடை முதலாளியாக வந்து வழக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவருக்கு மனைவியாக மதுமிதா சிறிது நேரமே வந்தாலும் காமெடி பண்ணி கலகலப்பூட்டி இருக்கிறார்.
பிரபல மலையாள இயக்குநர் லோகித தாஸின் உதவியாளரான உதயசங்கரன் இயக்கியிருக்கும் இப்படத்தில், தரமான மலையாளப் படங்களுக்கு உரிய எதார்த்தமான பதிவு மிளிர்கிறது. கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் தேர்வும், அவர்களை இயக்குனர் வேலை வாங்கியிருக்கும் விதமும் பாராட்டுக்குரியது. செண்டிமெண்ட் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கே.வி.ஆனந்தின் உதவியாளரான நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பொள்ளாச்சி மற்றும் கேரள அழகை ரசிக்கும்படியாக அள்ளித் தந்திருக்கிறார். அதுபோல், வல்லவன் இசையில் பாடல் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
‘கொஞ்சம் கொஞ்சம்’ – நிறைய நிறைய மன நிறைவு!