கோடியில் ஒருவன் – விமர்சனம்
நடிப்பு: விஜய் ஆண்டனி, ஆத்மிகா, சூப்பர் சுப்பராயன், ராமச்சந்திர ராஜு, சூரஜ், பூராம், திவ்யபிரபா
இயக்கம்: ஆனந்த கிருஷ்ணன்
தயாரிப்பு: டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய்குமார்
இசை: நிவாஸ் கே.பிரசன்னா
கிராமத்தின் அதிகாரமிக்க பதவியான ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் (திவ்யபிரபா) மக்களுக்கு நல்லது செய்ய முயலுகிறார். ஆனால், கர்ப்பிணியான அவருக்கு முட்டுக்கட்டை போடும் தீயவர்கள், அவரை தீவைத்து கொளுத்துகிறார்கள். தீக்காயங்களால் தீய்ந்துபோன முகத்துடன் உயிர் பிழைக்கும் அந்த பெண், ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். ’என் குழந்தை வளர்ந்து அதிகாரமிக்க பதவிக்கு வந்தால் மட்டுமே நான் வெளியே தலை காட்டுவேன்’ என்ற வைராக்கியத்துடன் வீட்டுக்குள் முடங்கிப்போகிறார்.
அந்த பெண்ணின் மகன் வளர்ந்து விஜய் ஆண்டனி ஆகி, அம்மாவின் சபதத்தை நிறைவேற்ற அதிகாரமிக்க கலெக்டர் ஆக வேண்டும் என தீவிரமாக முயலுகிறார். ஆனால் தீயவர்களின் சூழ்ச்சியால் அவரது ஐ.ஏ.எஸ். ஆசையில் மண் விழுகிறது. இதனால், அம்மாவின் சபதத்தை நிறைவேற்ற ரூட் மாற்றி களம் இறங்கும் விஜய் ஆண்டனி, அதிகாரமிக்க மிகப்பெரிய பதவியை எட்டி பிடிக்கிறார். அது என்ன பதவி? அந்த பதவியை அவர் அடைய பயணிக்கும் ரூட் என்ன? எனபதை சொல்லியிருப்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் விஜய் ஆண்டனி, மிடுக்கான வேடம் ஏற்று நடித்திருக்கிறார். ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் அவர் ரொமான்ஸ் காட்சிகளில் கோட்டை விட்டுள்ளார். நாயகி ஆத்மிகாவுக்கு, அதிகளவு காட்சிகள் இல்லாதது ஏமாற்றம். இருந்தாலும் வரும் காட்சிகளில் அழகு, பதுமையாக வந்து செல்கிறார்.
இப்படத்தில் நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். அதில் குறிப்பாக கே.ஜி.எப் வில்லன் ராமச்சந்திர ராஜு, உருவத்திலேயே பயமுறுத்தி வில்லத்தனத்திலும் மிரட்டி இருக்கிறார். மேலும் சூப்பர் சுப்பராயன், சூரஜ், பூ ராமு ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபா, நேர்த்தியாக நடித்துள்ளார்.
சமூகத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்கும் ஹீரோயிசமான கதையில், அரசியலை கலந்துக்கட்டி சொல்லியிருக்கும் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன், கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாரோ, அதே அளவுக்கு நாயகன் விஜய் ஆண்டனிக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதோடு, இயல்பாகவும் காட்சிகளை வடிவமைத்திருப்பது படத்தின் சிறப்பு.
என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவும், நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம். அதிலும் குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு அபாரம். அதே பகுதியை தூய்மைப்பகுதியாக மாற்றியதில் இருந்த கிராபிக்ஸ் பணியும் நேர்த்தி.
‘கோடியில் ஒருவன்’ – ரசிப்புக்கு உரியவன்