கோடை மழை – விமர்சனம்
எடுத்த எடுப்பில் கறுப்புத் திரையில் ‘LTTE’ என்ற எழுத்துக்கள் வருகின்றன. அவை அப்படியே ‘யாழ்’ என்ற தமிழ் எழுத்துக்களாய் மாற, ‘யாழ் தமிழ் திரை’ என படநிறுவனத்தின் பெயர் வருகிறது. இந்த அற்புத கிரியேட்டிவிட்டியே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிடுகிறது. எனினும், இது விடுதலைப்புலிகள் பற்றிய படமோ, ஈழவிடுதலைப் போர் பற்றிய படமோ அல்ல.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சிப்பட்டி என்ற கற்பனை கிராமத்தில் வாழும் மனிதர்கள் பற்றிய படம் இது. ஆராய்ச்சிப்பட்டிக்கு அருகில் இருக்கிறது கேரள மாநிலம். அம்மாநில போலீசார் அப்பாவிகளான ஆராய்ச்சிப்பட்டிக்காரர்கள் மீது பொய்யாய் திருட்டு வழக்கு பதிவு செய்து, அவர்களை சிறையில் தள்ளுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். இதில் விரக்தியடையும் ஆராய்ச்சிப்பட்டிக்காரர்கள் ஒரு கட்டத்தில் பொய்யை உண்மை ஆக்க தீர்மானிக்கிறார்கள். கேரளாவுக்குப் போய் திருடி வருவதை தொழிலாகக் கொள்கிறார்கள். இதனால் ஆராய்ச்சிப்பட்டிக்கு ‘திருட்டுப்பட்டி’ என்பது பெயராகி, அதுவே நிலைத்துவிடுகிறது. ஆனால், அந்த ஊரில் பிறந்து வளர்ந்த நாயகன் (கண்ணன்), பரம்பரைத் தொழிலான திருட்டுத் தொழிலில் ஈடுபடாமல், இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறான். இவை அனைத்தும் வாய்ஸ் ஓவரில் சில மணித்துளிகளில் நமக்கு சொல்லப்பட்டு விடுகிறது.
அடுத்து, இந்திய எல்லையில் ஒரு ராணுவ முகாம். இரவு நேரம். ராணுவ வீரனான நாயகனுக்கு செல்பேசி அழைப்பு வருகிறது. அதில் வரும் தகவலைக் கேட்டு பதறிப்போகிறான் நாயகன். அவசர அவசரமாக சொந்த ஊருக்குக் கிளம்புகிறான். என்ன பிரச்சனை என்பது அவனது பயணத்தினூடே, பிளாஷ்பேக்காக விரிகிறது…
…ஒரு கோடை விடுமுறையில் தனது கிராமத்துக்கு வருகிறான் ராணுவ வீரனான நாயகன். வந்த இடத்தில் அதே ஊரில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (இயக்குனர் மு.களஞ்சியம்) தங்கையான நாயகியை (பிரியங்காவை) கண்டதும் அவளிடம் மனதை பறிகொடுக்கிறான். சிற்சில சுவையான சம்பவங்களுக்குப் பிறகு நாயகன் மீது நாயகிக்கும் காதல் வருகிறது. இருவரும் யதார்த்தமான காதல் வாழ்வில் சுகித்திருக்கிறார்கள்.
நாயகனுக்கு ஓர் உயிர் நண்பன். ஊர் வழக்கப்படி கேரளாவுக்குப் போய் திருடி வருவது அந்த நண்பனின் தொழில். ஆனால், திருட்டுத் தொழில் நாயகனுக்குப் பிடிக்காது என்பதால், அவனிடம் அதை மறைத்துவிடுகிறான். எனினும், இந்த விவகாரம் ஒருநாள் நாயகனுக்குத் தெரிய வருகிறது. ஆத்திரப்படும் நாயகன், நண்பனுடனான நட்பை துண்டித்துக்கொள்கிறான். இதனால் வேதனை அடையும் நண்பன், மனம் திருந்தி உழைத்துப் பிழைக்க ஆரம்பிக்கிறான். முறிந்த நட்பு மீண்டும் உயிர் பெறுகிறது.
நாயகனை தன் தங்கை காதலிப்பது இன்ஸ்பெக்டருக்கு தெரிந்துவிடுகிறது. இனி அடி-தடி, ரகளை நடக்கும் என எதிர்பார்த்தால், அது நடக்கவில்லை. “அவன் யாரு? நமக்கு சொந்தக்காரன் தான். நல்லவனாகவும் இருக்கிறான்” என்று சொல்லும் இன்ஸ்பெக்டர், தன் தங்கை ஆசைப்படும் நாயகனுக்கே அவளை மணமுடித்துக் கொடுக்க சம்மதிக்கிறான்.
இந்த நேரத்தில் ஒரு பழைய திருட்டு வழக்கு தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்படுகிறது. நாயகனின் உயிர் நண்பனை இன்ஸ்பெக்டர் அள்ளிக்கொண்டு போய் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கிறான். அப்போது அவன் அடித்த அடியில் நண்பன் பரிதாபமாக உயிரிழக்கிறான். இதனால் ஆவேசமடையும் நாயகன், இன்ஸ்பெக்டரை அடித்து நொறுக்குகிறான். விளைவு, நாயகனுக்கு தன் தங்கையை மணம் முடித்து கொடுப்பதில்லை என முடிவெடுக்கிறான் இன்ஸ்பெக்டர்.
விடுமுறை முடிந்து நாயகன் ராணுவப் பணிக்கு திரும்பிவிட, இன்ஸ்பெக்டர் தன் தங்கையை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறான். இதனால் அதிர்ச்சியடையும் நாயகி, ராணுவ முகாமிலிருக்கும் நாயகனுக்கு செல்பேசியில் தகவல் கொடுக்க, அவன் பதறிப்போய் இப்போது சொந்த ஊருக்கு வந்துகொண்டிருக்கிறான் என்பதுடன் பிளாஷ் பேக் முடிகிறது.
நாயகன் ஊருக்கு வந்து சேர்ந்த சில நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்களால் நாம் நிலைகுலைந்து போகிறோம். படம் முடிந்த பிறகு கனத்த இதயத்துடன் வெளியேறுகிறோம்.
இது காதல் கதை தான் என்றாலும், உண்மையிலேயே வித்தியாசமான, உணர்ச்சிமயமான காதல் கதை.
நாயகனாக வரும் அறிமுக நாயகன் கண்ணன் ஒரு புதுமுகம் போல இல்லாமல் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எந்த ஒப்பனையும் இல்லாமல் எந்த பில்டப்பும் இல்லாமல் அவருடைய அறிமுகம் திரையில் ஆரம்பிக்கிறது. பிரியங்கா மீது காதல் கொண்டு அவரது நினைவாகவே இருக்கும்போதும் சரி, உயிருக்குயிரான நண்பன் அடித்து கொல்லப்பட்டவுடன் துடித்து ஆவேசம் கொள்ளும்போதும் சரி, நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார்.
நாயகி பிரியங்காவின் எளிமையான தோற்றமும், நடிப்பும் அத்தனை ரசிகர்களையும் கட்டிப் போடும் என்பது நிச்சயம். அவர் இது போல் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அண்டர்பிளே பண்ணினால், நடிகை ஷோபா விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தை நிரப்ப முடியும் என நம்பலாம்.
பிரியங்காவின் பாசமான அண்ணனாகவும், கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் வாழ்ந்திருக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம்.
இமான் அண்ணாச்சியின் காமெடி காட்சிகள் எல்லாமே புதுமையுடன் யோசிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலும், ஒருவர் தமிழ் வார்த்தையை தப்புத் தப்பாக பேசி அவரை மண்டை காய வைப்பதும், இன்னொருவர் கையை நீட்டி நீட்டிப் பேசி கலாய்ப்பதும், வேறொருவர் ‘சும்மா’ என்ற வார்த்தையை சும்மா சும்மா பயன்படுத்தி அவரை பாடாய் படுத்துவதும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.
சாம்பசிவத்தின் பாடலிசையில் கிராமிய மணம் கமழும் வைரமுத்துவின் பாடல் வரிகள் அற்புதம். பின்னணி இசை ரம்யம்.
பிரபு தேவாவிடம் உதவி இயக்குனராக இருந்த கதிரவன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். பிரேமுக்கு பிரேம் கலை நுணுக்கத்திலும், தொழில் நுணுக்கத்திலும் அவர் காட்டியிருக்கும் அக்கறை, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது.
இந்த படத்தில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் இரண்டு.
ஒன்று – மேக்கிங். வர்ணிக்க வார்த்தை இல்லை. அத்தனை இதம்.
இன்னொன்று – நாயகனின் வீட்டில் இருக்கும் தலைவர்கள் புகைப்படங்களில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படமும் இருக்கிறது. ஆனால், அது மறைக்கப்பட்டிருக்கிறது. தணிக்கைக் குழுவின் கைங்கர்யம்! சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுபோகும் என இன்னும் எத்தனை நாளைக்குத் தான் தணிக்கைக் குழு அசட்டுத்தனமாய் நம்பிக்கொண்டிருக்குமோ…?
கோடை மழை – நல்ல தமிழ் சினிமாவுக்கு ஊக்க டானிக். வரவேற்போம்.