கிடாரி – விமர்சனம்
சாத்தூரில் ஓர் இரவு. செல்வமும் செல்வாக்கும் மிக்க பெரிய மனிதராக இருக்கும் வேல ராமமூர்த்தியின் (படத்தில் ‘கெம்பையா பாண்டியன்’) கழுத்தில் யாரோ (யார் என்பது படத்தின் முக்கிய சஸ்பென்ஸ்) கத்தியால் குத்திவிட, ரத்தக்காயத்துடன் அவசர அவசரமாக அவரை தூக்கிச் சென்று, அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் என படம் ஆரம்பமாகிறது.
வேல ராமமூர்த்திக்கு வலது கரமாகவும், அவரை பாதுகாக்கும் மெய்காப்பாளனுமாக இருக்கும் நாயகன் எம்.சசிகுமார் (கிடாரி), அவரை கொலை செய்ய முயன்றவரை பழி தீர்க்க முடிவு செய்கிறார். ஆனால், வேல ராமமூர்த்தி தனது அக்கிரமச் செயல்கள் காரணமாக நிறைய பகைவர்களை சம்பாதித்து வைத்திருப்பதால், அவரை கொலை செய்ய முயற்சித்தவர் ‘இவராக இருக்குமோ’, ‘அவராக இருக்குமோ’ என ஒவ்வொரு பகைவரையும் சசிகுமார் ஆராய்வதும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாஷ்பேக் கிளைக்கதையுமாக படம் நகருகிறது.
கொலை முயற்சியில் ஈடுபட்டவரை இறுதியில் கண்டுபிடிக்கும் சசிகுமார், ‘இவரா அவர்’ என அதிர்ச்சி அடைகிறார். அது மட்டுமல்ல, வேல ராமமூர்த்திக்கு தானும் தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசம் கொள்கிறார். வேல ராமமூர்த்தியை கொலை செய்ய முயன்றவர் யார்? ஏன்? வேல ராமமூர்த்தியை தானும் தண்டிக்க வேண்டும் என சசிகுமார் முடிவெடுக்க என்ன காரணம்? வேல ராமமூர்த்திக்கு சசிகுமார் கொடுக்கும் ‘கொலை அல்லாத தண்டனை’ என்ன? என்ற கேள்விகளுக்கான விடைகளை வெள்ளித் திரையில் காண்க!
கிடாரி கதாபாத்திரத்திற்கு சசிகுமார் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிராமத்து கதாபாத்திரங்களில் நடிப்பது சசிகுமாருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்பதால், கிடாரி கதாபாத்திரமாகவே மாறி சிறப்பாக நடித்திருக்கிறார். பகைவர்களிடம் ஆக்ரோஷமாய் பொங்குவது, வலிய வலிய வந்து மேலே விழும் காதலியிடம் இளகுவது, தன்னை வளர்த்த குடும்பத்தாரிடம் பாசத்தைப் பொழிவது என கலந்துகட்டி, ரசிக்கும் விதமாய் நடித்திருக்கிறார்.
கொம்பையா பாண்டியனாக வரும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, படத்தின் கதையை பிரமாதமாக தாங்கி நிற்கிறார். தனக்கே உரித்தான நடிப்பில் அசத்தியிருக்கிறார். கொடிய கொம்பையா பாண்டியனை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். எண்ணை வழியும் வெற்றுடம்புடன் வேல்கம்பும் கையுமாக கோவணத்துடன் வீரமாய் தெருவில் இறங்கி ஓடிவரும் காட்சியில் பிரமிக்க வைத்திருக்கிறார். அளவான முகபாவனை; அழுத்தமான உடல்மொழி. வாழ்த்துக்கள் வேல ராமமூர்த்தி.
நாயகி நிகிலா விமல் பார்க்க அழகாக இருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரம், கதையில் எத்தகைய திருப்பத்தையும் ஏற்படுத்துவதாக இல்லாததால், காதல் காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். என்றாலும், காதல் உணர்வையும், குறும்புத்தனத்தையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
நெப்போலியன், நாடக பேராசிரியர் மு.ராமசாமி, ஓ.ஏ.கே.சுந்தர், சுஜா வாருண்ணி, வசுமித்ர, ஷோபா மோகன், கே.என்.காளை, தெனாலி உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் பிரசாத் முருகன், வசனங்களைவிட காட்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் கதைக்கு ஏற்றாற்போல் தேர்வு செய்து சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். உறவு, நட்பு, துரோகம் போன்ற என்றென்றும் பசுமையான அம்சங்களை உள்ளடக்கி கதை அமைத்திருக்கிறார்.
எனினும், படம் முழுக்க வேல்கம்பு, அரிவாள், ரத்தம் என அதிகம் இருக்கும் வன்முறை காட்சிகள், பார்வையாளர்களை முகம் சுழிக்க வைக்கின்றன. சமூகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன என்பது உண்மைதான்; ஆனால் அவற்றை சமூக பொறுப்புடன் சஜஸ்ட்டிவாக காட்சிப்படுத்த இயக்குனர் இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், ஒரு கதைக்குள் இத்தனை கிளைக்கதைகளைத் திணித்திருப்பதால், திரைக்கதை மூர்ச்சையாகி மல்லாந்து கிடக்கிறது. திரைக்கதையை செதுக்குவதில் கவனம் தேவை.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அள்ளிக் கொடுத்திருக்கிறது. தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார்.
‘கிடாரி’ – வேறுவகை ‘சுப்பிரமணியபுரம்’!