கிடா – விமர்சனம்

நடிப்பு: பூ ராம், காளி வெங்கட், மாஸ்டர் தீபன், கருப்பு (வெள்ளாட்டுக் கிடா) மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ரா.வெங்கட்

ஒளிப்பதிவு: எம்.ஜெயப்பிரகாஷ்

படத்தொகுப்பு: ஆனந்த் ஜெரால்டின்

இசை: தீசன்

தயாரிப்பு: ’ஸ்ரவந்தி’ ரவி கிஷோர்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சிவா (டீம் எய்ம்)

பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளைக் குவித்த பெருமைமிகு படைப்பான ‘கிடா’, தமிழ் ரசிகர்களின் பார்வைக்காக, வரும் (நவம்பர்) 11ஆம் தேதி தமிழ்நாட்டு திரையரங்குகளின் திரைக்கு வருகிறது.

ஒரு தாத்தா, அவரது பேரன், அவர்கள் வளர்க்கும் வெள்ளாட்டுக் கிடா, மற்றும் கறிக்கடை வேலையாள் ஒருவர் ஆகிய  நான்கு கதாபாத்திரங்களை முதன்மை கதாபாத்திரங்களாகக் கொண்டு, எளிய மனிதர்களின் ஏழ்மையான வாழ்வியலை, மிகவும் இயல்பான திரைமொழி மூலம் அற்புதமாக கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் எழுதி இயக்கியிருக்கும் இந்த படைப்பு.

மதுரைக்குப் போகும் வழியில், மேலூர் அருகே, யானைமலை அடிவாரத்தில் உள்ள கிராமம் ஒன்றில், தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் இக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

யானைமலை அடிவாரத்தில், ஒத்தவீடாக இருக்கும் ஓலைக்குடிசையில், தென்னையோலை பின்னி அதில் வரும் வருமானத்தில் பிழைக்கும் செல்லையா தாத்தா (பூ ராம்), அவரது மனைவி, இவர்களது மகள் வயிற்றுப் பேரனான எட்டு வயது கதிர் (மாஸ்டர் தீபன்) ஆகியோர், ‘கருப்பு’ என சிறுவன் கதிர் பெயரிட்டு  செல்லமாக வளர்க்கும் வெள்ளாட்டுக் கிடா சகிதம் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

கலைஞர் ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் பிரபல ஜவுளிக்கடை ஒன்றின் விளம்பரத்தில், சிறுவன் ஒருவன் அணிந்திருக்கும் ரெடிமேட் டிரஸ்ஸைக் காட்டி, “தீபாவளிக்கு எனக்கு அந்த டிரஸ் வாங்கிக் கொடு தாத்தா” என்று ஆசையாய் கேட்கிறான் கதிர். ஒரு விபத்தில் தாய் தந்தையை இழந்ததால் தங்கள் பராமரிப்பில் வளர்ந்துவரும் கதிரின் ஆசையை நிறைவேற்றுவதாக செல்லையா தாத்தாவும் உறுதியளிக்கிறார்.

அவர் ஜவுளிக்கடைக்குப் போய் விசாரிக்கும்போது, அந்த டிரஸ் 1800 ரூபாய் என்கிறார்கள். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால் தெரிந்தவர்களிடம் கடன் கேட்டுப் பார்க்கிறார். பலனில்லை. வேறு வழியின்றி கடைசி முயற்சியாக, தன் பேரன்  கதிர்  ஆசையாக வளர்த்துவரும் ஆட்டை விற்க முடிவு செய்கிறார். ஆனால், அது அய்யனார் சாமிக்கு நேர்ந்து விட்ட ஆடு என்பதால், உள்ளூரில் யாரும் வாங்க மறுக்கிறார்கள்.

மறுபுறம், ஒரு முஸ்லிம் நடத்தும் கறிக்கடையில் கூலி வேலை பார்ப்பவர் வெள்ளைச்சாமி (காளி வெங்கட்). குடிகாரர். விடிந்து வெகுநேரமானாலும் – மனைவி உக்கிரம் காட்டினாலன்றி – தானாக படுக்கையிலிருந்து எழும் பழக்கம் இல்லாதவர். அத்தை மகளைக் காதலிக்கும் வயதில் ஒரு மகன் இருக்கிறார் அவருக்கு.

வெள்ளைச்சாமி தினமும் வேலைக்குத் தாமதமாக வருவது, கறிக்கடை உரிமையாளரின் மகனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஏற்படும் வாக்குவாதத்தில் வெள்ளைச்சாமி வேலையை விட்டு விலகுவதோடு, உனக்குப் போட்டியாக தீபாவளியன்று சொந்தமாக கறிக்கடை தொடங்குகிறேனா, இல்லையா… பார்… என சவாலும் விடுகிறார். சவாலில் ஜெயிக்க, கறி வியாபாரத்துக்கான ஆடு வாங்கும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால், மொடாக்குடியர் என பெயர் வாங்கிவிட்ட அவரது பேச்சை நம்பி கடனுக்கு ஆடு கொடுக்க யாரும் முன்வரவில்லை.

இறுதியில், செல்லையா தாத்தா ஆடு விற்கும் முயற்சியில் இருப்பதை அறிந்து, சாமிக்கு நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவருடைய ஆட்டை பேரம் பேசி, 500 ரூபாய் மட்டும் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, மீதியை இரவுக்குள் கொண்டு வந்து கொடுத்துவிட்டு ஆட்டைப் பிடித்துச் செல்வதாக கூறிவிட்டுப் போகிறார் வெள்ளைச்சாமி.

இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் சிறுவன் கதிர். தான் ஆசையாக வளர்க்கும் ஆட்டை தீபாவளியன்று வெட்டிக் கொன்று விடுவார்கள் என பதறுகிறான். “கருப்ப விற்க வேணாம்” என்று தாத்தாவிடம் கெஞ்சுகிறான். “நீ கேட்ட டிரஸ் வாங்க இதை விட்டால் வேறு வழியில்லை” என்று பேரனை சமாதானப்படுத்த முயலுகிறார் தாத்தா. “எனக்கு டிரஸ் வேணாம். கருப்பு நம்ம கூட இருந்தா போதும்” என்கிறான் கதிர். தாத்தா அதை கருத்தில் எடுத்துக்கொள்வதாக இல்லை.

விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் இரவு மீதிப்பணத்தைக் கொடுத்து ஆட்டைப் பிடித்துச்செல்ல வருகிறார் வெள்ளைச்சாமி. ஆனால் ஆட்டைக் காணோம். நான்கு திருடர்கள் அந்த ஆட்டை திருடிக் கொண்டுபோய் குட்டிவேனில் ஏற்றிக்கொண்டு சிட்டாய் பறக்கிறார்கள். அவர்களை ஆட்டோவில் செல்லையா தாத்தா, பேரன் கதிர், வெள்ளைச்சாமி ஆகியோர் துரத்திக்கொண்டு போகிறார்கள்.

அவர்கள் திருடர்களிடமிருந்து ஆட்டை மீட்டார்களா, இல்லையா? அந்த ஆட்டை வெள்ளைச்சாமி வெட்டி விற்றாரா, இல்லையா? கதிர் ஆசைப்பட்டுக் கேட்ட டிரஸ் அவனுக்கு கிடைத்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனலாகவும், ஏற்கத் தக்க வகையிலும் விடை அளிக்கிறது ‘கிடா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1a

இம்மண்ணுக்கேற்ற முகமும், உடல்மொழியும், தனித்துவமும் கொண்ட பூ ராம், செல்லையா தாத்தா கதாபாத்திரத்தில் முழுமையாக தன்னைப் பொருத்திக்கொண்டு, பேரன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் கிராமத்து ஏழைத் தாத்தாவாக தத்ரூபமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். திரையில் அவர் வரும்போதெல்லாம், இம்மாபெரும் கலைஞன் இப்போது இல்லையே என்ற எண்ணமும் உடன் வந்து, மனம் விம்முவதை தவிர்க்க முடியவில்லை.

எட்டு வயது பேரன் கதிராக, இயக்குனர் விருமாண்டியின் மகன் மாஸ்டர் தீபன் நடித்திருக்கிறார். சின்னச் சின்ன முகபாவங்களில் துல்லியமான உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். தொலைந்த ஆட்டைத் தேடி அலைகையில், அது கிடைக்க வேண்டும் என்ற ஏக்கமும், அப்படி கிடைத்தால் அதை வெட்டிக் கொன்று விடுவார்களே என்ற பயமும் கலந்த பதட்டமான மனநிலையை, ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர் வெளிப்படுத்தியிருப்பது அருமை. எதிர்காலத்தில் மிகச் சிறந்த நடிகராய் வருவார் என்ற நம்பிக்கையை இப்படத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளார்.

சமீபகாலமாக ஒன்றுக்கொன்று வித்தியாசமான குணச்சித்திர வேடங்களில் பட்டையைக் கிளப்பி வரும் காளி வெங்கட், இதில் கறிக்கடையில் வேலை பார்க்கும் வெள்ளைச்சாமியாக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் பொதிந்துள்ள கனத்தையும், காமெடியையும் மிகச் சரியாக புரிந்துகொண்டு ரசிப்புக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெரும்பாலான கிராமத்து தாய்மார்களிடம் ஒரு விசேஷ குணம் உண்டு. கணவனை மலை போல் நம்பி ஒதுங்கியிருப்பார்கள். அதே நேரத்தில், பிரச்சனையை கணவன் சமாளிக்க முடியாமல் தளரும்போது, ‘நான் இருக்கிறேன்’ என்று டக்கென உள்ளே வந்து பிரச்சனையை பிரமாதமாகத் தீர்த்து சுமூகநிலையை ஏற்படுத்திவிடுவார்கள். அத்தகைய தாய்மார்களின் பிரதிநிதிகளாக இதில் செல்லையா தாத்தாவின் மனைவியும், வெள்ளைச்சாமியின் மனைவியும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை வழங்கி, மனம் நெகிழச் செய்திருக்கிறார்கள்.

ஒரு சிறுவனுக்கும், அவன் வளர்க்கும் ஆட்டுக்கும் இடையிலான பந்தத்தை மையமாக வைத்து, கிராமத்து எளிய மக்களையும், அவர்களது வாழ்வியலையும் இணைத்து, சுவாரஸ்யமான கதை, திரைக்கதை, உரையாடல் அமைத்து, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வகையில் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரா.வெங்கட். கதையில் திருப்பங்கள் வேண்டும் என்பதற்காக செயற்கையாக எதையும் திணிக்காமல், ஆற்றொழுக்காக வளர்ந்து செல்லும் கதையில், அதன் போக்கில் ஏற்படும் திருப்பங்களை மட்டும் கவனமாகத் தேர்வு செய்து காட்சிகளை உருவாக்கியிருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, அவற்றுக்கு பொருத்தமான நடிப்புக் கலைஞர்கள் தேர்வு ஆகியவற்றிலும் இயக்குனரின் கலைத் திறன் வெளிப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து இது போல் நல்ல திரைப்படங்களைக் கொடுக்க இயக்குனருக்கு வாழ்த்துகள்.

எம்.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு, ஆனந்த் ஜெரால்டினின் படத்தொகுப்பு, தீசனின் இசை ஆகியவை இயக்குனரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘கிடா’ – அனைத்து தரப்பினரும் குடும்பம் குடும்பமாக கண்டு, உண்டு மகிழத் தக்க தீபாவளி விருந்து!