”கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்”: நடிகர் கிச்சா சுதீப் அறிவிப்பு! ரசிகர்கள் எதிர்ப்பு!!

கன்னட திரையுலகில் முன்னணி நாயக நடிகராக திகழ்ந்து வருபவர் கிச்சா சுதீப். நானி – சமந்தா நடிப்பில் ராஜமவுலி இயக்கிய ’நான் ஈ’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப், அதன் மூலம் கன்னட ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாள ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

சமீபத்தில் இவர் நடித்த விக்ராந்த் ரோனா திரைப்படம் கன்னடம் மட்டுமின்றி பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியானது. முன்னதாக பாகுபலி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், விஜய் நடித்த ’புலி’ திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதேபோல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ’முடிஞ்சா இவன புடி’ என்ற தமிழ் படத்திலும் இவர் நாயகனாக நடித்து இருந்தார்.

இப்படி பல மொழிகளில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் கிச்சா சுதீப், மே மாதம் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், இதற்காக  பாரதிய ஜனதா கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாகவும், அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் கட்சியில் இணைவார் என்றும் செய்திகள் வெளியாகின.

பெங்களூருவில் நடிகர் கிச்சா சுதீபிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நான் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக வரும் தகவலில் உண்மை இல்லை. பாரதிய ஜனதா கட்சிக்காக நான் பிரச்சாரம் செய்ய உள்ளேன்” என்றார்.

இதற்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர். #WeDontWantKicchaInPolitics என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் தற்போது டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.