“ஆரியம் விரிக்கும் மத – சாதி வலையில் ஈழத்தமிழர் சிக்க வேண்டாம்!” – கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஈழத் தமிழர்கள் என்றும் திராவிட இனத்தின் தொப்புள்கொடி உறவுகள்.
ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆரியர்கள் அதிகம் புகாவிட்டாலும் ஆரியம் புகுந்து சாதியும், பக்தி என்ற பெயரில் மூடநம்பிக்கைகளும் அவர்களிடம் உள்ளே புகுந்தது உண்மை. இன்னும் இவ்வளவு பெரிய கொடுமை, பேரிழப்புகள், இனப்படுகொலைகள் நடந்தும்கூட, வேறு வழியின்றி புலம் பெயர்ந்து வாழும் நிலையிலும், சாதியாலும், பல்வேறு மூடநம்பிக்கை மீது, இந்து மதவெறி சாமியார்கள் மீது வைத்துள்ள அளவற்ற மூடப்பக்தியாலும் இழக்கக் கூடாத பகுத்தறிவு – தன்மானத்தை அவர்கள் இழந்துவருவது வேதனை அளிக்கிறது. அவர்கள்பால் உண்மையான அக்கறையும், கவலையும் உள்ளது. இதனை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இதுவாகி விட்டது.
அவர்களின் வாழ்வுரிமைக்காக உயிர்த் தியாகங்கள், சிறைவாசங்கள் போன்ற பலவற்றையும் இன்முகத்தோடு ஏற்றும் இன்னும் அவர்களுக்கு விடியல் வரவில்லையே என்று இன உணர்வு, மொழி உணர்வுடனும், மனிதநேய உணர்வாலும், பண்பாட்டுப் பாதுகாப்பு உந்துதலாலும் இன்றும் ஏக்கத்தில் உள்ள உறவுகள் திராவிட – தமிழ் உணர்வாளர்கள். இலங்கையில் உள்ள கதிர்காம முருகன்கள் – அவர்கள் வணங்கும் இந்துக் கடவுள் எந்த வகையில் உதவியது அவர்களுக்கு?
அங்கே கொன்றழிக்கப்படுபவர்கள் நம் இந்துக்கள்தான் என்ற உணர்வு இங்குள்ள ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி காவிகள் வடபுலத்தவர்களுக்கு, சமஸ்கிருத ஆதிக்கவாதிகளுக்கு – விடுதலைப் போராளி களத்தில் நின்றபோதும் சரி, பிறகும் இன்றுவரையில் உண்டா? அவர்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராளிகளுக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? “தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், தமிழ்மொழி வெறியர்கள், தமிழ் வெறியர்கள்”.
இந்த மண்ணில் இதனை எதிர்கொண்ட இயக்கம் திராவிடர் இயக்கங்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு, இந்துத்துவாவாதிகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக, ஏவுகணைகளாக ஆகலாமா?
இனி எதிரிகளின் சடகோபத்தை சாத்திக்கொள்ள உணர்ச்சியாகப் பேசியவர்கள் அந்த உணர்வைத் துறக்கலாமா? மீண்டும் ‘புதிய ராமாயணம்’ தொடங்கலாமா? விபீடணத் துரோகம் துளிர்க்கலாமா? கும்பகர்ணனுக்கு இருக்கும் மரியாதை விபீடணன்களுக்கு என்றைக்காவது உண்டா? ‘ராவணன் என் பாட்டன்; நான் அவனின் பேரன்’ என்று கருணாநிதி கூறியது மறந்துவிட்டதா?
ஆரியம் வீரத்தால் என்றும் திராவிடத்தை வீழ்த்தியதில்லை. ஆனால், சூதால், சூழ்ச்சியால், பிரித்தாளும் தந்திரத்தால்தான்.
இருவேறு பண்பாடுகள் – இந்தத் தொப்புள் கொடி உறவுகளின் கொள்கை லட்சியங்களுக்கு எதிராக, ஆரிய வில்லுக்கு ‘அம்புகளாக’லாமா? பிரதமர் இந்திரா காந்தியை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே சந்தித்தபோது, நாம் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள்; உங்கள் மூக்கும் எம் மூக்கும் ஒரே மாதிரி என்று சொன்னது மறந்துவிட்டதா?
சில ஆண்டுகளுக்குமுன் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஏற்பாடு செய்த – கனடா நாட்டு டொரொன்டோவில் பேசும்போது சொன்னேன். “வாழ்வுரிமைக்குப் போராடி, இனப்படுகொலையிலிருந்து தப்பி வந்த நீங்கள் வந்து உங்களது ஈடு இணையற்ற உழைப்பால், நாளும் புது வாழ்வு பெறுவது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதேநேரத்தில், உங்களுக்கு ஒன்றை உரிமையுடன் சுட்டிக்காட்டுவது எம் கடமை. எத்தனையோ முக்கியமானவற்றை ஈழத்தில் விட்டுவிட்டும் கஷ்டப்பட்டு உழைத்த சொத்துகளைக்கூட விட்டுவிட்டு வந்துள்ளீர்கள். கடலில் தூக்கி எறிந்திருக்க வேண்டிய சாதி என்ற சுமையை தூக்கி எறியாமல், இந்த நாட்டிலும் கையோடு கொண்டு வந்துவிட்டீர்கள். அதைத் தூக்கி எறியுங்கள்” என்றேன்.
இளைஞர்கள் மத்தியில் அக்கருத்துக்குப் பலத்த வரவேற்பு இருந்தது. தனியே வந்து சந்தித்து பெரியார் பற்றியும், சாதி ஒழிப்பு பற்றியும் ஈழத்து இளைஞர்கள் புதிய சிந்தனைகளைப் பெற்றார்கள் – பெறுகிறார்கள். அதுபோல, ஐரோப்பிய நாடுகளில் குடியேறி நாளும் – காலநேரம் பார்க்காது உழைக்கும் ஈழத் தமிழர்களை சாமியார்களும் ஏமாற்றி, பக்தி மயக்க மருந்தைக் கொடுத்து சுரண்டும் படலம் தொடர்கதையாக உள்ளது.
ஏழு பேர் விடுதலைக்குக் கதவை மூடுபவர்கள் யார் என ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். ஆரியம் வேறு – திராவிடம் வேறு. ‘ஆரிய மாயை’யிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளிடம் சரணடையாதீர்கள், வீண் பழி சுமக்காதீர்கள்.
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.