கெழப்பய – விமர்சனம்
நடிப்பு: கதிரேசகுமார், கிருஷ்ணகுமார், விஜய ரண தீரன், கே.என்.ராஜேஷ், பேக்கரி முருகன், அனுதியா, உறியடி ஆனந்தராஜ் மற்றும் பலர்
இயக்கம்: யாழ் குணசேகரன்
ஒளிப்பதிவு: அஜித்குமார்
படத்தொகுப்பு: கே.என்.ராஜேஷ்
இசை: கெபி
தயாரிப்பு: ‘சீசன் சினிமா’ யாழ் குணசேகரன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
“இலக்கணம் மீறிய கவிதைகள்” என்பதைப் போல, “இலக்கணம் மீறிய திரைப்படங்கள்” அவ்வப்போது அத்தி பூத்தாற்போல வருவதுண்டு. அவை வழக்கமான எந்த மசாலாவும் இல்லாமல், எந்த ஃபார்முலாவுக்குள்ளும் அடங்காமல், உருவத்திலும், உள்ளடக்கத்திலும், கதை சொல்லலிலும் முற்றிலும் வித்தியாசமாக, ரொம்பப் புதுசாக இருக்கும்; பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான புத்தம் புது அனுபவத்தைக் கொடுக்கும். அத்தகைய ‘இலக்கணம் மீறிய திரைப்படம்’ தான் ‘கிழப்பய’.
சுமார் 65 வயது மதிக்கத் தக்க பெரியவர் கதிரேசகுமார், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சாமானியருக்கே உரிய அவரது சாதாரண வாழ்க்கை, ஒருநாள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கிறது.
அன்று கதிரேசகுமார் தனது இரு சக்கர மிதிவண்டியில், கிராமப்புறத்தின் குறுகிய ரோட்டின் நடுவில் மெதுவாக சென்றுகொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் வரும் ஒரு கார் அவரை நெருங்குகிறது. அந்த காரில் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும், டிரைவர் உட்பட நான்கு ஆண்களும் இருக்கிறார்கள்.
ஒரு கார் மட்டுமே செல்லக்கூடிய அந்த குறுகலான ரோட்டின் நடு மையத்தில் கதிரேசகுமாரின் மிதிவண்டி செல்வதால், அவரைக் கடந்து முன்னே செல்ல காரால் முடியவில்லை. காருக்கு வழிவிடுமாறு கார் டிரைவர் ஹாரன் அடிக்கிறார். ஆனால் கதிரேசகுமார் காது கேளாதவர் போல், வழிவிடாமல் நடுரோட்டில் மெதுவாக சென்றுகொண்டிருக்கிறார். கார் டிரைவர் இடைவிடாமல் ஹார்ன் அடித்துப் பார்க்கிறார். கதிரேசகுமார் வழிவிடுவதாக இல்லை.
காரிலிருந்த ஆண்கள் பொறுமையிழந்து இறங்கி வருகிறார்கள். கதிரேசகுமாரை ஓரமாக செல்லுமாறு கூறுகிறார்கள். காரில் கர்ப்பிணி பெண் இருப்பதால், அவசரமாக போக வழிவிடுமாறு கேட்கிறார்கள். அதற்கு அவர் மசியாததால் திட்டுகிறார்கள். மிரட்டுகிறார்கள். அவரது மிதிவண்டியைத் தள்ளிவிடுகிறார்கள். இத்தனை நடந்தபோதும், வாய் திறந்து ஒரு வார்த்தைகூட பேசாத கதிரேசகுமார், நடுரோட்டிலேயே பயணிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
காரில் வந்தவர்கள் விரக்தி அடைகிறார்கள். ஆத்திரத்தில் ஆளாளுக்கு அவரை அடிக்கிறார்கள். மிதிக்கிறார்கள். அவரது முகமெல்லாம் ரத்தம் வழிகிறது. அடி தாங்க முடியாமல் அவர் இறந்துவிடுவாரோ என்று நமக்கு உள்ளம் பதைபதைக்கிறது. ஆனால் அவரோ, அவர்களின் வன்முறைக்கு எதிர்வினையாக காரின் டயர்களிலுள்ள காற்றை பிடுங்கி விடுகிறார். கார் சாவியை எடுத்து தூரத்து புதருக்குள் வீசி எறிகிறார். மிதிவண்டியை ரோட்டின் குறுக்கே காரை மறித்து நிறுத்தி, மன உறுதியுடன் பிடிவாதமாக நிற்கிறார்…
படம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு, பெரியவர் கதிரேசகுமாரின் நடத்தை வியப்பாகவும், குழப்பமாகவும், சில நேரம் கோபமாகவும் இருக்கிறது. வழிவிடுமாறு கேட்டு இடைவிடாமல் ஹாரன் அடித்ததற்காகவா இவர் இப்படி நடந்து கொள்கிறார்? அல்லது வேறு காரணம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு வித்தியாசமாக விடை அளிக்கிறது ‘கெழப்பய’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் கதிரேசகுமார் அமைதியான சிறந்த நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தின் சாரத்தை கச்சிதமாக சித்தரித்துள்ளார். கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்திருக்கிறார். இந்த வயதிலும் காட்டுப் பாதையில், கொளுத்தும் வெயிலில், அவர் எனர்ஜி குறையாமல் நடித்திருப்பது பாராட்டத் தக்கது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணை காரில் பார்த்த பிறகும் கூட, அவர் வழிவிடாமல் பிடிவாதம் காட்டுவது நமக்கு கேள்வியை எழுப்புகிறது. முரடர்களின் தாக்குதலை எதிர்கொள்ளும்போது அவர் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது. முக்கால்வாசி படம் வரை ஒரு வார்த்தை கூட பேசாமல், மௌனமாக, எக்ஸ்பிரஷன் மூலம் மட்டுமே அவர் உணர்ச்சிகளை நமக்கு கடத்துவது, அவரது அபார நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறது. வாழ்த்துகள்.
காரில் வருபவர்களாக வரும் நடிப்புக் கலைஞர்களும், ஒரு சாமானியன் வழி விடவில்லை என்றால் எப்படியெல்லாம் கோபத்தையும், ஆத்திரத்தையும் காட்டுவார்களோ அதுபோல் வெளிப்படுத்தி, படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்கள். கிராம நிர்வாக அதிகாரியாக வரும் உறியடி ஆனந்தராஜ் இரு தரப்பையும் சமரசம் செய்ய முயல்பவராக தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
கொஞ்சம் கவனக் குறைவாக கையாண்டால் கூட போரடித்துவிடும் ஆபத்துள்ள இப்படத்தை மிக கவனமாக கையாண்டு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குனர் யாழ் குணசேகரன் பாராட்டுக்குரியவர். நடிகர்கள் தேர்வும், அவர்களை வேலை வாங்கிய விதமும் அவரது இயக்கத் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. வயதானவரை கதையின் நாயகனாக வைத்து, எவ்வித சமரசமும் செய்யாமல் படத்தை இயக்கியிருப்பது அவர் மீது அவருக்குள்ள நியாயமான தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் காட்டுகிறது.
ஒளிப்பதிவாளர் அஜித்குமார் போட்டிருக்கும் உழைப்புக்கு அவருக்கு கைகொடுக்கலாம். கெவியின் தனித்துவமான பின்னணி இசை படத்தை வித்தியாசமாக காட்ட உதவியிருக்கிறது.
வயதானவர்கள் எதுவும் செய்ய இயலாதவர்கள் என்று எண்ணுபவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதத்தில் இப்படம் உருவாகி வெளிவந்திருக்கிறது.
‘கிழப்பய’ – புது அனுபவம் பெற கண்டு களிக்கலாம்!