“இந்துத்துவா மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டேன்!” – கேரள முதல்வர்
கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்துத்துவா அமைப்புகளின் எதிர்ப்பை மீறி மங்களூரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்துத்துவா அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்றார் அவர்.
கர்நாடக மாநிலம், மங்களூருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பேரணி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளாவில் கடந்த ஆண்டில் மட்டும் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், இதை கேரள அரசு தடுக்காமல் ஊக்குவிப்பதாவும் கூறி பினராயி விஜயனின் வருகைக்கு மங்களூரு பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத், ராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வருகையை கண்டித்து மாவட்டம் முழுவதும் நேற்று முழுஅடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து மங்களூரு பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கையாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மங்களூரு நேரு மைதானத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பேரணி மாநாட்டில் பினராயி விஜயன் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “தைரியம் இருந்தால் மங்களூரு வந்து பார் என இந்துத்துவா அமைப்பினர் மிரட்டினார்கள். அண்டை மாநில மக்கள் அன்புடன் அழைத்ததால் இங்கு தைரியமாக வந்துள்ளேன்.
நான் தலசேரி பிரினர் கல்லூரியில் படித்தவன். இந்துத்துவா அமைப்பினர் திரண்டிருந்த அந்த கல்லூரியில் சிறுவயதிலேயே தைரியமாக வலம் வந்தவன். இத்தகைய மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டேன். முதல்வராக இருப்பதால் மட்டுமல்ல, தனி ஆளாக கூட பினராயி விஜயனை யாராலும் தடுக்க முடியாது.
பாஜக ஆட்சியில் சிறுபான்மையினரும், ஒடுக்கப்பட்டோரும், கம்யூனிஸ்ட்களும் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.
பினராயி விஜயனின் வருகையை கண்டித்து நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தில் 12 பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட கடைகளும் கொளுத்தப்பட்டன. மேலும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனால் மங்களூருவில் நேற்று பதற்றம் நிலவியது.