“கீழடியில் அந்த ஒரு ஆளு தான் நியாயமாக வேலை பார்ப்பாரா?”: நிர்மலா சீதாராமன் திமிர் பேட்டி!
சிவகங்கை மாவட்டம் கீழடியில், வைகை ஆற்றங்கரை அருகே அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, அங்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆரிய / சமஸ்கிருத / பார்ப்பன பண்பாட்டுக் கலப்பில்லாத தமிழர் நாகரிகம் அந்நகரத்தில் தழைத்தோங்கியிருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் அங்கு ஏராளமாக தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.
சமஸ்கிருதத்துக்கும் மூத்த மொழி தமிழ் என்பதற்கான ஆதாரம் அங்கு கிடைத்து வருவதால், இந்த உண்மையை ஏற்க மனமில்லாத மோடியின் இந்துத்துவா அரசு, கீழடி ஆய்வை கைவிட பல வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, கீழடி அகழ்வாராய்ச்சி குழு தலைவர் அமர்நாத்தை, மத்திய அரசு, சமீபத்தில் இயற்றிய விதியை காரணம் காட்டி அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் உருவாகியுள்ள நிலையில், இன்று கீழடியை பார்வையிட மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் வந்தனர். அவர்களை கீழடி அகழ்வாய்வை பார்க்க விடாமல், “தமிழ் பண்பாட்டிற்கு எதிரான பாஜக அமைச்சர்களே, திரும்பிப் போங்கள்” என்று பல்வேறு தமிழ் அமைப்பினரும், பொதுமக்களும் முழக்கமிட்டனர்
இதனால் கடுப்பான நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாங்கள் அமர்நாத்தை மட்டும் மாற்றவில்லை. அவரை போன்ற 26 பேரை மாற்றியுள்ளோம். 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் இருக்கும் அதிகாரியை மாற்ற வேண்டும் என்பது விதி. அதன்படி மாற்றியுள்ளோம். அந்த ஒரு ஆளுதான் நியாயமாக வேலைப் பார்ப்பார். மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்?” என்று திமிராக கூறினார்.
அகழ்வாய்வுத் துறையின் தலைவராக உள்ள ஒரு அதிகாரியை “அந்த ஆளு” என்று விஷம் கக்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார்கள்.