”சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி!” – வைரமுத்து
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2014-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதைப் பரிசோதித்ததில் 2,600 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்திக் கொண்டது. இதையடுத்து தமிழக அரசின் தொல்லியல் துறை 2017-18, 2018-19 ஆண்டுகளில் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்தியது. நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த 5,820 அரும்பொருட்களின் தேர்ந்தெடுத்த மாதிரிகள் சர்வதேச ஆய்வகங்களுக்கும் தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டன.
ஆய்வகச் சோதனைகளின் அடிப்படையிலான முடிவுகள் தொல்லியல் அறிஞர்கள் குழுவால் சரிபார்க்கப்பட்டு ”கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது.
சிந்து வெளியில் கண்டறிப்பட்ட எழுத்துகளுக்கும் கீழடி எழுத்துகளுக்கும் இடையிலான ஒப்புமைகளையும் இந்த வெளியீடு எடுத்துக்காட்டுகிறது. மேலும் இந்த அறிக்கை, கீழடி பண்பாடு 2,600 ஆண்டுகள் பழமை கொண்டது என்பதோடு, கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற முக்கியமான செய்தியை வெளிக்கொணர்ந்து, தமிழர்களின் நகர நாகரிகத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னகர்த்தி உள்ளது.
கீழடி அகழாய்வு முடிவுகளுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.
மேலும் ஊடகங்களின் ஒளி வேண்டும்;
மத்திய அரசின் துணை வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.