கீழடி அகழ்வாய்வை முடக்க மத்திய அரசு மீண்டும் சதி: இரா.முத்தரசன் கண்டனம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழ்வாய்வு பணி நடைபெற்று வந்தது.
மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ’ணா தலைமையில் இப்பணி சிறப்புற நடைபெற்று வந்தது.
முதலாமாண்டு 43 குழிகள் தோண்டப்பட்டதில் 1800 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. இரண்டாமாண்டு 59 குழிகள் தோண்டப்பட்டதில் சுமார் 3800 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவ்வாய்வின் மூலம், தமிழகத்தில் முதல்முறையாக நகர நாகரிகம் இருந்தற்கான ஆதாரமாக நிறைய கட்டிடங்கள் கிடைத்தன. இதன் மூலம் இலக்கியங்களில் இருந்த குறிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
110 ஏக்கர் பரப்பளவு உள்ள தொல்லியல் மேட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மட்டும் 102 அகழ்வாய்வுக் குழிகளில் சுமார் 5300 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடங்காமல் இழுத்தடிக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியை தமிழ்நாட்டில் அனைவரும் கண்டித்த காரணத்தால் வேண்டா வெறுப்பாக, தவிர்க்க முடியாமல் மூன்றாம் கட்ட பணிக்கு அனுமதி அளித்த மத்திய அரசு தற்போது இப்பணிகளை முடக்கும் நோக்கத்துடன் இப்பணியில் மிகுந்த ஆர்வத்துடன் முனைப்பாக செயல்பட்டுவரும் கண்காணிப்பாளர் திரு.கே.அமர்நாத் ராமகிருஷ’ணாவை இடம் மாற்றம் செய்துள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
கண்காணிப்பாளர் நிலையில் உள்ள ஆய்வாளரை மாற்றிவிட்டு துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள ஒருவரை நியமனம் செய்திருப்பது, திட்டத்தை முடக்கச் செய்திடும் உள்நோக்கம் உடையதாகும். ஆய்வுப் பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற திரு.கே.அமர்நாத் ராமகிருஷ’ணாவின் இடமாறுதல் உத்திரவை ரத்து செய்தியுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.