கீ – விமர்சனம்
கல்லூரி மாணவராக இருக்கும் ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய அளவில் ஹேக் செய்து வரும் இவர் ஒருநாள் கேளிக்கை விடுதி ஒன்றில் ஹேக்கிங் மூலமாக பெண்களை கவர முயற்சி செய்கிறார். அப்போது அனேகா சோதி இவரது வலையில் சிக்குகிறார்.
பத்திரிகையாளரான இவர் நிறைய சாலை விபத்துகள் மர்மமான முறையில் ஏற்படுவதையும், அந்த விபத்துகளுக்கு ஹேக்கிங் ஒரு காரணமாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக அந்த விபத்துகளின் பின்னணி பற்றி தகவல்களை சேகரிக்க முடிவு செய்கிறார்.
இப்படி இருக்க தன்னை ஹேக் செய்தவர்கள் பற்றி விவரங்களை கண்டுபிடித்து தரும்படி அனேகா, ஜீவாவிடம் கேட்க, அவரும் பரிசோதித்து பார்க்கையில், அனேகாவை ஹேக் செய்தவர்கள் சாதாரண ஹேக்கர் அல்ல என்பது தெரிய வருகிறது.
இருப்பினும் வரும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தாண்டி ஜீவா தனது திறமைகளை காட்ட அந்த ஹேக்கர்கள் யார் என்பது தெரிய வருகிறது. அவர்களுக்கும் ஜீவா தான் ஹேக் செய்தார் என்பது தெரிந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ஜீவாவை கொலை செய்ய அந்த கும்பல் தேடி வருகிறது.
இதற்கிடையே கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் ஜீவாவும், நிக்கி கல்ராணியும் காதலிக்கிறார்கள்.
கடைசியில், ஜீவா இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே கீ படத்தின் மீதிக்கதை.
ஜீவா ஒரு கல்லூரி மாணவராக, ஹேக்கராக துறுதுறுவென்று நடித்துவிட்டு சென்றிருக்கிறார். நிக்கி கல்ராணியிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் பரபரக்கச் செய்கிறார். நிக்கி கல்ராணி இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான, அராத்து செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார். அனேகா சோதி முக்கிய வேடத்தில் வருகிறார்.
கோவிந்த சூர்யா வில்லத்தனத்தில் மிரட்ட, கட்டே ராஜேந்திர பிரசாத், மீரா கிருஷ்ணன், சுஹாசினி, மனோபாலா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ். ஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார். ஹேக்கிங்கை மையப்படுத்தி வரும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. சிறப்பான கதையை தயார் செய்திருந்தாலும், அது பயணிக்கும் வழியான திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். சென்டிமெண்ட், பாசம் என அனைத்தையுமே கொடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
`கீ’ – சுமார்!