கழுவேத்தி மூர்க்கன் – விமர்சனம்

நடிப்பு: அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஸ்காந்த், சரத் லோகித்சவா, ராஜசிம்மன், யார் கண்ணன், பத்மன் மற்றும் பலர்

இயக்கம்: சை.கௌதமராஜ்

ஒளிப்பதிவு: ஸ்ரீதர்

படத்தொகுப்பு: நாகூரான் ராமச்சந்திரன்

இசை: டி.இமான்

தயாரிப்பு: ‘ஒலிம்பியா மூவிஸ்’ அம்பேத்குமார்

பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார் – சதீஷ் – சிவா (டீம் எய்ம்)

படத்தின் தலைப்பே இப்படக்கதை மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கதையின் நாயகன் பெயர் ’மூர்க்கன்’ என்பதையும், அவன் யாரையோ கழுவிலேற்றிக் கொல்லுகிறான் என்பதையும் தலைப்பு சொல்லிவிடுகிறது. எனில் அவன் யாரை, ஏன் கழுவிலேற்றுகிறான் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்கிறது. அது தான் கதையும் கூட.

0a1f

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், இடைநிலைச் சாதியைச் சேர்ந்த மூர்க்கசாமி என்ற மூர்க்கனும் (அருள்நிதி),  ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்), சிறு வயதிலிருந்தே உயிர் நண்பர்களாக இருந்துவருகிறார்கள். ஆனால் சாதிவெறி மற்றும் பதவிவெறி பிடித்த மூர்க்கனின் தந்தை முத்து வழி விட்டானுக்கு (யார் கண்ணன்), ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பூமி நாதனுடன் சேர்ந்து தன் மகன் ஊர் சுற்றித்திரிவது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இந்நிலையில், முத்து வழி விட்டானின் இடைநிலைச் சாதியைச் சேர்ந்த முனியராஜ் (ராஜசிம்மன்), எதிர்க்கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்கிறார். அவர் தன் கட்சித் தலைவரை வரவேற்க ஊர் முழுக்க போஸ்டர் ஒட்ட உத்தரவிடுகிறார். அப்படி பூமிநாதன் இருக்கும் தெருவில் போஸ்டர் ஒட்டும்போது அவருக்கும் கட்சிக்காரர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. மூர்க்கன் தனது நண்பனுக்காக இறங்கி சண்டை செய்து எதிரிகளை ஓடவிடுகிறார். இதற்கிடையே ஊரில் மாநாடு நடக்கக்கூடாது என்று நீதிமன்றம் மூலமாகத் தடை வாங்குகிறார் பூமிநாதன். இதனால் முனியராஜின் மாவட்டச் செயலாளர் பதவியே பறி போகிறது.

கொதித்தெழும் முனியராஜ் செய்யும் அடாவடிச் செயல்கள் பூமிநாதன் மற்றும் மூர்க்கனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகின்றன என்பதை அதிரடி ஆக்‌ஷன் தெறிக்கச் சொல்வதே ‘கழுவேத்தி மூர்க்கன்’.

இந்திய சமூகம் சாதியச் சமூகம்; இதில் சாதிகள் ஏற்றத் தாழ்வாக ஒன்றின் கீழ் ஒன்றாக படிநிலை வரிசையில் அடுக்கப்பட்டிருக்கின்றன; இந்த சாதிபேதம் பல துன்ப துயரங்களுக்கு அன்றும் இன்றும் காரணமாக இருந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. காலத்தின் தேவை கருதி இந்த சாதிக் கொடுமையைச் சுட்டிக் காட்டி, சாதி ஒழிப்பின் தேவையைக் கோடிட்டுக் காட்டும் திரைப்படங்கள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. அத்தகைய திரைப்படம் தான் ‘கழுவேத்தி மூர்க்கன்’. படம் வணிக ரீதியிலும், கருத்தியல் ரீதியிலும் சிறப்பாக வந்திருக்கிறது. படக்குழுவினருக்கு பாராட்டுகள்.

நாயகன் மூர்க்கசாமி என்ற மூர்க்கனாக நடித்திருக்கும் அருள்நிதி, உணர்ச்சிபூர்வமான கிராமத்து ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். அவரது உயரத்துக்கும், உடலமைப்புக்கும் பொருத்தமாகவே ‘கிடா மீசை’ அமைந்திருக்கிறது. இந்த தோற்றம் காரணமாக அவர் எத்தனை பேரை அடித்து வீழ்த்துவதுபோல் நடித்தாலும் அது யதார்த்தம்போலவே இருக்கிறது. இத்தகைய ’சிங்கக்குட்டி’ தன்னைக் காதலிக்கும் பெண் முன் ‘பூனைக்குட்டி’யாய் பம்முவது சுவாரஸ்யமான நடிப்பு.

நாயகன் மூர்க்கனின் காதலி கவிதாவாக வருகிறார் துஷாரா விஜயன். அவர் வரும் காட்சிகள் எல்லாம் அத்தனை இளமையும் குறும்பும் நிறைந்திருக்கின்றன. நாயகனை கல்லால் அடித்து வம்புக்கு இழுப்பதும், பார்வையைக் காட்டியே அவரை வசியப்படுத்தும் நடிப்பிலும், காதலன் முத்தம் கேட்கும்போது மறுத்துவிட்டு, பின் ஒரு  துயரமான கட்டத்தில் கேட்காமலே முத்தம் கொடுத்து உருகுவதுமாய் பின்னி பெடலெடுத்திருக்கிறார்  துஷாரா.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல கருத்துக்களைச் சொல்லி ஒடுக்கப்பட்ட  சமூக இளைஞர்களை தயார்படுத்தும் முற்போக்கான பூமிநாதன் கதாபாத்திரத்தில் வரும் சந்தோஷ் பிரதாப் நல்ல நடிப்பை தந்திருக்கிறார். அவரது காதலி அழகுவள்ளியாக வரும் சாயாதேவியின் பார்வையும் நடிப்பும் பரவசப்படுத்துகிறது. எதிர்பாராமல் காதலனுக்கு நிகழும் மரணத்தில் அவரது உணர்ச்சிகரமான நடிப்பு இதயத்தைப் பிழிகிறது.

நாயகனின் தந்தை முத்து வழி விட்டானாக வரும் யார் கண்ணன், நாயகனின் ஆபத்பாந்தவனாக ‘உண்மை’ என்ற கதாபாத்திரத்தில் வரும் முனிஸ்காந்த், வில்லன் முனியராஜாக வரும் ராஜசிம்மன், காவல்துறை கண்காணிப்பாளர் பிருதிவ்குமார் ஐ.பி.எஸ்.ஆக வரும் சரத் லோகித்சவா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்கு உரிய நியாயம் செய்திருக்கிறார்கள்.

சாதிய ஏற்றத் தாழ்வுகளை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் சுயநலக்காரர்கள் செய்யும் சதிதான் இக்கால சாதியப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது என்ற கருத்தை துணிச்சலாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சை.கௌதம ராஜ். அதுபோல், ஒடுக்கப்பட்ட பிரிவுக்குள்ளும் சாதிப் பாகுபாடு இருப்பதை வேதனையுடன் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.

டி.இமானின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளின் உணர்ச்சிக்குத் தக்கவாறு இசைக்கப்பட்டிருக்கின்றன. ராமநாதபுரம் மாவட்ட கிராமத்து வாழ்வியலை கச்சிதமாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.

‘கழுவேத்தி மூர்க்கன்’ – கருத்துள்ள அதிரடி ஆக்சன் படம்! கண்டு களிக்கலாம்!