“தமிழை ஆண்டாள்” – கவிஞர் வைரமுத்துவின் முழு கட்டுரை (பகுதி1)

“தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று” என தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (13.01.2018) பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக அந்த அற்புதமான கட்டுரையை முழுமையாக TwitLonger.comல் பதிவேற்றம் செய்து, அதற்கான லிங்கையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும் படித்துப் பார்த்து சுயமாக முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காக அந்த முழுக் கட்டுரை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, Heronewsonline.com-ல்  வெளியிடப்படுகிறது. இதோ… முதல் பகுதி:-

# # # # #

பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது; தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது. “இன்னுமா உறக்கம்! எல்லே இளங்கிளியே! எழுந்து வா வெளியே” என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. ‘மார்கழி நீராட வாரீரோ மங்கையரே’ என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது. அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.

பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு. ‘எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.

“நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால், திங்கள் மும்மாரி பெய்யும்; நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்; வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும், ஆதலால் – மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்” – இப்படி உயிரியல் – வாழ்வியல் – சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.

வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது அல்லது திருப்பாவை செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் – ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிடமுடியாது. இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது. அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.

சமண – பெளத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது. கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற ‘மெய்ஞ்ஞானம்’ வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.

யாகம் – யக்ஞம் – தவம் – வேள்வி – விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் – காருண்யம் – செளலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுறமுடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது. எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள். எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள். இறை நேயம் என்பதே சாதி என்னும் மம்மர் அறுக்கும் மருந்து என்று நாயன்மார்களைப் போலவே ஆழ்வார்களும் நம்பினார்கள்.

“இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்” –என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்ததென்று சங்கூதினார்.

வர்க்கபேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை. இறைவன்முன் எல்லாரும் சமம் என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது; கொண்டு செலுத்தியது.

வைணவம் என்னும் திருமாலியம் தமிழர்க்குப் புதுவதன்று. ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்ற வரையறை தொல்காப்பியத்திலே சுட்டப்பெறுகிறது. கண்ணன் பலராமன் என்ற தொன்மங்கள் புறநானூற்றிலேயே புழங்கி வந்திருக்கின்றன.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்த காட்சி கண்ட காரிக்கண்ணனார் –
“பால்நிற உருவிற் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமியோனுமென்று
இருபெருந் தெய்வமும் உடன்நின் றாங்கு
உருகெழு தோற்றம்” (புறம் 58) – என்று பாடுகிறார்.

கண்ணனும் பலராமனும் இணைந்திருந்த தோற்றம்போல் சோழனையும் பாண்டியனையும் காட்சிப்படுத்துகிற காரிக்கண்ணனார், தெளிந்த சொல்லாட்சியில் ‘தெய்வம்’ என்கிறார். சங்க இலக்கியத்தில் தெய்வமென்று கொண்டாடப்பட்டவர்கள் ஏழாம் நூற்றாண்டில் கடவுள் உயரத்தில் காட்சி தருகிறார்கள்.

தெய்வம் – கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடுண்டு. தெய்வம் என்பது பழம்பொருள்; பழகிய பொருள். கடவுள் என்பது பரம்பொருள்; பழகாத பொருள். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வத்துள் வைக்கப்படலாம்’. தெய்வம் என்பது வழித்துணைப் பொருள்; கடவுள் என்பது வழிபடுபொருள். அது எட்ட முடியாதது. எல்லார்க்கும் வாய்க்காதது. அந்த எட்ட முடியாத கடவுளையும் எட்டமுடியும்; கணவனாகவே கைத்தலம் பற்ற முடியும். இடையறாது நினைந்து காதலுற்றுக் கனிவதொன்றே கடவுளை எட்டும் வழி என்று குறியீட்டு முறையில் சொன்ன கோட்பாடுதான் ஆண்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது.

பிறப்பு முதல் சீரங்கத்து மாயனோடு மாயமான நாள் வரையிலான ஆண்டாளின் வாழ்வில் உயிருள்ள சில கேள்விகள் ஊடாடுகின்றன. ஆண்டாள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?

அடுத்த வினா. ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது? குரு பரம்பரைக் குறிப்புகள்கொண்டு கி.பி 776 என்று கணிக்கிறார் சாமிக்கண்ணுப்பிள்ளை. ‘வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று’ என்ற திருப்பாவை வரிகொண்டு கி.பி 731 டிசம்பர் 18 என்று கணிக்கிறார்கள் வானூல் அறிஞர்கள். ஆழ்வார்களின் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்த மு.ராகவையங்காரின் கூற்று மெய்யாயின் ஆண்டாளின் காலம் 8ஆம் நூற்றாண்டின் மையம் என்று கொள்வதில் ஐயம் இல்லை.

பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில் பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது. பெருமாள் திருப்பெயரைப் பெரியாழ்வார் பாடக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை பெருமானுக்குப் பிச்சி ஆகிறாள்; தெய்வக் காதலில் திளைக்கிறாள்.

தன் உடலென்ற அழகும் உயிரென்ற பொருளும் கண்ணனுக்கு மட்டுமே காணிக்கை என்று கருதுகிறாள். வடபெருங்கோயிலான் ஆகிய வடபத்ரசாயிக்குப் பெரியாழ்வார் தொடுத்துவைத்த துய்ய மலர்மாலைகளைத் தனக்குத்தானே சூடிச்சூடிச் சுகப்படுகிறாள். பெரியாழ்வார் திகைக்கிறார். அவர் தேகத் திசுக்கள் தனித்தனியே துடிக்கின்றன. எல்லைமீறிய செயல் இதுவென்று உள்ளம் உடைகிறார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணக்கடவுள் “அவள் சூடிக்கொடுத்த மாலைகளைச் சூடுவதே சுகம்” என்று சொல்லி மறைகிறார். கோதையின் பெருமைகண்டு பித்துப்பிடித்து நிற்கிறார் பெரியாழ்வார்.

மகள் மங்கைப் பருவமுறுகிறாள். எடுத்து வளர்த்த பிறை பாற்கடல் குளித்தெழுந்து பெளர்ணமியாய் நிற்கிறது. மகளுக்கு மணாளன் தேட எத்தனிக்கும்போதுதான் இன்னோர் எதிர்வினை நிகழ்கிறது. ‘மானிடன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதா? மாட்டேன் தந்தையே!’ என்று நீட்டோலை வாசிக்கிறாள் கிடந்த திருக்கோலத்தின்மீது படர்ந்த நெஞ்சினள்.

“உன்னித்தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்கிறாள். “மாலிருஞ்சோலைஎம் மாயற்கல்லால் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன்” என்று உறுதி உரைக்கிறாள்.

தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது. இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படிச் சாத்தியம்? இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?

ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார். ஆனால் மொழியின் குழைவிலும், தமிழின் அழகிலும், உணர்ச்சியின் நெகிழ்விலும், உரிமையின் தொனியிலும் ஆணாழ்வார்களை விடவும், பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே! யாது காரணம்?

(கட்டுரை தொடர்ச்சி – இரண்டாம் பகுதியில்)

இரண்டாம் பகுதிக்கான லிங்க்: http://www.heronewsonline.com/kavingnar-vairamuthu-article-on-andal-part-2/