காவிரி தீர்ப்பை அமல் செய்யாமல் காலம் கடத்தும் மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!

காவிரி தீர்ப்பை அமல் செய்ய 42 நாட்கள் கெடு விதித்திருந்தது உச்ச நீதிமன்றம். ஆனால் தீர்ப்பை அமல் செய்யாமல் காலக்கெடு முடியும் வரை காத்திருந்த இந்திய ஒன்றிய மோடி அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தமிழகமும், கர்நாடகமும் மாறுபட்ட கருத்துக்களை கூறுகின்றன. கர்நாடக மாநிலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அல்ல என்று தெரிவிக்கிறது. ஆனால் தமிழகமோ, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

மத்திய அரசு மூலம் எந்தவிதமான செயல்திட்டம் உருவாக்கினாலும், மீண்டும் மாநிலங்கள் நீதிமன்றத்தை நாடும். எனவே, மேற்கொண்டு மாநிலங்கள் நீதிமன்றத்தை நாடாமல் இருப்பதற்காக, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு தெளிவான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

மேலும், தீர்ப்பாயம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமா, அந்த வாரியத்தில் நிர்வாக, தொழில்நுட்பக் கூறுகளை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். வாரியத்தின் பணிகள், எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் தேவைப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்.

அது மட்டுமல்லாமல், கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காவிரி விவகாரம் என்பது மிகவும் உணர்வுப்பூர்வ பிரச்சினையாகும். கடந்த காலங்களில் இருந்து அவ்வாறு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த காலங்களில் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மனித உயிர்களும் பலியாகியுள்ளன, ஏராளமான சொத்துகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. எனவே, தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றாலும் கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தெரிவது என்னவென்றால், மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது; அப்படியே அமைத்தாலும், ஏகப்பட்ட திருத்தங்கள் செய்து, கர்நாடகத்துக்கு பலனளிக்கும் வகையில், அதிகாரங்கள் இல்லாத ஒரு பொம்மை வாரியத்தைத் தான் அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.