கவரைப்பேட்டை ரயில் விபத்து: 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதைதொடர்ந்து, விபத்துக்குள்ளான ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் இருந்த தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாற்று ரயில் மூலமாக பொன்னேரியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து தர்பங்காவுக்கு நேற்று முன்தினம் அதிகாலை சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அங்கிருந்த ‘ஸ்விச் பாய்ன்ட்’ போல்ட்கள் கழற்றப்பட்டு இருந்தன. இது வழக்கத்துக்கு மாறாக இருந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை கொண்டு சென்றனர்.

இந்நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய அதிகாரி முனிபிரசாத் பாபு, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிந்தனர். காயம் மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், கவனக்குறைவான செயலால் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரிக்கவும் ரயில்வே போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.