கவலை வேண்டாம் – விமர்சனம்

அசிங்கமான ஆபாசப் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் அழுகிய மனம் கொண்டவர்கள் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள கேவலமான படம் ‘கவலை வேண்டாம்’.

நாயகன் ஜீவாவும், நாயகி காஜல் அகர்வாலும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் செய்த நாளிலேயே இருவரும் கருத்து வேறுபட்டு பிரிந்து போகிறார்கள். பின்னர், சில காலம் கழிந்த நிலையில், ஜீவா சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கிறார்.

அதேசமயம் காஜல் அகர்வாலுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. மறுமுனையில் ஜீவாவை சுனைனா ஒருதலையாக காதலித்து வருகிறார். ஜீவாவுக்கோ காஜல் அகர்வாலுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதுதான் விருப்பம்.

இந்த நிலையில், பாபி சிம்ஹாவை திருமணம் செய்துகொள்வதற்காக ஜீவாவை முறைப்படி விவாகரத்து செய்ய காஜல் அகர்வால் முடிவெடுக்கிறார். இதற்காக ஜீவாவிடம் விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க செல்கிறார். அப்போது, ஜீவா தன்னுடன் ஒருவார காலம் தங்கியிருந்து, தன்னுடைய சொல்படி நடந்தால் அவர் கேட்டபடி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு தருவதாக சொல்கிறார்.

இதையடுத்து, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ஜீவா, சுனைனா மற்றும் அவரவர்களுடைய நண்பர்கள், தோழிகள் என பெரிய பட்டாளமே ஒரே வீட்டில் தங்குகிறது. இந்த கலகலப்பான காலகட்டத்தின் இறுதியில் ஜீவாவுக்கும் காஜலுக்கும் விவாகரத்து நடந்ததா? இல்லையா? யார், யாரை திருமணம் செய்தார்கள்? என்பது மீதிக்கதை.

எந்தவித லாஜிக்கும் இல்லாமல், படம் முழுக்க ஆபாச வசன நகைச்சுவையை மட்டுமே நம்பி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டீகே. அதையே நம்பி படத்தை தயாரித்திருக்கிறார் எல்ரெட் குமார். ஆகவே, இந்த இரண்டு பேரையும் நாமும் எந்த அளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளில் ஆபாசமாக திட்ட முடியுமோ அந்த அளவுக்கு திட்டலாம். வாங்கிக் கட்டிக்கொள்ள முழுத் தகுதி உள்ளவர்கள் இந்த இருவரும்.

நகைச்சுவை படங்களில் நடிப்பது ஜீவாவுக்கு ஒன்றும் புதிதல்ல. அவருக்கு ஏற்கெனவே அனுபவம் இருந்தாலும், அவருக்குண்டான நடிப்புக்கு இந்த படத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை.

காஜல் அகர்வால் படம் முழுக்க கவர்ச்சியை தூக்கலாக வைத்து நடித்திருக்கிறார். சுனைனா, பாபி சிம்ஹா படம் முழுக்க வந்தாலும், அழுத்தமான கதாபாத்திரம் இல்லை.

வேறென்ன சொல்ல…?

‘கவலை வேண்டாம்’ – குப்பை!