காட்டேரி – விமர்சனம்
நடிப்பு: வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி மற்றும் பலர்
இயக்கம்: டி.கே.
தயாரிப்பு: ‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல் ராஜா
இசை: எஸ்.என்.பிரசாத்
ஒளிப்பதிவு: பி.எஸ் வினோத்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
”கிணறு வெட்ட, பூதம் கிளம்பியது போல” என்றொரு முதுமொழி தமிழில் இருக்கிறது. இதிலுள்ள ’பூத’த்தை ’காட்டேரி’யாக மாற்றி, “கிணறு வெட்ட, காட்டேரி கிளம்பி வந்தால் என்ன ஆகும்?” என்பதை ஒருவரிக் கதையாக்கி, இந்த ‘காட்டேரி’ படக்கதையை அமைத்திருக்கிறார்கள். ’அடல்ட் காமெடி – திகில் – திரில்லர்’ ஜானரில் இதன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
கதை என்னவென்றால், நாயகன் வைபவ்வின் நண்பன் ஒருவன், நைனா என்ற டானிடம் தனது கூட்டாளிகளை சிக்க வைத்துவிட்டு, தான் மட்டும் தங்கப் புதையலைத் தேடிச் செல்கிறான். அவனையும், தங்கப் புதையலையும் கண்டுபிடிப்பதற்காக வைபவ், அவரது மனைவி சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, ஆத்மிகா ஆகியோர் செல்கிறார்கள்.
வழியில், காட்டுக்குள் இருக்கும் ஒரு கிராமத்தைச் சென்றடைகிறார்கள். அங்குள்ள ஒரு வீட்டில் தங்கள் நண்பனின் புகைப்படத்தைக் காட்டி விசாரிக்கிறார்கள். அப்போது தான் அவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி தரும் ஓர் உண்மை தெரிய வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள மனிதர்கள் அனைவருமே எப்போதோ இறந்துபோய், பேய்களாக உலவிக்கொண்டிருப்பவர்கள் என்பது தான் அது.
அது தெரிந்ததும் அச்சத்தில் நடுநடுங்கும் வைபவ் & கோ, அக்கிராமத்தை விட்டு வெளியேற பகீரத முயற்சி செய்கிறார்கள். ஆனால், வெளியேற முடியாமல் மீண்டும் மீண்டும் அதே கிராமத்துக்கே வருகிறார்கள். மட்டுமல்ல, அவர்களின் உயிருக்கே உலை வைக்கக் கூடிய அதிபயங்கர ‘காட்டேரி’ சம்பந்தப்பட்ட அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன.
வைபவ் & கோ அந்த கிராமத்திலிருந்து தப்பித்தார்களா? தங்கள் நண்பனை கண்டுபிடித்தார்களா? தங்கப் புதையல் கிடைத்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது, படத்தின் மீதிக்கதை.
வைபவ் தனது வழக்கமான நடிப்பை, போதுமான அளவில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது அப்பாவியான முகத்தோற்றம், அச்சமூட்டும் திகில் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
கதாநாயகிகளாக வரும் சோனம் பஜ்வாவும், ஆத்மிகாவும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.
“நான் அழகா இருக்கேனா?” என்று சாதாரணமாகக் கேட்டுவிட்டு, டக்கென பேயாக மாறி பயமுறுத்தும் வரலட்சுமி சரத்குமார், பார்வையாளர்களை பதற வைக்கிறார்.
இயல்பான டைமிங் ஜோக்குகளால் கருணாகரனும், இயல்புக்கு மீறிய அடல்ட் காமெடி மூலம் ரவி மரியாவும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். நகைச்சுவைக்கு குட்டி கோபியும் தன்னாலான பங்களிப்பு செய்திருக்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய், மைம் கோபி, பொன்னம்பலம் உள்ளிட்ட அனைவரும் வழக்கம் போல் தங்களது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள்..
ஏற்கெனவே ‘யாமிருக்க பயமேன்’ எனும் வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குனர் டீகே, அதே அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லுமளவுக்கு இந்த ‘காட்டேரி’ படத்தை படைத்தளித்திருக்கிறார்.
பேய் படங்களுக்கு ஏற்ற இசையால் எஸ்.என்.பிரசாத்தும், ஒளிப்பதிவால் பி.எஸ்.வினோத்தும் இயக்குனருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.
‘காட்டேரி’ – பேய் ரசிகர்களுக்கும், அடல்ட் காமெடி ரசிகர்களுக்கும் பிடிக்கும்!