“இந்தியனே… காஷ்மீரின் குரலை கேள்…!”
பெல்லட் குண்டுகளால் சல்லடைபோலத் துளைக்கப்பட்ட காஷ்மீர் இளைஞர்களின் முகங்கள், மோடி அரசின் கோரமான பாசிச முகத்தை உலகுக்கு அம்பலமாக்கியிருக்கின்றன. மாதக் கணக்கில் தொடரும் ஊரடங்கு உத்தரவையும் மீறி நடந்துவரும் இந்தப் போராட்டத்தில், அதிநவீன ஆயுதங்களுடன் நிற்கும் இந்தியப் படைக்கு எதிராக, காஷ்மீர் இளைஞர்கள் கையில் ஏந்தியிருப்பது – கல். ஆதிமனிதன் கண்டறிந்த முதல் ஆயுதம். இது காஷ்மீரின் புதிய கற்காலம்.
அதிநவீன ஆயுதங்களுடன் அணிவகுத்து நிற்கும் இந்தியப் படையைக் கற்களால் எதிர்கொண்டு வீழ்த்திவரும் இளைஞர்கள் சிலரை, களத்தில் நேர்காணல் செய்திருக்கிறார் ‘அவுட்லுக்’ பத்திரிகையாளர் சவுகத் ஏமோட்டா. (அவுட்லுக், 12 செப், 2016). காஷ்மீர் மக்களின் மன உணர்வை ஒரு இலக்கியம்போலப் படம் பிடித்துக் காட்டும் அக்கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம்:
# # # # # #
பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர்கள் காஷ்மீரை ஆக்கிரமித்திருந்த காலத்தில், ஸ்ரீநகரில் உள்ள குன்றின் மீது ஒரு கோட்டையைக் கட்டியிருந்தார்கள். கோட்டையிலிருந்து முகலாயப் படை சிப்பாய்கள் வெளியே வரும்போது, காஷ்மீரி இளைஞர்கள் கையில் கற்களுடன் ஸ்ரீநகரின் தெருக்களில் திடீரென்று தோன்றுவார்கள். அந்த சிப்பாய்களின் மீது கல்லெறிவார்கள். கல்லடி தாங்காத சிப்பாய்கள் பின்வாங்கி, கோட்டைக்குள் ஓடி ஒளிவார்கள். இப்படி முகலாயஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற அந்த இளைஞர்கள்,“திலாவார்” (வீரநெஞ்சினர்) என்று மக்களால் கொண்டாடப்பட்டனர்.
நான்கு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. தொன்மை வாய்ந்த அந்தக் கல், கோபம் கொண்ட இன்றைய காஷ்மீர் இளைஞர்களின் கையிலும் விருப்பத்துக்குரிய ஆயுதமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த முகலாயக் கோட்டையிலிருந்து கல்லெறி தூரத்திலிருக்கிறது ஸ்ரீநகரின் நவ்ஹட்டா என்ற பகுதி. காஷ்மீரிலேயே கல்லெறியும் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்துவரும் பகுதி இதுதான்.
கல்லெறியும் இளைஞர்கள் பெரும்பாலும் படித்தவர்கள். நவீன தொழில்நுட்பத்தில் புழங்குபவர்கள். அவர்களுடைய உள்ளங்களில் ஏன் இத்தனை வெறுப்பு? விடுதலை குறித்த அவர்களது கருத்து என்ன? தங்கள் உயிரையே பணயம் வைக்குமாறு அவர்களைத் தூண்டுவது எது? இந்தியப் படையினர் சொல்வதுபோல அவர்கள் கூலிக்குக் கல்லெறிபவர்களா? கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சூழலில், இந்தக் கேள்விகளுக்கு பதில் கேட்டு கல்லெறியும் இளைஞர்களைத் தேடிச் சென்றது ‘அவுட்லுக்’ ஏடு. சந்தித்த நான்கு இளைஞர்களும் காமெராவின்முன் முகமூடியை அகற்ற மறுத்து விட்டனர். முழுப்பெயரை சொல்வதற்கும் மறுத்து விட்டனர்.
ஒரேவிதமான அனுபவ இழை அந்த இளைஞர்கள் அனைவரையும் இணைத்தது. எல்லோருமே இந்தியப் படையினரின் கையில் அடி, உதை, சித்திரவதைகளை அனுபவித்திருக்கின்றனர். அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். “கல்லெறிவது என்பது ‘இந்தியாவே வெளியேறு’ என்று சொல்லும் அரசியல் பிரகடனம்” என்கிறார்கள் இந்த இளைஞர்கள்.
ஒரு நல்ல வேலை, சம்பளம் என்பதெல்லாம் இந்தப் பையன்களின் மனதில் இல்லை. பாகிஸ்தானும் பிரிவினைவாத அமைப்புகளும் காசு கொடுப்பதனால்தான் இளைஞர்கள் கல்லெறிகிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கேட்டு அவர்கள் சிரிக்கிறார்கள். (பணம் கொடுக்கப்படுகிறது என்ற கூற்று அதிகாரிகளாலும் நிரூபிக்கப்படவில்லை) தாங்கள் எறியும் கற்கள் காஷ்மீரிலிருந்து இந்தியாவை உடனே விரட்டிவிடும் என்றெல்லாம் அவர்கள் நம்பவில்லை. அது தோட்டாக்களையும், பெல்லட் குண்டுகளையும்தான் வரவழைக்குமென்றும் அதன் விளைவாகத் தங்களுக்கு கண்பார்வை போய்விடும் அல்லது உயிரே போய்விடும் என்றும் அவர்களுக்குத் தெரியாமலும் இல்லை.
சில பத்திரிகைகள் இந்த இளைஞர்கள் எல்லோரும் இசுலாமிய தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றன. ஆனால், இந்த இளைஞர்களைப் போராட்டத்துக்கு வரவழைத்திருப்பது இசுலாம் அல்ல. அவர்களது முகமூடிகளில் பாக். ஆதரவு முழக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கின்றன. சிலர் பாக். ஆதரவு முழக்கங்களை எழுப்பியிருக்கிறார்கள். ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியைக்கூட உயர்த்திக் காட்டியிருக்கிறார். ஆனால், எந்த ஒரு இளைஞரும் இசுலாம் என்ற சொல்லையோ, காஷ்மீரை இசுலாமியமயமாக்குவது பற்றியோ எங்களிடம் தவறிக்கூடப் பேசவில்லை.
இனி அவர்களுடைய கதையை அவர்களுடைய சொற்களிலேயே கேட்போம்.
ஃபரூக், வயது-17, மாணவன்:
எனக்கு மூன்று சகோதரிகள். அப்பாவுக்கு வயதாகிவிட்டது. குடும்பம் என்னை நம்பித்தான் இருக்கிறது. நான் போலீசின் பார்வைக்குள் வந்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். இன்றோ நாளையோ நான் கைது செய்யப்படுவேன், அல்லது கொல்லப்படுவேன். கைது செய்யப்பட்டால் என்னை விடுவிப்பதற்கு உள்ளூர் போலீசு அதிகாரியிடம் என் அப்பாவும், சகோதரிகளும் கெஞ்ச வேண்டியிருக்கும், இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாமலில்லை.
படையினர் மீது கல்லை எறியும்போது நான் கொல்லப்படுவேன் என்று தெரிந்துதான் செய்கிறேன். கைது அல்லது மரணம் குறித்து எனக்கு பயம் வரவில்லையே. முன்னர் என் குடும்பத்தினர் என்னைத் தடுப்பார்கள். இப்போதெல்லாம் அவர்களும் தடுப்பதில்லை. மரணம் என்பதை இவ்வளவு பக்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில், வாழ்வது என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது, இல்லையா?
கடந்த 50 நாட்களில் ஒருநாள்கூட நான் இரவு வீட்டில் தங்கவில்லை. பெற்றோரும் சகோதரிகளும் என்னைப் பார்க்க வேண்டுமென ஏங்குகிறார்கள். என்ன செய்வது, விடுதலை என்பது எளிதாக கிடைப்பதில்லையே! 2010 போராட்டத்தின்போது என் நண்பர்கள் பலரை நான் இழந்திருக்கிறேன்.அப்போது எனக்கு வயது 11. இந்த ஆண்டு என் கண்முன்னே யாசிர் என்ற பையன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையெல்லாம் நேருக்குநேர் பார்க்கிறோம். போராடுவதற்கு எங்களை வேறு யாராவது ஒருவர் தூண்ட வேண்டுமா என்ன?
கல்லெறிவதற்கு யாரோ எங்களுக்குக் காசு கொடுக்கிறார்கள் என்று சொல்வது கீழ்த்தரமான அவதூறு. கேவலம், சில நூறு ரூபாய்களுக்காக எவனாவது குண்டடிபடுவானா? உண்மையைச் சொன்னால், எங்களைக் கொல்வதற்காக கூலி வாங்குபவர்கள் இந்தியப் படையினர்தான். கடைசி இந்தியச் சிப்பாய் இங்கிருந்து வெளியேறும்வரை இந்த இயக்கம் ஓயாது. நான் காஷ்மீர் விடுதலையைக் கண்ணால் பார்க்காமலேயே செத்துவிடலாம். ஆனால் இன்று இந்த இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பது எங்கள் ஒவ்வொருவரின் கடமை.
பஷீர், வயது-19, சேல்ஸ்மேன்:
கல்லெறிவது என்பது கிரிக்கெட் அல்ல. துப்பாக்கியைக் கையில் எடுக்கும் போராளிக்கும் எங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தின் இன்னொரு வடிவம் இது. பாலஸ்தீனத்தில் கல்லெறியும் போராட்டம் நடத்துபவர்களை யூதர்கள் (இசுரேல்அரசு) 20 ஆண்டு சிறை வைப்பதாகக் கேள்விப்பட்டேன். அப்படி ஒரு கொடுங்கோல் சட்டத்தைக் காஷ்மீரிலும் கொண்டுவருவார்கள். ஆனால் அவையெல்லாம் எங்களைக் கல்லைப்போல மென்மேலும் இறுகச் செய்வதற்குத்தான் பயன்படும்.
பாகிஸ்தான் தலைக்கு 500 ரூபாய் தருகிறது என்று சொல்கிறார்கள். ஐநூறு ரூபாய்க்காக நான் உயிரைக் கொடுப்பேன் என்றா நினைக்கிறீர்கள்? உயிர் என்ன அவ்வளவு மலிவா? போலீசு மீது கல்லெறிந்தால் என்ன நடக்கும்? சித்திரவதை, சிறை, குடும்பத்துக்கு நிரந்தரமாக போலீசு துன்புறுத்தல்! வெறும் 500 ரூபாய்க்காக எவனாவது இதையெல்லாம் வரவழைத்துக் கொள்வானா?
கண்ணீர்ப் புகைகுண்டிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கண் இமைகளில் பற்பசையைத் தேய்த்துக் கொள்கிறோம். நாக்குக்கு அடியில் உப்பை வைத்துக் கொள்கிறோம். அமைதியான போராட்டத்தை அவர்கள் துப்பாக்கி குண்டுகளால் ஒடுக்கும்போது எங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? நாங்கள் சொல்ல விரும்புவதை இந்தக் கற்களின் மூலமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
2008-இல் அமர்நாத் கோயிலுக்கு நிலம் கொடுக்கப்பட்டதை எதிர்த்த போராட்டத்தின்போதுதான் நான் முதன்முதலாகக் கல்லைக் கையில் எடுத்தேன். அன்று நான் ஒரு சிறுவன். அன்றிலிருந்து இந்தியாவுக்கு எதிரான எனது வெறுப்பு மென்மேலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 2008-இலும் 2010-இலும் நடந்ததைப்போல, தலைமை எங்களை விலைபேசிவிடக் கூடாதே என்பதுதான் என் கவலை.
உங்களுக்குத் தெரியுமா? என் சகோதரன் போலீசில் வேலை பார்க்கிறான். ஆனால், என்னைப் பொருத்தவரை ஒரு சி.ஆர்.பி.எப். சிப்பாய்க்கும் அவனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டு பேரும் இந்தியாவின் ஆட்கள். இந்தியா எங்களை ஏறி மிதிக்கிறது என்பதை அவனும் ஒப்புக்கொள்கிறான். ஆனால் அந்தப் பக்கம் நிற்பது என்று அவன் முடிவு செய்து விட்டான். சில நேரங்களில் எங்களுக்குள் பேச்சு தடித்து கைகலப்பாகிவிடும். ஒருவிதத்தில், இந்தியாவை எதிர்த்து நான் வீட்டிலும் போராடுகிறேன். வெளியிலும் போராடுகிறேன்.
வாமிக், வயது-15, மாணவன்
சமீபத்தில் என் அடிவயிற்றில் குண்டு பாய்ந்துவிட்டது. என்னைக் கொலை செய்வது என்ற முடிவுடன் மிகவும் பக்கத்திலிருந்து ஒரு போலீசுக்காரன் சுட்டான். அல்லாவின் அருளால் நான் விரைவில் குணமடைந்துவிட்டேன். “போராட்டத்துக்கு போகாதே”என்று அப்பாவும் அம்மாவும் என்னிடம் கெஞ்சுகிறார்கள். நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன், “நான் தியாகியாக விரும்புகிறேன்.”
கொஞ்ச நாட்களுக்கு முன் என் நண்பன் இர்ஃபானைச் சுட்டுக் கொன்றார்கள். அவனுக்கு வயது 18. அவன்மேல் ஸ்ரீநகரின் எல்லா போலீசு ஸ்டேசனிலும் சேர்த்து மொத்தம் 21 எப்.ஐ.ஆர்.கள் இருந்தன. அவனுக்கு ஒரு விதவைத் தாய், திருமண வயதில் இரண்டு சகோதரிகள். அவர்களைக் கரையேற்ற வேண்டும் என்ற கவலை இல்லாதிருந்தால், அவன் என்றைக்கோ போராளி இயக்கத்தில் சேர்ந்திருப்பான்.
எனக்கு துப்பாக்கி கிடைக்கவில்லை. அதனால் கல்லை எடுக்கிறேன். எங்களுடைய கற்கள் இந்தியப் படையினரை விரக்தியடையச் செய்துவிட்டன. அதனால்தான் தங்களுடைய கைக்கூலிகளை எங்களுக்குள் ஊடுருவ வைத்திருக்கிறார்கள்.
2010 போராட்டத்தின்போது கூலிக்கு மாரடிக்கும் பி.டி.பி. (மெகபூபா) கட்சியினர் எங்களோடு சேர்ந்துகொண்டு கல்லெறிந்தார்கள். இப்போது 2016-இல் தேசிய மாநாட்டுக் கட்சிக்காரர்கள் சிலபேர் ஊடுருவியிருக்கிறார்கள். இந்த“போஸ்ட்பெய்டு, பிரீபெய்டு கூலிப் படையினர்”காசு வாங்கிக்கொண்டு கல்லெறிகிறார்கள் என்று சொல்லட்டும். நான் ஒத்துக்கொள்கிறேன்.
பாகிஸ்தானும் ஹுரியத்தும் எங்களுக்குப் பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே, அது நகைப்புக்குரிய குற்றச்சாட்டு. உண்மையைச் சொன்னால், இந்தக் கல்லெறியும் போராட்டம் பல அரசியல்வாதிகளின் திட்டத்தில் மண்ணைப் போட்டிருக்கிறது. போராட்டம் உயிரோடு இருக்கும்வரை இவர்களால் எங்கள் மீது எந்த ஒப்பந்தத்தையும் திணிக்க முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் எந்த ஹுரியத் தலைவரையும் நேரில் பார்த்ததுகூடஇல்லை. என்னுடைய இரண்டு தாய்மாமன்கள் போலீசில் இருந்தார்கள். அதில் ஒருவரிடம் பேசியே ராஜினாமா செய்ய வைத்திருக்கிறேன்.
எதிர்விளைவுகளைச் சொல்லி சிலர் பயம் காட்டுகிறார்கள். நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். காயத்துக்கு கட்டுப் போடுவதற்காகக்கூட நான் பகல் நேரத்தில் நடமாட முடியாது. இதுதான் இங்கே நிலைமை. எதிரிகளுக்கு நான் சொல்கிறேன். “கல்லெறியும் போராட்டத்தை நிறுத்த வேண்டுமென்றால், கல்லெறியும் இளைஞர்கள் அத்தனை பேரையும் நீங்கள் கொல்ல வேண்டும். இந்தியப் படையினரால் அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள் மட்டும் இங்கே 50,000 பேர் இருக்கிறார்கள். நினைவிருக்கட்டும்!”
ரயான், வயது-15, மாணவன்:
கல்லெறிந்தே இந்தியாவை விரட்டிவிட முடியாது என்பது எனக்கும்தெரியும். “நீங்கள் எங்கள் நிலத்தை ஆள முடியும், எங்கள் மனத்தை ஒருபோதும் ஆள முடியாது”என்று இந்தியாவுக்கு நாங்கள் சொல்ல விரும்புகிறோம். ஒரு எட்டு வயதுச் சிறுவனைஅடித்தே கொல்லும் காட்சியைக் கண்ணால் பார்த்த பிறகு, எப்படி உங்களால் சாதாரணமாகச் சிந்திக்க முடியும்? 1990களைப்போல இன்று துப்பாக்கிகள் எளிதாக கிடைத்தால், இன்று ஒரு மக்கள்திரள் ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும். அன்று நடைபெற்றதைவிட வலிமையாக நடக்கும். அதில் முதல் ஆளாக நான் சேர்ந்திருப்பேன்.
காஷ்மீர் அரசியல் தலைவர்கள் அமைதியான முறையில்தான் பிரச்சினையை தீர்க்க முயன்றார்கள். ஒவ்வொரு முறையும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். டெல்லியை நம்பியது எங்கள் தலைவர்கள் செய்த தவறு. டெல்லி எங்களை எந்த அளவு அடக்க முயல்கிறதோ, அந்த அளவு அதற்கு எதிரான ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பும். விடுதலை என்பது தொலைவில் இருக்கலாம். ஆனால் எதிர்ப்புணர்வு என்பது எங்கள் இரத்தத்திலேயே இருக்கிறது. நாங்கள் நிறுத்த மாட்டோம்.
Courtesy: Vinavu.com