ஜெயலலிதாவை போல கருணாநிதியும் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நல குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த (அக்டோபர்) மாதம் 25ஆம் தேதி ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் தனது வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.

அவரை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக அவர் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) சுமார் 6 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் ராசாத்தி அம்மாள், கனிமொழி, மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன், பொன்முடி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

கருணாநிதிக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்சத்து குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவிரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதிக்கு ஊட்டச்சத்து, நீர்சத்து குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0a1b

தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அவர் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியும் காவேரி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தை அரசாட்சி செய்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் தங்களது சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையை நாடாமல், தனியார் மருத்துவமனைகளை அணுகியிருப்பது, அவர்கள் எத்தகைய “நல்லாட்சி”யை வெகுமக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்பதற்கு சான்று அளிப்பதாக உள்ளது.