கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24ஆம் தேதி நிறைவடைவதை முன்னிட்டு, புதிய சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் இரண்டு முறை பாஜகவின் எடியூரப்பாவும், ஒருமுறை மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமியும், ஒரு முறை பாஜகவின் பசவராஜ் பொம்மையும் முதலமைச்சர்களாக ஆட்சி செய்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படவுள்ளதாகவும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி துவங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏபரல் 20. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 21. மனு திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 24.
கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய மூன்று கட்சிகளிடேயே தான் முக்கிய போட்டி உள்ளது. அங்கு இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனைகளும், வடக்கு கர்நாடகத்துக்கு முக்கியத்துவம் குறைவாக அளிக்கப்படுவதாக எழுந்துள்ள பிரச்சனைகளும் அந்த மாநில முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. கர்நாடகத்துக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்சனையும் முக்கியமானதாக உள்ளது.