உங்களின் விடிவில் நிச்சயம் மார்க்ஸ் இருப்பார்!

Young Karl Marx படத்தில் ஒரு காட்சி வரும். மார்க்ஸ் எழுதிய கட்டுரையை பிரசுரிக்கும் பத்திரிகை அலுவலக வாசலில் காவல்துறை நிற்கும். அவர்களை மார்க்ஸ் கடந்து அலுவலகத்துக்குள் செல்வார். அவர் எழுதியிருந்த கட்டுரை அன்று பிரசுரிக்கப்படும் நாள். பதிவேற்றப்போகும் கட்டுரையை மார்க்ஸ்ஸின் ஒப்புதலுக்காக படித்து பார்க்க கொடுப்பார்கள். அவர் படித்து முடித்துவிட்டு, அவர்களை பார்த்து புன்னகைப்பார். அவர் எழுதிய கட்டுரையில் பல முக்கியமான விஷயங்கள் அரசுக்கு பயந்து நீக்கப்பட்டிருக்கும்.

மார்க்ஸ்ஸின் சூடான எழுத்துகளால்தான் அலுவலகம் வரை காவல்துறை வந்து நிற்கிறது என குற்றம் சாட்டுவார்கள். அரசு கொடுக்கும் நெருக்கடியில் பத்திரிகையை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்கள். அரசுக்கு பயந்து, சென்சார் செய்து கட்டுரை வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுத்தப்படலாம் என்பார் மார்க்ஸ். பத்திரிகையாளர்கள் வெகுண்டு எழுவார்கள். இத்தனைக்கும் அதுவும் ஒரு சோஷலிச பத்திரிகைதான். பத்திரிகையை குறை சொல்வதா என கேட்டு, மார்க்ஸ்ஸின் வீரிய எழுத்துகளை குறை சொல்வார்கள். பொறுமையாக நின்றிருந்த மார்க்ஸ் திரும்ப கத்துவார். இலக்கற்ற, தக்கையான சோஷலிச கட்டுரைகளையும் விரைவில் புரட்சி வர வேண்டும் என பிரார்த்திக்கும் கட்டுரைகளையும் பிரசுரிக்கும் பத்திரிகை வர வேண்டியதே இல்லை என்பார். அதற்கு பிறகு அவர் சொல்லும் வசனம் முக்கியமானது. No point in writing without ideas and concepts என்பார்.

Ideas and concepts!

எந்தவொரு சித்தாந்தமும் சிறக்கவும் நிகழ்தொடர்பில் இருக்கவும் அதற்கான ideas மற்றும் concepts உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். காலமாற்றத்தை அவதானிக்கும் கருதுகோள்களும் அவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாத சித்தாந்தம் எதுவும் நீடித்ததற்கான சரித்திரம் இல்லை. புகழ் பாடுதல் மட்டும் ஒரு சித்தாந்தத்தை இருத்தி வைத்திடாது. எது ஒன்று சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கும் என நம்புகிறோமோ அதுவே அதை வீழ்த்தும் வாய்ப்பையும் கொண்டது என்பதுதான் இயங்கியல். மார்க்ஸியம் என்பார்கள்.

தோழியிடம் ஒருமுறை பேசும்போது கூட, மார்க்ஸ்ஸுக்கும் முன்னமே கம்யூனிசத்துக்கான சிந்தனை இருந்தது என்றார். உண்மைதான். கற்பானாவாத சோஷலிசமாக இருந்தது. அதைத்தான் Utopian World என்றார்கள். எல்லாருக்கும் எல்லாமும் எந்த குறையுமின்றி இருக்க கூடிய உலகத்தை கற்பனையாக இலக்கியம் பேசிக் கொண்டே இருந்தது. மார்க்ஸ்ஸுக்கு முன்னமே கம்யூனிசத்துக்கான சிந்தனைகள் இருந்ததுதான். பின் ஏன் மார்க்ஸ் முக்கியமாகிறார்?

Ideas and concepts!

கற்பனாவாத சோஷலிசமாக இருந்த விஷயத்தை, ஓர் அற்புதமான பொன்னுலகம் என பேசப்பட்ட கம்யூனிச சமுதாயத்தை படைப்பது நிஜத்திலேயே சாத்தியம் என்றார் மார்க்ஸ். அதற்கான சாத்தியங்கள், கருதுகோள்கள், திட்ட வரைவுகள் என அறிவியல் பூர்வமாக விளக்கினார். அப்படிதான் மார்க்ஸ் முக்கியமாகிறார்.

மார்க்ஸ் கொடுத்த அணுகுமுறை முக்கியமானது. எந்தவொரு விஷயத்தையும் அதன் முரண்களை புரிந்து அணுகி பார்த்து எதிர்காலத்தையும் இயக்கத்தையும் அனுமானிப்பது. அந்த அணுகுமுறை எந்த இயங்கியலுக்குமே பிரதானம். எந்த சித்தாந்தமாக இருந்தாலும் இயங்கியல் என ஒன்று அவசியம். இவை ஏதுமின்றி இருக்கும் வரலாறை வேறாக மாற்றி பொருளாதாரம், வரலாறு என்றேல்லாம் நாம் பேசலாம். ஆனால் யதார்த்தம் முற்றிலும் வேறாகத்தான் இருக்கும்.

இன்று உலகை பாருங்கள். உலக மூலதனம் இயங்கும் பாணியை கவனியுங்கள். அது கொள்ளும் கலாசாரத்தையும் உற்பத்தி மாற்றங்களையும் நுட்பமாக்குங்கள். அங்கிருந்து தொடங்குவது மட்டும்தான் உங்களின் விடிவாக இருக்கும். அந்த விடிவில் நிச்ச்சயம் மார்க்ஸ் இருப்பார்.

RAJASANGEETHAN

(மார்ச் 14: இன்று கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்)