கரையோரம் – விமர்சனம்
மனித மனத்தின் பேராசைகளையும், அவற்றை அடைய அது நாடும் குறுக்கு வழிகளையும் விறுவிறுப்பாகச் சொல்லும் படம் ‘கரையோரம்’. அழகிய நாயகியை மையமாக வைத்து, சஸ்பென்ஸ், கிரைம், திகில், கவர்ச்சி ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து, சுவாரஸ்யமான படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
ராதாரவி பெரிய பணக்காரர். அவரது மூத்த மகள் நாயகி நிகிஷா. இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். கணேஷ் என்பவரை நிகிஷாவின் தங்கை காதலிக்கிறார். இந்த காதல் விவகாரம் ராதாரவிக்கு தெரிய வர, அவர் கணேஷை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி விடுகிறார்.
காதல் திருமணத்திற்கு அப்பா சம்மதிக்க மாட்டார் என்று நினைக்கும் நாயகி நிகிஷா, தன் தங்கையை காதலனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். சில நாட்களில் ராதாரவி இறக்கிறார். அதைத் தொடர்ந்து நிகிஷாவின் தங்கையும், அவருக்கு பிறந்த குழந்தையும் இறக்கிறார்கள்.
இதனால் சோகத்தில் இருக்கும் நிகிஷா, தன் தோழி இனியாவின் அறிவுரையைக் கேட்டு, மனநிம்மதிக்காக கடற்கரையோரம் உள்ள தனி பங்களாவுக்குப் போய் தங்குகிறார். இந்த பங்களாவிற்கு அருகில் உள்ள கலங்கரை விளக்கத்தில் தனியே வசித்துவரும் வஷிஸ்டா என்ற இளைஞருடன் நிகிஷாவிற்கு பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.
இந்நிலையில் நிகிஷாவுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைக்கிறது. அவர் இப்போது காதலித்துக் கொண்டிருக்கும் வஷிஸ்டா என்ற இளைஞர் 10 ஆண்டுகளுக்கு முன்பே மர்மமான முறையில் இறந்து போனவர் என்பதுதான் அந்த தகவல்.
வஷிஸ்டா இறந்துவிட்டார் என்றால் தினமும் தன்னிடம் வந்து பேசிவிட்டுப் போவது யார் என்று குழம்பும் நிகிஷா, இது குறித்து தன் தோழி இனியாவிடம் கூறுகிறார். அவர் நிகிஷாவை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துப்போகிறார்.
அந்த மருத்துவரோ நிகிஷா ஒரு மனநோயாளி என்று கூறி மாத்திரைகள் கொடுக்கிறார். இதை ஏற்க மறுக்கும் நிகிஷா, இனியாவுடன் போய் போலீஸ் அதிகாரியை சந்தித்து, வஷிஸ்டா பற்றி விசாரிக்கிறார். வஷிஸ்டா இறந்து பத்து வருடங்கள் ஆகிறது என்பதை அந்த போலீஸ் அதிகாரியும் உறுதிப்படுத்துகிறார். இதனால் மேலும் குழப்பம் அடைகிறார் நிகிஷா.
உண்மையில் அந்த வஷிஸ்டா யார்? அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? நிகிஷாவை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
நாயகி நிகிஷாவைச் சுற்றியே கதை நகர்வதால், அவர் நடிப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகம். அதை நன்கு உணர்ந்து, சிறப்பாக நடித்திருக்கிறார். அதே நேரத்தில் மனதை அள்ளும் கவர்ச்சியாலும் ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார்.
நாயகியின் பாசமிகு தோழியாக வரும் இனியா, கிளைமாக்சில் திடுதிப்பென மாறுபட்ட முகம் காட்டி ரசிகர்களை திடுக்கிட வைக்கிறார்.
வஷிஸ்டா, கணேஷ் என இரண்டு கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள். இருவரும் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே வந்து ரசிகர்களிடம் கைதட்டலை அள்ளுகிறார் சிம்ரன். அதிரடி ஆக்ஷனில் மிரட்டியிருக்கிறார். ஒரு ஹீரோவுக்கு நிகராக இவருடைய கதாபாத்திரத்தையும், ஆக்ஷன் காட்சியையும் உருவாக்கியிருப்பது ரசிப்புக்கு உரியது.
யூகிக்கவே முடியாத சஸ்பென்ஸ் கதையை கிரைம் திரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெகதீஷ் குமார். திரில்லரோடு, உறுத்தல் இல்லாத வகையில் கிளாமரையும் கலந்து இவர் கதையை நகர்த்திச் செல்லும் விதம் ரசிகர்களுக்கு செம விருந்து.
சுஜித் ஷெட்டியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவாளர் ஜெய் ஆனந்த், கடலோர அழகை மட்டுமல்ல, நாயகி நிகிஷாவின் காந்த அழகையும் கேமராவில் அள்ளிக்கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.
‘கரையோரம்’ – கிக்கான திக்… திக்…!