காந்தாரா – விமர்சனம்

நடிப்பு: ரிஷப் ஷெட்டி, சப்தமி கவுடா, கிஷோர், அச்சுயுத் குமார், ப்ரமோத் ஷெட்டி, ஷனில் குரு, பிரகாஷ் துமிநாட் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ரிஷப் ஷெட்டி

இசை: பி.அஜனீஷ் லோக்நாத்

ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ்.காஷ்யப்

தயாரிப்பு: ‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ விஜய் கிரகந்தூர்

வெளியீடு: ’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரபு

மக்கள் தொடர்பு: யுவராஜ்

ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘காந்தாரா’ என்ற கன்னடப்படம் இப்போது திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும், விமர்சகர்களின் பெரும் பாராட்டையும் பெற்று, வசூலை தாறுமாறாக வாரிக் குவித்து  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கன்னடத்தில் பெற்ற இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, சுடச்சுட  தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் டப் செய்து வெளியிட்டிருப்பதால், இம்மொழிகளின் ரசிகர்களது ஆதரவும் பெருகிவருகிறது.

பன்னாட்டுத் திரைப்படத் தகவல் மற்றும் மதிப்பீட்டு இணையதளமான IMDb-யில் பத்துக்கு 9.6 மதிப்பெண்களைப் பெற்று உள்ளூர் சினிமாக்காரர்கள் முதல் உலக சினிமாக்காரர்கள் வரை அனைவரையும் அசர வைத்திருக்கிறது ‘காந்தாரா’. அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்ற சமீபத்திய படங்கள்: ஜெய்பீம் (8.9), சர்பேட்டா பரம்பரை (8.6), பொன்னியின் செல்வன் (8.4),  KGF-2 (8.4), RRR (8.0). ஒரு கன்னடப் படமாக வெளியாகி, வாய்வழிப் பகிர்தல் மூலம் ரசிகர்களை ஈர்த்து Pan-India சந்தையில் பொறிகளைக் கிளப்பும் ‘காந்தாரா’ படத்தின் கதை என்னவென்றால் –

1847ஆம் ஆண்டு மன்னர் ஒருவர் நிம்மதியைத் தேடி எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் ஒரு காட்டுக்குள் செல்கிறார். அங்குள்ள கிராம மக்களின் காவல் தெய்வச் சிலையையும், அதை அவர்கள் வழிபடும் முறையையும் பார்த்து நிம்மதி அடைந்து, அம்மக்களுக்கு 100 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்குகிறார். 1970ஆம் ஆண்டு அம்மன்னரின் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவன், அந்த நிலத்தை மீட்க முயலுகிறான். அதை விரும்பாத காவல் தெய்வத்தின் ஆக்ரோஷம் காரணமாக அவன் இறந்துபோகிறான். பின்னர் 1990-ல் தேவேந்திர சுட்டூரு (அச்சுயுத் குமார்) என்ற பண்ணையார் அந்நிலத்தை அபகரிக்க நினைக்கிறான். அதே நேரம் அரசின் வனத்துறை, காப்புக் காட்டை அளந்து, அதிலிருந்து மக்களை வெளியேற்றப் போவதாக அறிவித்து, நடவடிக்கைகளைத் துவக்குகிறது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அக்கிராம மக்கள் ஆளாகும் நிலையில், அவர்கள் வணங்கும் காவல் தெய்வம் என்ன செய்தது என்பது ‘காந்தாரா’ படத்தின் மீதிக்கதை.

0a1b

நிலப் பிரச்சனையில் காவல் தெய்வத் தொன்மத்தைச் சேர்த்து இந்த கதையை எழுதி இயக்கியிருப்பதோடு, காடுபெட்டு சிவா என்ற நாயகனாகவும் நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. சாமியாடும் குடும்பத்தில் பிறந்தாலும், குடி, நண்பர்களுடன் கும்மாளம், எருமைகளின் கம்பலா போட்டி, வேட்டையாடுதல் என்று யாருக்கும் அடங்காதவராக சுற்றிக்கொண்டிருப்பது, தங்களது நிலத்திற்குப் பிரச்சனை என்றதும் முதல் ஆளாக அரசாங்கத்தை எதிர்ப்பது என்ற சாகச நாயகப் பாத்திரத்தில் வரும் ரிஷப் ஷெட்டி, இறுதியில் சாமி ஆடும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கையே அதிரச் செய்து விடுகிறார்.

 லீலா என்ற கதாபாத்திரத்தில் நாயகனின் காதலியாகவும், வனத்துறை காவலராகவும் வரும் சப்தமி கவுடா, ரிஷப் ஷெட்டிக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். முதலில் கடுமையும், பின்னர் இணக்கமும் காட்டும் வனத்துறை அதிகாரி முரளிதர் கதாபாத்திரத்தில் வரும் கிஷோர், வழக்கம் போல் தான் ஏற்றிருக்கும் வேடத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். கிராம மக்களின் நிலத்தை அபகரிக்க முயலும் தேவேந்திர சுட்டூரு என்ற பண்ணையார் கதாபாத்திரத்தில் வரும் அச்சுயுத் குமார், காட்டுத்தனமாக கத்தாமல், அமைதியாக சிரித்துக்கொண்டே செய்யும் வில்லத்தனம் அமர்க்களம். நாயகனின் நண்பர்களாகவும், கிராமத்து மக்களாகவும் வருபவர்கள் என அனைவரும் மண்ணுக்கு ஏற்ற முகங்களாக பொருத்தமாக இருப்பது சிறப்பு.

நிலத்தைக் காக்கப் போராடும் கிராம மக்கள், அவர்களின் வாழ்வியல் ஆகியவற்றோடு காவல் தெய்வ தொன்மத்தையும் இணைத்து திரைக்கதை அமைத்திருப்பது, படம் பார்ப்பவர்களுக்கு புத்தம்புது அனுபவத்தைத் தருகிறது. நொடிப் பொழுதும் போரடிக்காமல் படத்தை நகர்த்திச் சென்றுள்ள இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்குப் பாராட்டுகள். ஆனால், கதையில் எடுத்துக்கொண்ட முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வாக பண்ணையாரியத்துக்கு எதிராக கார்ப்பரேட் முதலாளிய அரசு மீது நம்பிக்கை வைக்கச் சொல்வது இயக்குனரின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.

அரவிந்த் எஸ்.காஷ்யப்பின் ஒளிப்பதிவும், பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையமைப்பும் படத்துக்கு 100 மடங்கு பலம் சேர்க்கிறது.

‘காந்தாரா’ – அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!