விமல், வரலட்சுமி முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘கன்னி ராசி’

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் பி.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார்.
பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன்.
இப்படம் குறித்து பேசிய இயக்குநர், “படத்தில் நாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர்வீட்டிற்கு நாயகி வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்துக்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். விமலும்,வரலட்சுமியும் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். படம் முழுக்க விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்கிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவு – எஸ் செல்வகுமார்
இசை – விஷால் சந்திரசேகர்
படத்தொகுப்பு – ராஜா முகமது
பாடல்கள் – யுகபாரதி
நடனம் – கலா மற்றும் விஜி