கண்நீரா – விமர்சனம்

நடிப்பு: கதிரவென், சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என்கேஆர் மற்றும் பலர்
இயக்கம்: கதிரவென்
ஒளிப்பதிவு: ஏகணேஷ் நாயர்
இசை: ஹரிமாறன்
தயாரிப்பு: ’உத்ரா புரொடக்ஷன்ஸ்’ எஸ்.ஹரி உத்ரா – மோர் 4 புரொடக்சன்
பத்திரிகை தொடர்பு: புவன் செல்வராஜ்
இரண்டு காதல் ஜோடிகளின் முரண்பட்ட உணர்ச்சிப் போராட்டங்களை மையமாகக் கொண்டு, மலேசியத் திரைக்கலைஞர்களின் அற்புதமான பங்களிப்புடன், முழுக்க முழுக்க மலேசியாவிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டு, ’காதலர் தின’ சிறப்புத் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது ‘கண்நீரா’.

நாயகன் மித்ரனும் (கதிரவென்), நாயகி ஸ்ரீஷாவும் (சாந்தினி கவுர்) உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். எனினும், அவர்களுக்கிடையில் நெஞ்சில் குத்திய நெருஞ்சி முள் போல் தீராப்பிரச்சனை ஒன்று இருந்து வருகிறது…
காதலி ஸ்ரீஷாவை விரைவில் திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழ ஆசைப்படுகிறார் மித்ரன். ஆனால் ஸ்ரீஷாவோ, தொழில் ரீதியிலும், வாழ்க்கையிலும் நல்ல நிலைக்கு உயர்ந்த பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் திருமணம் பற்றி மித்ரன் பேச்செடுக்கும் போதெல்லாம் தட்டிக்கழித்து தள்ளிப் போடுகிறார். அவர் எப்போதும் தன் வாழ்க்கை, தன் முன்னேற்றம் என்று சுயநலமாக மட்டுமே யோசிப்பதால், மித்ரனுக்கு அவர் மீதான காதல் குறையத் தொடங்குகிறது…
இந்நிலையில், தனது அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேரும் மற்றொரு நாயகியான நீராவின் (மாயா கிளம்மி) நடவடிக்கைகளால் ஈர்க்கப்படுகிறார் மித்ரன். சுயநலமின்றி பழகுவது, குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற நீராவின் உயரிய பண்புகளால் அவர் மீது மித்ரன் காதல் கொள்கிறார்…
இதனால் ஸ்ரீஷா உடனான காதலை முறித்துக்கொள்ளும் மித்ரன், நீராவிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால், விமானியாகப் பணியாற்றும் அருண் (நந்தகுமார்) என்பவரை ஏற்கெனவே காதலித்துக் கொண்டிருக்கும் நீரா, மித்ரனின் காதலை ஏற்க மறுத்து நிராகரித்து விடுகிறார். இதன் பின்னரும் நீரா மீதான காதலை கைவிடாமல் நம்பிக்கையுடன் தொடருகிறார் மித்ரன்.
இறுதியில் என்ன நடந்தது? நீரா யாரை கரம் பிடித்தார் – அருணையா? மித்ரனையா? மித்ரனால் கைவிடப்பட்ட ஸ்ரீஷா என்ன ஆனார்? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘கண்நீரா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் மித்ரனாக கதிரவென் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் ‘பார்க்கிங்’ விவகாரம் காரணமாக வில்லனோ என்று சந்தேகப்பட வைத்து, பின்னர் மெல்ல மெல்ல முதிர்ச்சியான நாயக அந்தஸ்துக்கு உயரும் மித்ரன் கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி, அதற்குத் தேவையான நடிப்பை லாவகமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கதிரவென்.
மற்றொரு நாயகனாக அருண் கதாபாத்திரத்தில் நந்தகுமார் நடித்திருக்கிறார். வேலை பறிபோனவுடன் தாழ்வு மனப்பான்மை கொள்வது, சொந்த பந்தங்கள் இருக்கும் மலேசியாவை விட்டு வர மாட்டேன் என்று காதலி சொன்னவுடன் சட்டென உணர்ச்சி வசப்பட்டு கோபப்படுவது என ஒரு சாதாரண இளைஞனை திரையில் கொண்டுவந்து தத்ரூபமாக நிறுத்தியிருக்கிறார் நந்தகுமார்.
நாயகி ஸ்ரீஷாவாக சாந்தினி கவுர் நடித்திருக்கிறார். பார்க்க அழகாக இருக்கிறார். காதலனுக்கு விசுவாசமாக இருக்கும் அதேவேளை, கேரியருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நீரா கதாபாத்திரத்தில் மாயா கிளம்மி நடித்திருக்கிறார். காதலோடு குடும்ப உறவுகளையும் நேசிக்கும் கதாபாத்திரத்தில் குறைவின்றி நிறைவாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
யதார்த்தத்துக்கு நெருக்கமான காதலை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் முன்வைக்கும் கவுசல்யா நவரத்தினத்தின் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, உணர்ச்சிகளை அழுத்தமாக பிரதிபலிக்கும் ஆழமான வசனங்கள் எழுதி, போரடிக்காமல் விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார், நாயகன் மித்ரனாக நடித்திருக்கும் இயக்குநர் கதிரவென். இரண்டு காதல் ஜோடிகளின் முரண்பட்ட உணர்ச்சிப் போராட்டங்களை, மிக குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி, படத்தை திருப்பங்களுடன் அருமையாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்களை ஆவலோடு எதிர்பார்க்க வைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகள்.
இசையமைப்பாளர் ஹரிமாறன் இசையில், கௌசல்யா.என் வரிகளில், பாடல்கள் அனைத்தும் பிரமாதம். பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பொருத்தமாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஏகணேஷ் நாயரின் கேமரா, மலேசியா மற்றும் அதன் சுற்றுப்புற அழகை அள்ளிக்கொண்டு வந்து பருகக் கொடுத்திருக்கிறது.
‘கண்நீரா’ – என்றென்றும் நினைவில் நிற்கும் புதுமையான காதல் கதை! கண்டு களிக்கலாம்!
ரேட்டிங் – 3/5