“ஈழத்தமிழருக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது!” – சேரன்
“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன் கூறினார்.
மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘கன்னா பின்னா’. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சேரன், தங்கர்பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டார்கள்.
விழாவின் சேரன் பேசியதாவது:
சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது. ‘கபாலி’ போன்ற படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகிறதே தவிர மற்ற பட தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில், உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும். ஆன்லைனாக இருக்கட்டும். ஆனால் அது முறையாக இருக்க வேண்டும். திருட்டுத்தனமாக இருக்கக் கூடாது. பலரின் உழைப்பையும், தயாரிப்பாளரின் பணத்தையும் சுரண்டும் தீமைக்கு நாம் துணை போகக் கூடாது.
தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள். போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கண்டு கொள்ளவதில்லை. ஏனெனில் நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. ஏன், மத்திய – மாநில அரசுகள்கூட இதை பற்றி கவலைப்படுவதில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது. ஆனா, அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க.
இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ‘ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம்’ என அருவருப்பாக இருக்கிறது.
இவ்வாறு சேரன் பேசினார்.
https://youtu.be/n3WqrM-nifY