“ஓடிடி-யில் எல்லா படங்களையும் வாங்குவதில்லை”: ‘கண்மணி பாப்பா’ படவிழாவில் நடிகர் ஆரி
ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய்தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பங்கேற்றோர் பேசிய பேச்சு விவரம்:
நடிகர் ஆரி:
ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு நல்ல துவக்கம் இருக்கும். இந்தவிழாவில் முதலில் தயாரிப்பாளரை அழைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள், அது நல்ல ஆரம்பம். ஏனென்றால் தயாரிப்பாளர் தான் எல்லாம். சிறிய படங்கள் விழா என்றால் உடனடியாக வருவேன். பிக்பாஸுக்குப் பிறகு கலந்துகொள்ளும் முதல் ஆடியோ விழா இது. இப்படத்தின் ஹீரோ தமன் தான், நான் இங்கு வரக்காரணம். நம் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் ஒரு முக்கியமான படம். அதேபோல் கண்மணி பாப்பா படமும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது சந்தோசமாக இருக்கிறது. மானஸ்வி குழந்தையை நிறைய படங்களில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவைப் புரிந்துகொண்டு தயாரிக்க வரவேண்டும். ஓடிடி-யில் எல்லாப்படங்களையும் வாங்குவதில்லை. இந்தப்படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் நல்ல லாபத்திற்கு வியாபாரம் செய்திருக்கிறார். அது பெரிய சந்தோஷம். சாய்தேவ் பின்னணி இசையில் நன்றாக வேலை செய்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீமணி இந்தப்படம் மட்டுமல்ல… இன்னொரு கதையும் சிறப்பாக வைத்திருக்கிறார் என்றார்கள். இந்தப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும். தமனும் நானும் ஒரே பிரச்சினையை சந்தித்தவர்கள். தமனுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கு. 2022-ஆம் ஆண்டு எல்லாருக்கும் நல்லதாக அமையவேண்டும்.
தயாரிப்பாளர் கே.ராஜன்:
இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் நேற்று என்னை இந்தப்படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தார். சின்னப்படம் என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என்றேன். “நீங்கள் வந்தால் கலை கட்டும்” என்றார்கள். எனக்கு இந்தப்படம் கல்லா வேண்டும் என்று தான் ஆசை. இந்தப்படத்தின் டைட்டில் எவ்வளவு அழகான தமிழ் டைட்டில்.
தமிழ் பேசும் நாயகிகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். தயவு செய்து ஹீரோக்களும், இயக்குநர்களும் மனது வைக்கவேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் நடிகைகள் தேர்வில் தயாரிப்பாளரின் முடிவு எதுவுமே இல்லை. ஜெய்பீம் படத்தில் அந்தக் கேலண்டர் விசயம் எப்படி தயாரிப்பாளருக்கு தெரியாமல் இருக்கும்? என்று சிலர் கேட்டார்கள். உண்மை என்னவென்றால் தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்பில் எதுவுமே தெரியாது. பணம் தேவை என்பதை மட்டும் தான் தயாரிப்பாளர்களிடம் கேட்பார்கள். எது சின்னபடம் எது பெரிய படம் என்றால்… என்னைப் பொறுத்தவரையில் பிகில் சின்னப்படம். அது நஷ்டம். எந்தப்படம் வெற்றிப்பெறுகிறதோ அதுதான் பெரிய படம். முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் நன்றாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர் படம் எடுக்க வராவிட்டால் ஹீரோவிற்கு சம்பளம் இல்லை. லைட்பாய்க்கு வேலை இல்லை. ஒரு படத்தின் ஹீரோயின் பொட்டு மேட்சிங்காக இல்லை என்று ஒரு மணி நேரம் ஷுட்டிங்கை இழுத்தடித்தார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும். ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இந்தப்படத்தின் ஹீரோ அடுத்தப்படத்தில் பெரியாளாக வந்தால் அதற்கு காரணம் இயக்குநர் தான். இயக்குநர்கள் 35 நாட்களுக்குள் சின்னப்படங்களின் ஷுட்டிங்கை முடிக்க வேண்டும். கேரளாவில் ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்டதிற்காக அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் அந்த நடிகருக்கு ரெட்கார்ட் போட்டார்கள். அந்த ஆண்மை இங்குள்ள சங்கத்திற்கு இருக்கிறதா?
அடுத்தவாரம் நான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். அவரிடம் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டும் மானியம் கொடுங்கள் என்று சொல்லப்போகிறேன். இந்த கண்மணி படம் மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப்படம் பெரிய வெற்றிப்பெற வாழ்த்துகள்.
தயாரிப்பாளர் சி.வி.குமார்:
கண்மணி பாப்பா படத்தை நான் பார்த்துவிட்டேன். படம் நல்லாருந்தது. ரொம்ப குவாலிட்டியா பண்ணிருந்தாங்க. இயக்குநர் திறமையாக எடுத்திருந்தார். தமன் நன்றாக நடித்திருந்தார். குட்டிப்பெண் மானஸ்வி சிறப்பாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் நன்றாக வேலை செய்திருக்கிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.
ஹீரோ தமன்:
இது ஒரு இசையமைப்பாளர் அசம்பிள் செய்த படம் இது. ஸ்ரீமணி சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் கதை பிடித்துப் போனதால் பெரிதாகவே பண்ணலாம் என்று சொன்னார். இந்தப்படம் மிகச்சிறப்பான திரைக்கதையோடு வந்திருக்கும் படம் இது. வழக்கமான பேய்படம் போன்று இப்படம் இருக்காது. இயக்குநர் ஸ்ரீமணி அருமையாக இயக்கியிருக்கிறார். நான் நடித்ததில் இப்படம் தான் பெஸ்ட். இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும்” என்றார்.
இசையமைப்பாளர் சாய் தேவ்:
இது எனக்கு முக்கியமான நாள். நான் நிறைய படங்களில் வேலை பார்த்தாலும் இது எனக்கு மிக முக்கியமான படம். இந்தப்படத்தில் நான் இசை அமைப்பாளர் மட்டும் அல்ல. எக்ஸிகியூட்டிவ் புரோடியூசரும் கூட. இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு மிகவும் நன்றி. இயக்குநர் பெரிய ஹார்ட்வொர்க்கர். அவருக்கு இந்தப்படம் ரொம்ப முக்கியம். ஹீரோ தமன் எங்கள் பேமிலியாகி விட்டார். மற்றும் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி.
இயக்குனர் ஸ்ரீமணி:
இறைவனுக்கு நன்றி. மழை மற்றும் டிராபிக் எல்லாவற்றையும் தாண்டி கண்மணி பாப்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் சிறிதாக துவங்கியது. ஆனால் எல்லாரின் உழைப்பாலும் பெரிய படமாக மாறி விட்டது. இந்தப்படத்தை நான் தமிழில் மட்டும் தான் எடுத்தேன். ஆனால் சுந்தர் சார் இந்தி, தெலுங்கு என மூன்றாக்கியிருக்கிறார். கொடைக்கானல் பகுதியில் மானஸ்வி, தமன் சகோ உள்பட என்னோட டீம் எல்லாரும் நிறைய கஷ்டப்பட்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. மிக முக்கியமாக இசை அமைப்பாளர் சாய்தேவ் இந்தப்படத்திற்காக நிறைய உதவிகள் செய்தார். எல்லாருடைய வாழ்க்கைக்கும் பெரிய சப்போர்ட் தேவை. எனக்கு என் மனைவி தான் பெரிய சப்போர்ட் அவருக்கு பெரிய நன்றி.